பக்கம் - 526 -


1) ஹிஜ்ரத்துக்கு முன்பு நபி (ஸல்) அவர்களின் வீடு மக்காவில் இருந்தது. அதில் நபி (ஸல்), அவர்களின் மனைவி கதீஜா பின்த் குவைலிது (ரழி) இருந்தார்கள். நபி (ஸல்) தங்களது 25வது வயதில் 40 வயது நிரம்பிய கதீஜா (ரழி) அவர்களை மணமுடித்தார்கள். அவர்கள் உயிருடன் இருக்கும் வரை நபி (ஸல்) வேறு யாரையும் மணமுடிக்கவில்லை. கதீஜா (ரழி) அவர்களின் மூலமாக நபி (ஸல்) அவர்களுக்குப் பல ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர். ஆண் குழந்தைகள் யாரும் உயிருடன் இல்லை. பெண் பிள்ளைகள் ஜைனப், ருகய்யா, உம்மு குல்சூம், ஃபாத்திமா (ரழி) ஆகியோராகும்.

ஹிஜ்ரத்துக்கு முன்பாக அபுல் ஆஸ் இப்னு ரபீஆவுக்கு ஜைனபை நபி (ஸல்) மணமுடித்து வைத்தார்கள். இவர் ஜைனபுடைய சிறிய தாயாரின் மகனாவார். ருகையா, உம்மு குல்சூம் ஆகிய இருவரையும் ஒருவர் பின் ஒருவராக உஸ்மானுக்கு மணமுடித்து வைத்தார்கள். பத்ரு, உஹுதுப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஃபாத்திமாவை அலீக்கு மணமுடித்துத் தந்தார்கள். ஃபாத்திமாவுக்கு ஹசன், ஹுசைன், ஜைனப், உம்மு குல்சூம் என்ற நான்கு பிள்ளைகள் இருந்தனர்.

மற்ற முஃமின்களை விட நபி (ஸல்) அவர்களுக்குப் பல காரணங்களை முன்னிட்டு நான்குக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்வது ஆகுமானதாக இருந்தது. நபி (ஸல்) பதிமூன்று திருமணங்கள் செய்திருந்தார்கள். அதில் கதீஜாவும், ‘ஏழைகளின் தாய்’ என புகழப்பட்ட ஜைனப் பின்த் குஸைமாவும் நபி (ஸல்) உயிருடன் வாழ்ந்த காலத்திலேயே மரணித்து விட்டார்கள். ஏனைய ஒன்பது மனைவிகள் உயிருடன் இருக்கும்போது நபி (ஸல்) மரணமானார்கள். மற்ற இரண்டு பெண்களை மணமுடித்து, பிறகு பிரிந்து விட்டார்கள்.

2) ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரழி) - கதீஜா (ரழி) அவர்கள் இறந்து ஒரு மாதத்திற்குப் பின் நபித்துவத்துடைய பத்தாம் ஆண்டு ஷவ்வால் மாதத்தில் இவர்களை மணமுடித்தார்கள். ஒன்றுவிட்ட சகோதரன் மகன் சக்ரான் இப்னு அம்ருக்கு இவரை மணமுடித்து தரப்பட்டிருந்தது. அவன் மரணத்திற்குப் பின் நபி (ஸல்) ஸவ்தாவை மணமுடித்தார்கள். இவர்கள் ஹிஜ்ரி 54, ஷவ்வால் மாதம் மதீனாவில் மரணமடைந்தார்கள்.

3) ஆயிஷா பின்த் அபூபக்ர் (ரழி) - ஸவ்தா (ரழி) அவர்களை மணமுடித்து ஓராண்டுக்குப் பின் நபித்துவத்துடைய 11 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதத்தில், ஹிஜ்ரத்துக்கு இரண்டாண்டுகள், ஐந்து மாதங்களுக்கு முன் ஆயிஷாவை அவரது 6 வது வயதில் மணமுடித்தார்கள். ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த பின் ஏழு மாதங்கள் கழித்து ஆயிஷாவின் 9 வது வயதில் அவருடன் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். ஆயிஷா (ரழி) மட்டுமே நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் கன்னிப் பெண்ணாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களை மிக அதிகம் நேசித்தார்கள். இச்சமுதாயப் பெண்களில் அவர்களே அதிக மார்க்க ஞானமுள்ளவர்களாகத் திகழ்ந்தார்கள்.

ஏனைய உணவுகளை விட ‘ஸரீத்’ என்ற உணவுக்குரிய சிறப்பைப் போன்று ஏனைய பெண்களை விட ஆயிஷா (ரழி) மிகச் சிறப்புப் பெற்றிருந்தார்கள். ஹிஜ்ரி 57 அல்லது 58 ஆம் ஆண்டு ரமழான் பிறை 17ல் மரணமானார்கள். பகீயில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

4) ஹஃப்ஸா பின்த் உமர் (ரழி) - இவரது கணவர் குனைஸ் இப்னு ஹுதாஃபா சஹ்மி (ரழி). பத்ர்-உஹுதுக்கு இடைப்பட்ட காலத்தில் மரணமாகிவிடவே, இவர் விதவையானார். இத்தா முடிந்து, ஹிஜ்ரி 3, ஷஅபான் மாதத்தில் இவரை நபி (ஸல்) மணமுடித்துக் கொண்டார்கள். ஹஃப்ஸா (ரழி) ஹிஜ்ரி 45ல், ஷஅபான் மாதம் தமது 60வது வயதில் மரணமானார்கள். இவர்களையும் பகீஃயில் அடக்கம் செய்யப்பட்டது.