பக்கம் - 75 -
இந்த எச்சரிக்கை முடிந்ததும் மக்கள் எதுவும் கூறாமல் கலைந்து சென்றார்கள். ஆனால், அபூ லஹப் மட்டும் குரோதத்துடன் நபி (ஸல்) அவர்களை எதிர்கொண்டான். “நாள் முழுவதும் உனக்கு நாசமுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களைக் கூட்டினாயா?” என்று கூறினான். அவனைக் கண்டித்து “அழியட்டும் அபூ லஹபின் இரு கரங்கள்; அவனும் அழியட்டும்...” என்ற 111வது அல்குர்ஆன் அத்தியாயம் இறங்கியது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாமிவுத்திர்மிதி, ஃபத்ஹுல் பாரி)

இவ்வாறாக ஏகத்துவக் குரல் ஓங்கியது. நபி (ஸல்) தங்களது நெருங்கிய உறவினர்களிடம் நீங்கள் இத்தூதுத்துவத்தை (நான் அல்லாஹ்வின் தூதர் என்பதை) ஏற்றால்தான் நம்மிடையே உறவு நீடிக்கும். இதைத்தவிர அரபுகள் கொண்டிருக்கும் குடும்ப உறவுகளெல்லாம் அல்லாஹ்வின் எச்சரிக்கையின் முன்னால் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும் என்று கூறித் தங்களது நிலையை மிகத் தெளிவாக அறிவித்துவிட்டார்கள்.

இவ்வாறே அழைப்புப் பணியின் குரல் மக்காவின் நாலாதிசைகளிலும் எதிரொலித்தது.

“ஆகவே, உங்களுக்கு ஏவப்பட்டதை(த் தயக்கமின்றி) நீங்கள் (அவர்களுக்கு) விவரித்து அறிவித்துவிடுங்கள். மேலும், இணைவைத்து வணங்குபவர்களைப் புறக்கணித்து விடுங்கள்” (அல்குர்ஆன் 15:94)

என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கி அருளினான். அதைத் தொடர்ந்து நபி (ஸல்) நிராகரிப்பவர்களின் சபைகளில் துணிந்து நின்று அல்லாஹ்வின் பக்கம் அழைக்கத் தொடங்கினார்கள். முன் சென்ற நபிமார்கள் தங்களது சமுதாயத்தினருக்குக் கூறி வந்த,

நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை. (அல்குர்ஆன் 7:59)

என்ற வசனத்தை அவர்களுக்கு ஓதிக் காண்பித்தார்கள். நிராகரிப்பவர்களின் கண் முன்னே கஅபாவின் முற்றத்தில் பட்டப்பகலில் பகிரங்கமாக அல்லாஹ்வை வணங்கத் தொடங்கினார்கள்.

நபி (ஸல்) ஏகத்துவ அழைப்புக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்தது. ஒருவர் பின் ஒருவராக அல்லாஹ்வின் மார்க்கத்தைத் தழுவினார்கள். அதனால் இஸ்லாமை ஏற்றவர்களுக்கும் அவர்களது குடும்பத்தில் இஸ்லாமை ஏற்காதவர்களுக்குமிடையே சண்டை சச்சரவுகள் தோன்றின. நாளுக்கு நாள் இஸ்லாமின் வளர்ச்சியைக் கண்ட குறைஷிகள் கடுங்கோபத்தில் மூழ்கினர்.

ஹாஜிகளைத் தடுத்தல்

இக்காலகட்டத்தில் குறைஷியருக்கு மற்றொரு கவலையும் ஏற்பட்டது. அதாவது, பகிரங்க இஸ்லாமிய அழைப்புப் பணி தொடங்கிய சில நாட்களிலேயே ஹஜ்ஜின் காலம் நெருங்கி வந்தது. ஹஜ்ஜுக்கு வரும் அரபுக் கூட்டத்தினர் முஹம்மதின் அழைப்பினால் மனம் மாறிவிடலாம். எனவே, ஹாஜிகளை சந்தித்து முஹம்மதைப் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக குறைஷியர்கள் வலீத் இப்னு முகீராவிடம் ஒன்று கூடினர். குறைஷிகளிடம் அவன் “இவ்விஷயத்தில் நீங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தைக் கூறுங்கள். இல்லையென்றால் ஒருவன் கூற்றுக்கு மற்றவன் கூற்று மறுப்பாகி ஒருவர் மற்றவரை பொய்யராக்கிக் கொள்வீர்கள்” என்று கூறினான். அம்மக்கள் “நீயே ஓர் ஆலோசனையைக் கூறிவிடு. நாங்கள் அதற்கேற்ப நடந்து கொள்கிறோம்” என்றனர். அவன் “இல்லை! நீங்கள் கூறுங்கள், அதைக் கேட்டு நான் ஒரு முடிவு செய்கிறேன்” என்றான்.