பக்கம் - 77 -
இந்த முடிவுக்கு சபையினர் உடன்பட்டதும் அதை நிறைவேற்றத் தயாரானார்கள். மக்கள் ஹஜ்ஜுக்கு வரும் வழிகளில் அமர்ந்து கொண்டு தங்களைக் கடந்து செல்பவர்களிடம் நபி (ஸல்) அவர்களைப் பற்றி எச்சரித்து தாங்கள் முடிவு செய்திருந்ததைக் கூறினார்கள்.

ஆனால், அதை இலட்சியம் செய்யாத நபி (ஸல்) ஹாஜிகளின் தங்குமிடங்களிலும் பிரபலமான உக்காள், மஜன்னா, துல்மஜாஸ் ஆகிய சந்தைகளிலும் மக்களைத் தேடிச் சென்று அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பின் அபூலஹப் நின்றுகொண்டு “இவர் சொல்வதை ஏற்காதீர்கள். நிச்சயமாக இவர் மதம் மாறியவர்; பொய்யர்” என்று கூறினான்.

இவர்களின் இவ்வாறான செயல்கள் அரபியர்களிடம் மென்மேலும் இஸ்லாம் பரவக் காரணமாக அமைந்தன. ஹஜ்ஜை முடித்துச் சென்ற அரபியர்கள் நபி (ஸல்) அவர்களையும் அவர்கள் எடுத்துரைத்த இஸ்லாமையும் தங்களது நாடுகளில் எடுத்துரைத்தார்கள்.

அழைப்புப் பணியில் இடையூறுகள்

ஹஜ் காலம் முடிந்தது. இறையழைப்புப் பணியை அதன் ஆரம்ப நிலையிலேயே கருவறுத்திட வேண்டுமென குறைஷியர்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டனர். அவற்றின் சுருக்கம் பின்வருமாறு:

1) பரிகசித்தல், இழிவுபடுத்துதல், பொய்ப்பித்தல், எள்ளி நகையாடுதல்:

இதுபோன்ற இழிசெயல்களால் முஸ்லிம்களை மனதளவில் பலவீனப்படுத்த எண்ணினர். அற்பமான வசைச்சொற்களால் நபி (ஸல்) அவர்களை ஏசினர். சில வேளைகளில் பைத்தியக்காரர் என்றனர்.

(நமது நபியாகிய உங்களை நோக்கி) “வேதம் அருளப்பட்டதாகக் கூறும் நீங்கள் நிச்சயமாகப் பைத்தியக்காரர்தான்” என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன் 15:6)

சில வேளைகளில் நபி (ஸல்) அவர்களை “சூனியக்காரர்’ என்றும் “பொய்யர்’ என்றும் கூறினர்.

(அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய ஒரு தூதர், (ஆகிய நீங்கள்) அவர்களி(ன் இனத்தி)லிருந்தே அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்டு, “இவர் மிகப் பொய் சொல்லும் சூனியக்காரர்தான்” என்று (உங்களைப் பற்றி) நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 38:4)

வஞ்சகத்தனத்தையும் சுட்டெரிக்கும் பார்வைகளையும் நபி (ஸல்) அவர்கள் மீது வீசினர்.

(நபியே!) நிராகரிப்பவர்கள் நல்லுபதேசத்தைக் கேட்கும்போதெல்லாம், அவர்கள் தங்களுடைய பார்வைகளைக் கொண்டே உங்களை வீழ்த்தி விடுபவர்களைப் போல் (கோபத்துடன் விரைக்க விரைக்கப்) பார்க்கின்றனர். அன்றி, (உங்களைப் பற்றி) நிச்சயமாக, அவர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 68:51)

நபி (ஸல்) அவர்கள் தங்களது எளிய தோழர்களுடன் அமர்ந்திருக்கும்போது அவர்களைக் கேலி செய்வார்கள்.