பக்கம் -18-
முழுமையாக ஒதுக்கி வைத்தல்
தீய தீர்மானம்
மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போனதால் இணைவைப்பவர்களிடையே குழப்பம்
மேன்மேலும் வலுத்தது. ஹாஷிம் கிளையாரும், முத்தலிப் கிளையாரும் நிலைமை எதுவாம்னும்
நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்தே தீருவது என்பதில் உறுதியாக இருந்ததைக் கண்ட
இணைவைப்பவர்கள் அனைவரும் “முஹஸ்ஸப்’ என்ற பள்ளத்தாக்கிலுள்ள கினானா கிளையாரின்
இடத்தில் ஒன்றுகூடி ஆலோசித்து, பல தீர்மானங்களைப் போட்டனர்.
அவையாவன: ஹாஷிம் மற்றும் முத்தலிப் கிளையாரிடம் திருமண உறவு, கொடுக்கல் வாங்கல்,
அவர்களுடன் அமர்வது, அவர்களுடன் பழகுவது, அவர்களது வீட்டுக்குச் செல்வது,
அவர்களிடம் பேசுவது, அவர்களுக்குக் கருணை காட்டுவது, ஹாஷிம் கிளையார்களின் சமரச
பேச்சை ஏற்பது போன்ற எந்த செயலும் செய்யக் கூடாது. முஹம்மதை அவர்கள் நம்மிடம்
ஒப்படைக்கும் வரை நாம் இதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தீர்மானம் எழுதினர்.
இவ்வுடன்படிக்கையை “பகீழ் இப்னு ஆமிர் இப்னு ஹாஷிம்’ என்பவன் எழுதினான். நபி (ஸல்)
அவர்களின் சாபத்திற்கு ஆளான இவனது கை சூம்பிவிட்டது. (ஸஹீஹுல் புகாரி)
இந்த உடன்படிக்கை எழுதப்பட்டு கஅபாவில் தொங்க விடப்பட்டது. ஹாஷிம், முத்தலிபின்
கிளையால் அபூலஹபைத் தவிர ஏனைய நிராகரிப்பவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைவரும்
“அபூதாலிப் கணவாயில்’ ஒதுக்கி வைக்கப்பட்டனர். இது நபித்துவத்தின் ஏழாம் ஆண்டு
முஹர்ரம் மாதம் தலைப்பிறையில் நடந்தது.
“கணவாய் அபூதாலிபில்’ மூன்று ஆண்டுகள்
இக்காலக்கட்டத்தில் அவர்களிடம் இருப்பிலிருந்த உணவுகளும், தானியங்களும் முடிந்து
விட்டன. இணைவைப்பவர்கள் மக்காவுக்கு வரும் உணவுகளையெல்லாம் முந்திச் சென்று
வாங்கிக் கொள்வார்கள். இவர்கள் உண்ணுவதற்கு ஏதுமின்றி இலைகளையும், தோல்களையும்
சாப்பிடும் இக்கட்டுக்கு ஆளாயினர். பசியினால் பெண்களும், சிறுவர்களும் அழும்
குரல்கள் கணவாய்க்கு வெளியிலும் கேட்கும். மிக இரகசியமாகவே தவிர எந்த உதவியும்
அவர்களுக்குக் கிடைக்காது. மதிப்புமிக்க மாதங்களில்தான் தங்களின் தேவைகளுக்குரிய
சாமான்களை வாங்கிக்கொள்ள முடிந்தது. மக்காவுக்கு வரும் வியாபாரக்
கூட்டங்களிடமிருந்து மக்காவிற்கு வெளியில்தான் அவர்களால் பொருட்கள் வாங்க
முடிந்தது. இருந்தும் இவர்களால் வாங்க முடியாத அளவிற்கு மக்காவாசிகள்
அப்பொருட்களின் விலைகளை உயர்த்தினர்.
சில சமயம் ஹகீம் இப்னுஹிஸாம் தனது மாமி (தந்தையின் சகோதரி) கதீஜாவிற்காக கோதுமை
மாவை எடுத்துச் செல்வார். ஒருமுறை அபூஜஹ்ல் வழிமறித்து, அவர் எடுத்துச் செல்வதைத்
தடுத்துக் கொண்டிருந்தான், அபூபுக்த தலையிட்டு அபூஜஹ்லிடமிருந்து அவரைக்
காப்பாற்றினார்.
நபி (ஸல்) அவர்களின் மீது அபூதாலிபுக்கு எப்போதும் எதிரிகளைப் பற்றிய அச்சம்
இருந்தது. அதற்காக நபி (ஸல்) அவர்களைத் தனது விரிப்பில் தூங்கச் சொல்வார். அனைவரும்
தூங்கியதற்குப் பின், தனது பிள்ளைகள் அல்லது சகோதரர்கள் அல்லது தனது சிறிய,
பெரியதந்தையின் பிள்ளைகள் ஆகியோல் யாரையாவது ஒருவரை நபியவர்களைப் படுக்க வைத்த தனது
விரிப்பில் மாற்றி உறங்க வைத்துவிட்டு, நபி (ஸல்) அவர்களை வேறு விரிப்பில்
படுக்கவைத்து விடுவார்கள். மக்கள் தூங்குவதற்கு முன் கொலைகாரர் யாராவது நபி (ஸல்)
அவர்களைக் கண்காணித்தால், அவர்களைத் திசை திருப்புவதற்காக இவ்வாறு செய்வார்கள்.
இந்நிலையிலும் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் ஹஜ்ஜுடைய காலங்களில் வெளியே
புறப்பட்டு, மக்களைச் சந்தித்து, அவர்களை இஸ்லாமின் பக்கம் அழைப்பார்கள்.
இந்நேரத்தில் அபூலஹப் செய்து வந்த செயல்கள் பற்றி முன்பே நாம் கூறியிருக்கின்றோம்.
கிழிக்கப்பட்டது தீர்மானம்!
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இப்படியே உருண்டோடின. குறைஷிகள் இந்த ஒப்பந்தத்தை
எழுதினாலும் அவர்களில் சிலர் இந்த ஒப்பந்தத்தை ஆரம்பத்திலிருந்து வெறுத்தே வந்தனர்.
இவ்வாறு வெறுத்தவர்கள்தான் இப்பத்திரத்தை கிழித்தெறிய முயற்சி எடுத்தனர்.
இம்முயற்சி நபித்துவத்தின் பத்தாவது ஆண்டு முஹர்ரம் மாதத்தில் நடந்தேறியது.
ஹிஷாம் இப்னு அம்ர் என்பவர்தான் இதற்குக் காரணமாக இருந்தார். அவர் இரவில் மறைமுகமாக
ஹாஷிம் கிளையாருக்கு உணவு வழங்கி வந்தார். ஒரு நாள் அவர் ஸுஹைர் இப்னு அபூ உமைய்யா
மக்ஜூமீ என்பவரிடம் வந்தார். இவரது தாய் அப்துல் முத்தலிபின் மகள் ஆத்திகாவாகும்.
ஹிஷாம், “ஜுஹைரே! நீ சாப்பிடுகிறாய், குடிக்கிறாய். உனது தாய்மாமன்கள் எவ்வாறு
கஷ்டத்திலிருக்கிறார்கள் என்பது உனக்கு நன்றாகத் தெரியும். இது உனக்கு சந்தோஷமாக
இருக்கிறதா?” என்று கேட்டார். அதற்கு ஜுஹைர் “நான் ஒருவன் என்ன செய்ய?” என்று
கூறினார். அதற்கு ஹிஷாம் “உனக்கு உதவ ஒருவர் இருக்கிறார்” என்று கூற, “யார் அவர்?”
என்று வினவினார். “அது நான்தான்” என்று கூறினார். அதற்கு ஜுஹைர் “நீ மூன்றாவது
ஒருவரைத் தேடு” என்று கூறினார்.
முத்இம் இப்னு அதீ என்பவரிடம் ஹிஷாம் சென்று அப்து மனாஃபின் மக்களான ஹாஷிம்,
முத்தலிப் இவ்விருவரின் குடும்ப உறவுகளை (இரத்த பந்தங்களை) நினைவூட்டி “இவர்களுக்கு
அநியாயம் செய்யக் குறைஷிகளுக்கு நீ உடந்தையாக இருக்கிறாயே” என பழித்துக் கூறியவுடன்
“நான் ஒருவனாக இருந்து என்னால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார். அதற்கு
ஹிஷாம் “உன்னுடன் இரண்டாமவரும் இருக்கிறார்” என்று கூற, அதற்கு “அவர் யார்?” என்று
கேட்டார். அதற்கு ஹிஷாம் “நான்தான்” என்று கூறினார். முத்இம் “மூன்றாவது ஒருவரும்
நமக்கு வேண்டும்” என்று கூற, ஹிஷாம் “ஆம்! மூன்றாமவரும் இருக்கிறார். அவர்தான்
ஜுஹைர் இப்னு அபூ உமைய்யா” என்று கூறினார். உடனே முத்இம் ஷாமிடம் “நான்காம்
ஒருவரையும் தேடுங்கள்” என்றார்.
ஹிஷாம், அபுல் புக்தயிடம் வந்து முத்இமிடம் பேசியது போன்றே பேசவே “இதற்கு யாராவது
உதவிக்கு இருக்கிறார்களா?” என்று அவர் வினவினார். அப்போது “ஹிஷாம் ஆம்! ஜுஹைர்,
முத்இம், நான் ஆகியோர் உம்முடன் இருக்கிறோம்” என்றார்.
ஹிஷாம், ஸம்ஆவிடம் வந்தார். அவருக்கும் ஹாஷிம் குடும்பத்திற்கும் உள்ள உறவுகளையும்,
உரிமைகளையும் பற்றி அவரிடம் கூறவே “நீர் அழைக்கும் இக்காரியத்தில் வேறு யாராவது
இருக்கிறார்களா?” என்று கேட்க, ஹிஷாம் “ஆம்!” என்ற கூறி அனைவரது பெயர்களையும்
கூறினார்.
இவர்கள் அனைவரும் ஹஜுனுக்கு அருகில் ஒன்றுகூடினர். பிறகு, ஒப்பந்தப் பத்திரத்தை
கிழிக்க வேண்டும் என்று முடிவு செய்தபோது “இதை நானே முதலில் செய்வேன். இதைப் பற்றி
நான்தான் முதலில் பேசுவேன்” என்றார் ஜுஹைர்.
காலையில் விடிந்தவுடன் அனைவரும் தங்களது சபைக்கு வந்தனர். ஜுஹைர் ஒரு முழு ஆடையை
அணிந்து வந்திருந்தார். அவர் கஅபாவை ஏழு முறை வலம் வந்துவிட்டு மக்களை நோக்கி
“மக்காவாசிகளே! நாம் சாப்பிடுகிறோம். ஆடைகளை அணிந்து கொள்கிறோம். ஹாஷிமின்
குடும்பமோ அழிந்து கொண்டிருக்கிறது. அவர்களிடம் யாரும் விற்பதும் கிடையாது,
வாங்குவதும் கிடையாது. இது தகுமான செயலா? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உறவை
துண்டிக்கும்படியான, அநியாயமான, இந்த ஒப்பந்தப் பத்திரம் கிழித்தெறியப்படும் வரை
நான் உட்கார மாட்டேன்” என்று கூறினார். பள்ளியின் ஓரத்தில் அமர்ந்திருந்த அபூஜஹ்ல்
“நீ பொய்யுரைக்கிறாய். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது கிழிக்கப்படாது” என்றான்.
ஸம்ஆ, “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீதான் மிகப்பெரியபொய்யன். நீ இதை எழுதியபோதே
அதில் எங்களுக்கு விருப்பமில்லை” என்று கூறினார். அபுல் புக்த “ஆம்! ஸம்ஆ
உண்மையைத்தான் கூறுகிறார். அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களும் எங்களுக்கு
விருப்பமானதில்லை. அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவுமில்லை” என்று கூறினார். முத்இம்,
“ஆம்! நீங்கள் இருவரும் உண்மையைத் தான் கூறுகிறீர்கள். இதைத் தவிர யார் என்ன
கூறினாலும் அவர் பொய்யரே! இந்த ஒப்பந்தப் பத்திரத்திலிருந்தும் அதில்
எழுதப்பட்டுள்ளவற்றிலிருந்தும் அல்லாஹ்வுக்காக நாங்கள் விலகிக் கொள்கிறோம்” என்று
கூறினார். ஷாமும் இதுபோன்றே கூறி முடித்தார். இவ்வாறு ஒருவர் பின் ஒருவராக
கூறியதும் இதைக் கேட்டுக் கொண்டிருந்த அபூஜஹ்ல் “இது இரவிலேயே பேசி முடிவு
செய்யப்பட்டது. வேறு எங்கோ இதைப் பற்றி ஓர் ஆலோசனை நடந்திருக்கிறது” என்று
கூறினான். பள்ளியின் ஓரத்தில் அபூதாலிப் அமர்ந்து இக்காட்சிகளைப் பார்த்துக்
கொண்டிருந்தார்.
அப்பத்திரத்தில் அல்லாஹ்வின் பெயரைத் தவிர அதில் எழுதப்பட்ட அனைத்தையும் கரையான்
தின்று அழித்துவிட்டது. இதை அல்லாஹ் தனது நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்திருந்தான்.
நபி (ஸல்) அவர்களும் முன் கூட்டியே அதை அபூதாலிபிடம் கூறியிருந்தார்கள். அபூதாலிப்
குறைஷிகளிடம் “எனது சகோதரனின் மகன் இப்படியெல்லாம் கூறியிருக்கிறார். அவர் பொய்யராக
இருந்தால் அவருக்கும் உங்களுக்குமிடையில் நாங்கள் வழிவிட்டு விடுகிறோம். அவர்
உண்மையாளராக இருந்தால் நீங்கள் எங்களுக்கு அநியாயம் செய்வதிலிருந்தும் எங்களது
உறவுகளைத் துண்டிப்பதிலிருந்தும் விலகிட வேண்டும்” என்று கூறினார். அதற்கவர்கள்,
“நிச்சயமாக நீர் ஒரு நீதமான விஷயத்தை முன் வைத்தீர்” என்று கூறினர்.
அபூஜஹ்லுக்கும் மற்ற கூட்டத்தார்களுக்குமிடையில் பேச்சுவார்த்தை முடிந்தபோது
முத்இம் கஅபாவிற்குள் அதைக் கிழிப்பதற்காகச் சென்று பார்த்தபோது
“பிஸ்மிக்கல்லாஹும்ம’ என்று ஆரம்பத்தில் எழுதப்பட்டிருந்ததையும், “அல்லாஹ்’ என்று
எழுதப்பட்ட இடங்களையும் தவிர மற்ற அனைத்தையும் கரையான் அத்துவிட்டிருந்தது.
பிறகு முழுவதுமாக அப்பத்திரம் கிழித்தெறியப்பட்டது. நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன்
இருந்தவர்களும் கணவாயிலிருந்து வெளியேறி வந்தனர். இணைவைப்பவர்கள் முஹம்மது (ஸல்)
அவர்களின் நபித்துவத்தின் மிகப்பெரியஅத்தாட்சியைப் பார்த்தனர். ஆனால் அவர்களது
இதயமோ...
அவர்கள் எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும் (அதனைப்) புறக்கணித்து, “இது சகஜமான
சூனியம் தான்” என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன் 54:2)
என்று அல்லாஹ் கூறியதைப் போன்றே இருந்தது. அதாவது, அல்லாஹ்வின் அத்தாட்சிகளைப்
புறக்கணித்து இவர்கள் நிராகரிப்பைத்தான் அதிகமாக்கிக் கொண்டனர். (ஸஹீஹுல் புகாரி,
இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆத்)