பக்கம் -19-
குறைஷிகளின் கடைசிக் குழு
தாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கணவாயிலிருந்து வெளியேறிய நபி (ஸல்) முன்னர்
போலவே அழைப்புப் பணியைச் செய்து கொண்டிருந்தார்கள். குறைஷிகள் உறவுகளைத்
துண்டிப்பதை விட்டுவிட்டாலும், முஸ்லிம்களுக்குத் தொந்தரவு தருவது, அல்லாஹ்வின்
வழியை விட்டு மக்களைத் தடுப்பது என்ற தங்களது பழைய பாட்டையிலேயே நடந்து
கொண்டிருந்தனர். அபூதாலிப் எண்பது வயதை கடந்தும் தன்னால் முடிந்த அளவு நபி (ஸல்)
அவர்களை பாதுகாத்து வந்தார். கடினமான சோதனைகளால் குறிப்பாக, ஒதுக்கி வைக்கப்பட்ட
காலத்தில் ஏற்பட்ட இன்னல்களால் மிகவும் வலுவிழந்து தளர்ந்திருந்தார்.
கணவாயிலிருந்து வெளியேறிய சில மாதங்களிலேயே கடினமான நோய்வாய்பட்டார்.
இதைக் கண்ட இணைவைப்பவர்கள், அபூதாலிபின் மரணத்திற்குப் பிறகு அவரது சகோதரன் மகனான
முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஊறு விளைவிப்பது தங்களுக்கு அரபிகளின் மத்தியில் கெட்ட
பெயரை ஏற்படுத்திவிடும் என்று பயந்து தங்களுக்கு விருப்ப மில்லையெனினும் நபி (ஸல்)
அவர்களின் வார்த்தைகளில் சிலவற்றை ஒப்புக்கொண்டு அபூதாலிபின் முன்னிலையில் நபி
(ஸல்) அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்பதற்காக ஒரு குழுவை தயார் செய்தனர்.
அபூதாலிபிடம் வந்த இறுதி குழு இதுதான்.
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்கள்: அபூதாலிப் நோய்வாய்ப்பட்ட போது குறைஷிகள்
தங்களுக்குள் இவ்வாறு பேசிக் கொண்டனர்: “ஹம்ஜா, உமர் இஸ்லாமைத் தழுவிவிட்டனர்.
முஹம்மதைப் பற்றி அனைத்து குறைஷி குலத்தவருக்கும் தெரிந்துவிட்டது. நாம்
அபூதாலிபிடம் செல்வோம்; தனது தம்பி மகனை அவர் கட்டுப்படுத்தட்டும்; நம்மிடமும்
அவருக்காக ஏதாவது ஒப்பந்தத்தை வாங்கிக் கொள்ளட்டும். இல்லையெனில், மக்கள் நமது
கட்டுப்பாட்டுக்குக் கீழ் இல்லாமல் மீறி விடுவார்கள் என நாம் அஞ்சவேண்டியுள்ளது”
மற்றொரு அறிவிப்பில் வருவதாவது: இந்தக் கிழவர் இறந்த பின் அவருக்கு (முஹம்மதுக்கு)
ஏதாவது ஆகிவிட்டால் அரபுகள் “முஹம்மதுடைய பெரியதந்தை இறந்தப் பின் முஹம்மதுக்குக்
கெடுதிகள் செய்கின்றனர். அவர் உயிருடன் இருக்கும்போது இவரை விட்டுவிட்டார்கள்”
என்று குறை கூறுவார்களோ என நாம் அஞ்சவேண்டியுள்ளது என தங்களுக்குள் பேசிக்
கொண்டனர்.
உத்பா, ஷைபா, அபூஜஹ்ல், உமைய்யா, அபூசுஃப்யான் இப்னு ஹர்ஃப் போன்ற குறைஷித்
தலைவர்களில் சிலர் தங்களது கூட்டங்களில் உள்ள இருபத்தைந்து நபர்களைச்
சேர்த்துக்கொண்டு அபூதாலிபிடம் பேசுவதற்காக வந்தனர். அவர்கள் “அபூதாலிபே! நீங்கள்
எங்களிடம் மதிப்புமிக்கவர்; உங்களுக்கு ஏற்பட்டுள்ள (நோயின்) நிலை உங்களுக்கு
நன்றாகவே தெரியும். உங்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என நாங்கள் பயப்படுகிறோம். மேலும்,
எங்களுக்கும், உங்களது சகோதரன் மகனுக்கும் மத்தியிலுள்ள நிலை உங்களுக்கு நன்றாகவே
தெரியும். ஆதலால், அவரை இப்போது அழைத்து அவரிடமிருந்து எங்களுக்குச் சில
வாக்குறுதிகளை வாங்கிக் கொடுங்கள். எங்களிடமிருந்தும் அவருக்குச் சில வாக்குறுதிகளை
வாங்கிக் கொடுங்கள். எங்களை எங்களது மார்க்கத்தில் விட்டு விடட்டும். அவரை அவரது
மார்க்கத்தில் விட்டு விடுகிறோம். எங்களது மார்க்கத்தை அவர் குறை கூறாமல்
இருக்கட்டும்” எனக் கூறினார்கள்.
அபூதாலிப் நபி (ஸல்) அவர்களை அழைத்து வரச்செய்து “எனது சகோதரன் மகனே! இதோ இவர்கள்
உனது கூட்டத்தில் சிறப்புமிக்கவர்கள். உனக்காகவே இங்கு ஒன்றுகூடி இருக்கிறார்கள்.
அவர்கள் உனக்கு சில வாக்குறுதிகளைத் தருவார்கள். உன்னிடம் சில வாக்குறுதிகளைக்
கேட்கிறார்கள். உங்களில் யாரும் எவருக்கும் இடையூறு தரக்கூடாது” என்று அவர்கள்
கூறியதை அப்படியே கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நான் இவர்களுக்கு ஒரு சொல்லை
முன்வைக்கிறேன். அதை இவர்கள் மொழிந்தால் இவர்கள் அரபியர்களை ஆட்சி செய்யலாம். அரபி
அல்லாதவர்களும் இவர்களுக்குப் பணிந்து நடப்பார்கள்” என்று கூறினார்கள்.
மற்றொரு அறிவிப்பில்: அபூதாலிபை நோக்கி “நான் இவர்களை ஒரே வார்த்தையில் இணைக்க
விரும்புகிறேன். அதை இவர்கள் கூறும்போது அரபிகள் இவர்களுக்குப் பணிந்து
நடப்பார்கள்; அரபி அல்லாதவர்கள் இவர்களுக்கு வரி செலுத்துவார்கள்” என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
மற்றொரு அறிவிப்பில் வருவதாவது: “எனது தந்தையின் சகோதரரே! அவர்களுக்கு ஏற்றமான
ஒன்றை நோக்கி அவர்களை நான் அழைக்க வேண்டாமா?” என்று நபி (ஸல்) கேட்க, “நீ அவர்களை
எதன் பக்கம் அழைக்கிறாய்?” என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவர்கள்
ஒரு வாக்கியத்தைச் சொல்ல வேண்டும் என்றுதான் அழைக்கிறேன். அந்த வாக்கியத்தால்
அரபியர்கள் அவர்களுக்குப் பணிவார்கள்; அரபி அல்லாதவர்களையும் அவர்கள் ஆட்சி
செய்யலாம்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் வருவதாவது: “ஒரே ஒரு சொல்லை அவர்கள்
சொல்லட்டும். அதனால் அவர்கள் அரபியர்களை ஆட்சி செய்யலாம்; அரபி அல்லாதவர்களும்
அவர்களுக்குப் பணிந்து நடப்பார்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள். இதை கூறி
முடித்தவுடன் இவ்வளவு பயன்தரும் சொல்லை எப்படி மறுப்பது? என்ன பதில் கூறுவது? என்று
தெரியாமல் அனைவரும் திகைத்து அமைதி காத்தனர். பிறகு அபூஜஹ்ல் “அது என்ன சொல்? உமது
தந்தையின் மீது சத்தியமாக! நாங்கள் அதையும் கூறுகிறோம். அதுபோன்று பத்து
சொற்களையும் கூறுகிறோம்” என்று கூறினான். அப்போது நபி (ஸல்) அவர்கள்
“லாயிலாஹஇல்லல்லாஹ் என்று கூறி அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் அனைத்தையும்
விட்டு விலகிவிட வேண்டும்” என்று கூறினார்கள். உடனே அவர்கள் தங்கள் கைகளைத் தட்டிக்
கொண்டு “முஹம்மதே! என்ன? கடவுள்களை எல்லாம் ஒரே கடவுளாக ஆக்கப் பார்க்கிறாயா? உனது
பேச்சு மிக ஆச்சரியமாக இருக்கின்றதே!” என்றார்கள்.
பிறகு அவர்களில் சிலர் சிலரிடம் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயம்
(வாக்குறுதிகளில்) நீங்கள் விரும்பும் எதையும் இவர் உங்களுக்குக் கொடுக்க மாட்டார்;
நீங்கள் எழுந்து செல்லுங்கள். அல்லாஹ் உங்களுக்கும் அவருக்கும் மத்தியில் தீர்ப்பு
அளிக்கும் வரை உங்களது மூதாதையரின் மார்க்கத்திலேயே நிலைத்திருங்கள்” என்று
கூறினார்கள். அதற்குப் பின் அனைவரும் பிரிந்து சென்றுவிட்டனர்.
இவர்கள் விஷயத்தில்தான் இந்த வசனங்கள் அருளப்பட்டன:
“ஸாத் - நல்லுபதேசங்கள் நிறைந்த இந்தக் குர்ஆனின் மீது சத்தியமாக! (இது நம்மால்தான்
அருளப்பட்டது. இதனை) நிராகரிப்பவர்கள் பெரும் குரோதத்திலும் விரோதத்திலும் (மூழ்கி)
இருக்கின்றனர்.
இவர்களுக்கு முன்னர், (இவ்வாறு இருந்த) எத்தனையோ வகுப்பாரை நாம்
அழித்திருக்கின்றோம். (வேதனை வந்த சமயத்தில்) அவர்கள் எல்லோரும் உதவி தேடிக்
கூச்சலிட்டார்கள். அது (வேதனையிலிருந்து) தப்பித்துக் கொள்ளக்கூடிய நேரமாக
இருக்கவில்லை.
(அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய ஒரு தூதர் (ஆகிய நீங்கள்)
அவர்களிலிருந்தே அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சயப்பட்டு, “இவர் மிகப் பொய்
சொல்லும் சூனியக்காரர்தான்” என்று (உங்களைப் பற்றி) அந்த நிராகரிப்பவர்கள்
கூறுகின்றனர்.
“என்ன! இவர் (நம்) தெய்வங்கள் அனைத்தையும் (பொய்யெனக் கூறி, வணக்கத்திற்குரியவன்)
ஒரே இறைவன்தான் என்று ஆக்கிவிட்டாரா? மெய்யாகவே, இது ஓர் ஆச்சரியமான விஷயம்தான்”
(என்று கூறி,) அவர்களிலுள்ள தலைவர்கள், (மற்றவர்களை நோக்கி, “இவரை விட்டு) நீங்கள்
சென்றுவிடுங்கள். உங்கள் தெய்வங்களை ஆராதனை செய்வதில் நீங்கள் உறுதியாக இருங்கள்.
(உங்கள் தெய்வங்களைக் கைவிடும்படி கூறும்) இவ்விஷயத்தில் ஏதோ (சுயநலந்தான்)
கருதப்படுகின்றது” என்று கூறிக் கொண்டே சென்றுவிட்டனர்.
“முன்னுள்ள வகுப்பாலும், இதனை நாம் கேள்விப்பட்டதில்லை. இது (இவரால்) புனையப்பட்டதே
அன்றி வேறில்லை” என்றும், “நம்மைவிட்டு இவருக்கு மட்டும்தானா (வேத) உபதேசம்
இறக்கப்பட்டு விட்டது” என்றும் (கூறினார்கள்). (அல்குர்ஆன் 38:1-8) (இப்னு ஹிஷாம்,
திர்மிதி, முஸ்னது அபீ யஃலா, இப்னு ஜரீர்)
துயர ஆண்டு
அபூதாலிப் மரணம்
அபூதாலிப் நோய் அதிகமாகி நபித்துவத்தின் பத்தாவது வருடம் ரஜப் மாதத்தில்
கணவாயிலிருந்து வெளியேறி சரியாக ஆறு மாதத்திற்குப் பின் மரணம் எய்தினார்.
(அல்முக்தஸர்)
சிலர் ரமழான் மாதத்தில் அன்னை கதீஜாவின் மரணத்திற்கு மூன்று நாள்களுக்கு முன்
மரணமானார் என்றும் கூறுகின்றனர்.
அபூதாலிபுக்கு மரணம் சமீபமானபோது நபி (ஸல்) அவரிடம் சென்றார்கள். அப்போது அங்கு
அபூஜஹ்லும் இருந்தான். அபூதாலிபிடம் நபி (ஸல்) அவர்கள் “எனது தந்தையின் சகோதரரே!
நீங்கள் “லாஇலாஹஇல்லல்லாஹ்’ என்று கூறுங்கள். நான் அல்லாஹ்விடம் இவ்வார்த்தையின்
பொருட்டால் உங்களுக்காக வாதிடுவேன்” என்று கூறினார்கள். ஆனால், அங்கிருந்த
அபூஜஹ்லும், அப்துல்லாஹ் இப்னு அபூ உமய்யாவும் “அபூதாலிபே! அப்துல் முத்தலிபின்
மார்க்கத்தையா நீர் புறக்கணிக்கப் போகின்றீர்?” என்று தொடர்ந்து அவரிடம் இதையே
கூறிக் கொண்டிருந்தனர். இறுதியில் அபூதாலிப் “நான் அப்துல் முத்தலிபின்
மார்க்கத்தில்தான் (இருக்கிறேன்)” என்று கூறிவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள்
“எனக்கு தடை வராமல் இருக்கும்வரை அல்லாஹ்விடம் உங்களுக்காகப் பாவமன்னிப்புக்
கோருவேன்” என்று கூறினார்கள். ஆனால்,
“இணைவைத்து வணங்குபர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கோ நம்பிக்கையாளர்களுக்கோ
தகுமானதல்ல் அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரியே!
அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தான் என்று இவர்களுக்குத் தெளிவானதன் பின்னர் (எவ்வாறு
அவர்களுக்கு மன்னிப்புக் கோரலாம்?) (அல்குர்ஆன் 9:113)
(நபியே!) நிச்சயமாக நீங்கள் இவர்களில் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்த
உங்களால் முடியாது. எனினும், தான் விரும்பியவர்களை அல்லாஹ் நேரான வழியில்
செலுத்துகின்றான். நேரான வழியில் செல்லத் தகுதியுடையவர் யார் என்பதை அவனே
நன்கறிவான்!” (அல்குர்ஆன் 28:56) (ஸஹீஹுல் புகாரி)
என்ற இரு வசனங்களை அல்லாஹ் இறக்கி இணைவைப்பவர்களுக்காக பாவ மன்னிப்புக் கோருவதைத்
தடை செய்துவிட்டான். (ஸஹுல் புகாரி)
நபி (ஸல்) அவர்களுக்கு அபூதாலிப் கொடுத்து வந்த பாதுகாப்பு மற்றும் உதவியைப் பற்றி
நாம் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. காரணம், அவர் குறைஷித் தலைவர்கள் மற்றும்
மூடர்களின் தாக்குதல்களிலிருந்து இஸ்லாமிய அழைப்புப் பணியைப் பாதுகாத்து, அதற்கு
ஓர் அரணாக விளங்கினார். ஆனாலும் தங்களது மூதாதையரின் மார்க்கத்திலேயே அவர்
நிலைத்திருந்து விட்டதால் மறுமையின் வெற்றியை அடையவில்லை.
ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் “நீங்கள் உங்களது பெரியதந்தை அபூதாலிபிற்கு என்ன
பயனளிப்பீர்கள். அவர் உங்களைப் பாதுகாத்தார். உங்களுக்காகக் கோபம் கொண்டார்” என்று
அப்பாஸ் (ரழி) கேட்டபோது, “அவர் நரகத்தின் குறைந்த ஆழமுள்ள பகுதியில் இருப்பார்.
நான் இல்லை என்றால் நரகத்தின் அடித்தளத்தில் சென்றிருப்பார்” என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
நபி (ஸல்) கூற தான் கேட்டதாக அபூ ஸஈது அல்குத் (ரழி) அறிவிப்பதாவது: நபி (ஸல்)
அவர்களிடம் அவர்களது பெரியதந்தை அபூதாலிபைப் பற்றி பேசப்பட்டபோது “மறுமையில்
அவருக்கு எனது சிபாரிசு பலனளிக்கலாம். அதனால் அவரது கரண்டைக்கால் வரையுள்ள
நெருப்பின் ஆழத்தில் அவர் வைக்கப்படுவார்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)