பக்கம் -38-

போர் புரிய அனுமதி

முஸ்லிம்கள் மதீனாவில் கடுமையான ஆபத்துகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், குறைஷிகள் தங்களின் வழிகேட்டிலிருந்து விலகிக் கொள்ளாமல் வம்புத்தனத்தையும், அழிச்சாட்டியத்தையும் தொடர்ந்து கொண்டே சென்றனர். இதன் காரணமாக அல்லாஹ் முஸ்லிம்களுக்கு நிராகரிப்பவர்களை எதிர்த்துப் போர் புரியலாம் என்று அனுமதி வழங்கினான். ஆனால், போரைக் கடமையாக்கவில்லை. நிராகரிப்பவர்கள் சண்டையிட்டால், அவர்களை எதிர்த்து போர் புரிய மட்டும் அனுமதிக்கப்பட்டது.

(நிராகரிப்பவர்களால்) அநியாயத்தில் சிக்கி, போருக்கு நிர்பந்திக்கப்பட்ட (நம்பிக்கை கொண்ட)வர்களுக்கு அவர்களை எதிர்த்து போர் புரிய அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. நிச்சயமாக அல்லாஹ் இவர்களுக்கு உதவி செய்ய பேராற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 22:39)

மேலும், இவ்வாறு அறப்போர் செய்வது அனுமதிக்கப்பட்டதற்குரிய காரணத்தையும் அடுத்துள்ள வசனங்களில் அல்லாஹ் விவரித்தான். அதாவது, அசத்தியத்தை அழித்து அல்லாஹ்வின் கட்டளைகளை நிலை நிறுத்துவதற்காகத்தான் போர் செய்வது அனுமதிக்கப்பட்டது.

அவர்கள் எத்தகையவரென்றால், நாம் அவர்களுக்குப் பூமியில் ஆட்சியைக் கொடுத்தால் தொழுகையைக் கடைப்பிடித்துத் தொழுவார்கள் ஜகாத்தும் கொடுப்பார்கள் நன்மையானவற்றை ஏவி, பாவமானவற்றைத் தடை செய்வார்கள். எல்லா காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. (அல்குர்ஆன் 22:41)

இந்த அனுமதி குறைஷிகளிடம் போர் செய்வதற்கு மட்டும் வழங்கப்பட்டது. ஆனால், அதற்குப் பின்பு தேவைக்கேற்ப போருக்கான சட்டம் மாற்றப்பட்டு, பொதுவாக போர் செய்வது கட்டாயமாக்கப்பட்டது. குறைஷிகளுடனும் இனணவைக்கும் மற்றவர்களுடனும் போர் செய்வதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இக்கட்டளைக்குப் பிறகு ஏற்பட்ட போர்களில் நடந்த சம்பவங்களைக் கூறுவதற்கு முன் இப்போர்கள் ஏன் கடமையாக்கப்பட்டன என்பதற்கான காரணங்களை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

1) முதல் காரணம்: இணைவைக்கும் குறைஷிகளை எதிரிகளாகக் கருதியது. ஏனெனில், அவர்கள்தான் முஸ்லிம்களிடம் முதன் முதலாக பகைமையைத் தொடங்கினர். எனவே, முஸ்லிம்கள் குறைஷிகளை எதிர்த்து போர் செய்வது மட்டுமில்லாமல் குறைஷிகளின் சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று எண்ணுவது நியதியே! ஆனால், குறைஷிகளைத் தவிர மற்ற அரபிகள் முஸ்லிம்களுக்கு இடையூறு செய்யாததால் அவர்களை எதிரிகளாகக் கருத வேண்டியதில்லை. எனவே, அவர்களிடம் போர் செய்ய வேண்டிய அவசியமுமில்லை.

2) இரண்டாவது காரணம்: இணைவைக்கும் அரபிகளில் யார் குறைஷிகளுடன் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகிறார்களோ அவர்களிடமும், வேறு யாராவது முஸ்லிம்களைப் பகைத்தால் அவர்களிடமும் போர் செய்ய வேண்டும்.

3) மூன்றாவது காரணம்: உடன்படிக்கை செய்து கொண்ட யூதர்களில் எவர் உடன்படிக்கைக்கு மோசடி செய்கிறாரோ அல்லது முஸ்லிம்களின் எதிரிகளாகிய இணை வைப்பாளருக்கு ஆதரவு தருகிறாரோ, அத்தகைய யூதர்களின் உடன்படிக்கையை முறித்துக் கொள்வதுடன் அவர்களிடமும் போர் செய்ய வேண்டும்.

4) நான்காவது காரணம்: வேதம் கொடுக்கப்பட்டவர்களில் யார் முஸ்லிம்களைப் பகைப்பார்களோ, முஸ்லிம்களிடம் சண்டையிடுவார்களோ அவர்களிடம் போர் செய்ய வேண்டும். அவர்கள் இழிவுபட்டு வரி செலுத்தும் வரை இந்தப் போர் நீடிக்கும். “வேதம் கொடுக்கப்பட்டவர்” என்றால் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களைப் போன்று.

5) ஐந்தாவது காரணம்: முஷ்ரிக்கு (இணைவைப்பவர்) அல்லது யூதர் அல்லது கிறிஸ்தவர் அல்லது எவராக இருப்பினும் அவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு முரண்படாமல் இருக்கும் வரை அவருடைய உயிர், பொருள், மானம் அனைத்தும் காக்கப்படும். அவருடைய கேள்வி கணக்கு அல்லாஹ்வைச் சார்ந்ததாகும். அதாவது, உள்ளரங்கமான அல்லது மறைமுகமான அவரது செயல்களைப் பற்றி அல்லாஹ் விசாரணை செய்து கொள்வான். அதைக் கண்காணிக்க வேண்டியது நமது கடமையல்ல! (இஸ்லாமிய சட்டங்களுக்கு முரண்படுவது என்றால், எடுத்துக்காட்டாக -கொலை செய்வது, கொள்ளை அடிப்பது, கிளர்ச்சி செய்வது- போன்ற செயல்களில் ஈடுபடுவது. அப்படி ஈடுபட்டால், அதற்குரிய தண்டனை உலகிலேயே அவருக்குக் கிடைக்கும்.)

போருக்கான அனுமதி அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைத்தவுடன் குறைஷிகளின் வியாபார வழித்தடமான மக்காவிலிருந்து ஷாம் செல்லும் முக்கிய வழியைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென்று நபி (ஸல்) விருப்பப்பட்டார்கள். இதற்காக இரண்டு திட்டங்களை வகுத்தார்கள்.

முதலாவது திட்டம்:-

மக்காவாசிகளின் முக்கிய வியாபார வழித்தடத்திற்கு அருகில் வசிக்கும் கோத்திரத்தாருடனும், இந்த வியாபார வழித்தடத்திற்கும் மதீனாவிற்குமிடையில் வசிக்கும் கோத்திரத்தாருடனும் நபி (ஸல்) உடன்படிக்கை செய்து கொள்வது.

அதாவது, அந்தக் கோத்திரத்தார் முஸ்லிம்களுடன் நட்புறவோடு நடந்து கொள்ள வேண்டும். அப்படி நட்புறவோடு நடந்து கொள்ளவில்லை என்றாலும் முஸ்லிம்களுடன் பகைமை காட்டக் கூடாது. இவ்வகையில் போர் சம்பந்தமான ராணுவ நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் ஜுஹைனா கிளையினருடனும் ஓர் உடன்படிக்கையை நபி (ஸல்) அவர்கள் செய்து கொண்டார்கள். இந்த ஜுஹைனா கிளையினரின் வீடுகள் மதீனாவைச் சுற்றி மூன்று இடங்களில் இருந்தன. போரின் நடவடிக்கைகளைத் தொடங்கிய பின் இன்னும் பல கோத்திரத்தாருடனும் உடன்படிக்கைகளைச் செய்து கொண்டார்கள். இதனுடைய விவரங்கள் பின்னால் வர உள்ளன.

இரண்டாவது திட்டம்:-

மக்காவாசிகளின் இந்த வியாபாரப் பாதையை நோக்கி ஒன்றுக்குப் பின் ஒன்றாக பல படைப் பிரிவுகளை அனுப்பி வைப்பது.

(நபி (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட போருக்கு அரபியில் ‘கஸ்வா’ என்றும் அவர்கள் கலந்து கொள்ளாமல் தோழர்கள் மட்டும் சென்று வந்த போர்களுக்கு ‘ஸய்யா’ என்றும் கூறப்படும். நாம் இந்த தமிழாக்கத்தில் கஸ்வாவை ‘போர்’ என்றும் ஸய்யாவை ‘படைப் பிரிவு’ என்றும் குறிப்பிடுகிறோம்.)

இக்காலத்தில் நபியவர்கள் நிகழ்த்திய போர்களும் அனுப்பிய படைப் பிரிவுகளும்

போர் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட பின், மேற்கூறப்பட்ட இரண்டு திட்டங்களையும் அமல்படுத்துவதற்காக ராணுவ நடவடிக்கைகளை நபி (ஸல்) தொடங்கினார்கள். அதாவது, இந்த நடவடிக்கைகள் ஒரு கண்காணிப்பு ரோந்துப் பணிகளைப் போன்று அமைந்திருந்தன. இதனுடைய அடிப்படை நோக்கங்கள் என்னவெனில்:

மதீனாவைச் சுற்றியுள்ள அனைத்து தரை மார்க்கங்களையும், பொது வழிகளையும் நன்கு அறிந்து கொள்ளுதல் பழக்கப்படுத்திக் கொள்ளுதல் அவ்வாறே மக்காவை நோக்கி செல்லும் அனைத்து வழிகளையும் அறிந்து கொள்ளுதல்.

இந்த வழிகளில் குடியிருக்கும் அனைத்துக் கோத்திரத்தாருடனும் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளுதல்.

முஸ்லிம்கள் இப்போது பலமடைந்து விட்டார்கள் வலுபெற்றுவிட்டார்கள் பழைய இயலாமையிலிருந்து விடுதலையடைந்து விட்டார்கள் என்று மதீனாவில் உள்ள இணை வைப்பவர்களுக்கும், யூதர்களுக்கும் அதைச் சுற்றியுள்ள கிராம அரபிகளுக்கும் உணர்த்துதல்.

அத்துமீறி நடந்து கொண்டிருந்த குறைஷிகளுக்கு அவர்களின் முடிவு என்னவாகும் என்பதை எச்சரிக்கை செய்தல். ஏனெனில், இந்த எச்சரிக்கையின் விளைவாக தொடர்ந்து தீவிரமாக செயல்படுத்தி வரும் தங்களது அழிச்சாட்டியங்களை விட்டு அவர்கள் விலகிக் கொள்ளலாம். தங்களதுப் பொருளாதார வழிகளும் பொருளாதாரங்களும் வெகு விரைவில் மிகப் பயங்கரமாக பாதிக்கப்படும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்படலாம். மேலும், முஸ்லிம்கள் அவர்களது நாட்டுக்குள் இருக்கும் போது அவர்களுடன் போர் செய்யும் எண்ணத்தை கைவிடலாம். பிறரை அல்லாஹ்வின் மார்க்கத்திலிருந்து தடுக்காமல் இருக்கலாம். மேலும், மக்காவிலுள்ள அப்பாவி முஸ்லிம்களை வேதனை செய்வதிலிருந்து விலகிக் கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, அரேபிய தீபகற்பத்தில் அல்லாஹ்வின் மார்க்கத்தைச் சுதந்திரமாக எடுத்து வைக்கும் வாய்ப்பை முஸ்லிம்கள் பெறுவார்கள்.

படைப் பிரிவுகளின் விவரங்களைச் சுருக்கமாகக் காண்போம்:”

1) ‘ஸய்ஃபுல் பஹர்’

ஹிஜ்ரி 1, ரமழான் (கி.பி. 623 மார்ச்) மாதம் ஒரு படைப் பிரிவை நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். 30 முஹாஜிர்கள் இந்தப் பிரிவில் இடம்பெற்றனர். அவர்களுக்கு ஹம்ஜா (ரழி) அவர்களைத் தலைவராக ஆக்கினார்கள். ஷாமிலிருந்து மக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த குறைஷிகளின் வியாபாரக் குழுவை வழி மறிப்பதற்காக இவர்கள் சென்றார்கள். இந்த வியாபாரக் கூட்டத்தில் முந்நூறு நபர்களும் அவர்களுக்குத் தலைமையேற்று அபூஜஹ்லும் வந்து கொண்டிருந்தான். ‘ஈஸ்’ என்ற நகரத்தின் ஓரத்தில் உள்ள ‘ஸய்ஃபுல் பஹ்ர்’ எனும் இடத்தை இரு கூட்டத்தினரும் அடைந்த போது சண்டையிடுவதற்காக அணிவகுத்தனர். ஆனால், இரு கூட்டதினருக்கும் நண்பராக இருந்த மஜ்தி இப்னு அம்ர் அல்ஜுஹனி என்பவர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி போரைத் தவிர்க்கச் செய்தார்.

இப்போல் நபி (ஸல்) ஹம்ஜாவுக்கு வெள்ளை நிறக் கொடியைக் கொடுத்தார்கள். இதுதான் நபி (ஸல்) அவர்கள் நிறுவிய முதல் கொடியாகும். இக்கொடியை அபூ மர்ஸத் கன்னாஸ் இப்னு ஹுஸைன் அல்கனவி (ரழி) ஏந்தியிருந்தார்கள்.

2) ‘ராபிக்’

ஹிஜ்ரி 1, ஷவ்வால் (கி.பி. 623 ஏப்ரல்) மாதம் நபி (ஸல்) அவர்கள் ‘ராபிக்’ என்ற இடத்தை நோக்கி ஒரு படைப் பிரிவை அனுப்பினார்கள். இதற்குத் தலைவராக உபைதா இப்னுல் ஹாரிஸ் இப்னுல் முத்தலிப் (ரழி) இருந்தார். இப்படையில் 60 முஹாஜிர்கள் கலந்து கொண்டார்கள். இவர்கள் ‘பத்தன் ராபிக்’ என்ற இடத்தில் அபூஸுஃப்யானைச் சந்தித்தார்கள். இரு கூட்டத்தார்களும் ஒருவரை நோக்கி ஒருவர் அம்பெய்து கொண்டனர். மற்றபடி, உக்கிரமான சண்டை ஏதும் நடைபெறவில்லை.

காஃபிர்களின் படையிலிருந்த அல்மிக்தாத் இப்னு அம்ர் அல்பஹ்ரானி, உத்பான் இப்னு கஸ்வான் அல்மாஜினி ஆகிய இருவர் முஸ்லிம்களுடன் இணைந்து கொண்டனர். இவர்கள் முஸ்லிமாகத்தான் இருந்தனர். என்றாலும், ஹிஜ்ராவிற்காக மக்காவிலிருந்து வெளியேற முடியாத காரணத்தால், காஃபிர்களுடன் சேர்ந்திருந்தனர். எப்பொழுதாவது சந்தர்ப்பம் கிடைத்தால் தப்பித்து முஸ்லிம்களிடம் சேர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த வியாபாரக் கூட்டத்துடன் வந்திருந்தனர்.

இந்தப் படையின் கொடி வெள்ளை நிறமாக இருந்தது. இதை மிஸ்தஹ் இப்னு உஸாஸா இப்னு அல்முத்தலிப் இப்னு அப்து மனாஃப் ஏந்தியிருந்தார்கள்.

3. ‘கர்ரார்’

ஹிஜ்ரி 1, துல்கஅதா (கி.பி. 623 மே) மாதம் ‘கர்ரார்’ என்ற இடத்திற்கு ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரழி) தலைமையில் படைப் பிரிவு ஒன்றை நபி (ஸல்) அனுப்பினார்கள். குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இடைமறிப்பதற்காகப் புறப்பட்ட இவர்களிடம் ‘கர்ரார்’ என்ற இடத்தை தாண்டிச் செல்லக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள். இந்தப் படை கால்நடையாகவே சென்றது. பகலில் பதுங்குவதும் இரவில் நடப்பதுமாக வியாழன் காலை கர்ராரை அடைந்தது. ஆனால், அந்த வியாபாரக் கூட்டமோ இவர்கள் சென்றடைவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அந்த இடத்தைக் கடந்து சென்று விட்டிருந்ததால், இவர்கள் சண்டையின்றித் திரும்பினர்.

இந்தப் படையின் கொடி வெள்ளை நிறமாக இருந்தது. இதை மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) ஏந்தியிருந்தார்கள்.

4) ‘அப்வா’ (அ) ‘வத்தான்’

ஹிஜ் 2, ஸஃபர் (கி.பி. 623 ஆகஸ்டு) மாதம் நபி (ஸல்) அவர்கள் 70 முஹாஜிர்களுடன் குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இடை மறிப்பதற்காக ‘அல்அப்வா’ அல்லது ‘வத்தான்’ என்ற இடத்தை நோக்கிச் சென்றார்கள். ஆனால், சண்டை ஏதும் நடைபெறவில்லை. இந்தப் போருக்குச் செல்வதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் ஸஅது இப்னு உபாதாவை மதீனாவில் தனக்குக் கலீஃபாவாக (பிரதிநிதியாக) ஆக்கினார்கள். இந்த போரின் போது ‘ழம்ரா’ கிளையினரின் தலைவரான அம்ர் இப்னு மக்ஷி என்பவருடன் நட்பு உடன்படிக்கை செய்தார்கள். அந்த உடன்படிக்கையில் எழுதப்பட்டதாவது:

“இது அல்லாஹ்வின் தூதராகிய முஹம்மது ‘ழம்ரா’ கிளையினருடன் செய்யும் ஒப்பந்தம். ழம்ரா கிளையினர் தங்களது உயிர், பொருள் அனைத்திலும் பாதுகாப்புப் பெற்றவர்களே! அவர்களிடம் சண்டை செய்பவர்களை நாங்களும் எதிர்ப்போம். சண்டை செய்பவர்களுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்வோம். இவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக போரில் ஈடுபடக் கூடாது. அவ்வாறே நபி (ஸல்) உதவிக்காக அழைத்தால் அவர்களும் உதவ வரவேண்டும். கடல் வற்றினாலும் இந்த உடன்படிக்கை நிலைத்திருக்கும்.”

இதுதான் நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட முதல் போராகும். நபி (ஸல்) அவர்கள் இந்தப் பயணத்தில் பதினைந்து நாட்கள் மதீனாவிற்கு வெளியில் இருந்தார்கள். இந்தப் போரிலும் வெள்ளைக் கொடியே பயன்படுத்தப்பட்டது. அதை ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) ஏந்தியிருந்தார்.

5) ‘பூவாத்“

ஹிஜ் 2, ரபீவுல் அவ்வல் (கி.பி. 623 செப்டம்பர்) மாதம் நபி (ஸல்) தங்களது 200 தோழர்களுடன் குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை வழிமறிப்பதற்காகச் சென்றார்கள். இந்த வியாபாரக் கூட்டத்தில் உமய்யா இப்னு கலஃபும் நூறு குறைஷிகளும் இருந்தனர். இவர்களுடன் 2500 ஒட்டகங்கள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் ‘ரழ்வா’ என்ற மலைக்கருகில் உள்ள ‘பூவாத்’ என்ற இடம் வரை சென்றார்கள். ஆனால், வியாபாரக் கூட்டம் அந்த இடத்தை முன்கூட்டியே கடந்து விட்டதால் சண்டை ஏதும் நடைபெறவில்லை.

இந்தப் போருக்கு நபி (ஸல்) செல்லும் போது மதீனாவில் ஸஅது இப்னு முஆதை பிரதிநிதியாக நியமித்தார்கள். இப்போரிலும் வெள்ளை நிறக் கொடியே பயன்படுத்தப்பட்டது. அதை ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரழி) ஏந்தியிருந்தார்கள்.