பக்கம் -40-

பெரிய பத்ர் போர்

போருக்குரிய காரணம்

“உஷைரா’ என்ற போரைப் பற்றி நாம் முன்பு குறிப்பிட்டபோது மக்காவிலிருந்து ஷாமிற்கு சென்று கொண்டிருந்த வியாபாரக் கூட்டம் ஒன்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து தப்பித்து விட்டது என்று கூறியிருந்தோம். இந்த வியாபாரக் கூட்டம் ஷாமிலிருந்து மக்காவிற்கு திரும்பும் நாள் நெருங்கிய போது இதன் செய்தியை அறிந்து வருவதற்காக தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், ஸஈது இப்னு ஜைது (ரழி) ஆகிய இருவரை நபி (ஸல்) மதீனாவின் வடக்குத் திசையின் பக்கம் அனுப்பினார்கள். இவ்விருவரும் ‘ஹவ்ரா’ என்ற இடத்தை அடைந்து அங்கு தங்கியிருந்தனர். அபூ ஸுஃப்யான் வியாபாரக் கூட்டத்துடன் அவ்விடத்தை அடைந்த போது அவ்விருவரும் மதீனாவிற்குத் திரும்பி, செய்தியை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.

இந்த வியாபாரக் கூட்டம் மிகப்பெரிய அளவில் குறைஷித் தலைவர்களுக்குரிய செல்வங்களுடன் சென்று கொண்டிருந்தது. இவர்களிடம் 50,000 தங்க நாணயங்களுக்குக் குறையாத அளவு வியாபாரப் பொருட்கள் 1,000 ஒட்டகங்களில் வந்து கொண்டிருந்தன. ஆனால், இவ்வளவு பெரிய வியாபாரக் கூட்டத்தைப் பாதுகாப்பதற்கு 40 வீரர்கள் மட்டுமே இருந்தனர்.

மக்காவாசிகளுக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய சேதத்தை உண்டு பண்ணுவதற்கு இது முஸ்லிம்களுக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாகும். இந்த சேதத்தை ஏற்படுத்திவிட்டால் காலங்காலமாக காஃபிர்களின் உள்ளங்கள் துடிதுடித்துக் கொண்டேயிருக்கும். இப்போது நபி (ஸல்) முஸ்லிம்களுக்கு அறிவிப்புச் செய்தார்கள். “இதோ... குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் அவர்களது பொருட்களுடன் வருகிறது. அக்கூட்டத்தை நோக்கி நீங்கள் புறப்படுங்கள். அல்லாஹ் அந்தப் பொருட்களை உங்களுக்கு அளிக்கக் கூடும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

இப்போரில் கலந்துகொள்ள வேண்டுமென நபி (ஸல்) எவரையும் வலியுறுத்தவில்லை. காரணம் வியாபாரக் கூட்டத்திற்குப் பதிலாக மக்காவின் படையினருடன் பத்ர் மைதானத்தில் பெரிய அளவில் மூர்க்கமான சண்டையும் மோதலும் நிகழுமென்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதாவது, செல்வங்களுக்குப் பதில் சண்டை நிகழுமென்று அப்பொழுது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாததால் இப்பயணத்தில் கலந்து கொள்வது அவரவரின் விருப்பம் என்று நபி (ஸல்) விட்டு விட்டார்கள். இதற்கு முன்பு தாங்கள் கண்ட சிறிய பெரிய ராணுவப் பயணங்களில் நிகழ்ந்ததைப் போன்றுதான் இந்தப் பயணத்திலும் நிகழும் என்றெண்ணி அதிகமான நபித்தோழர்கள் இப்பயணத்தில் கலந்துகொள்ளாமல் மதீனாவிலேயே தங்கிவிட்டனர். அதை நபி (ஸல்) அவர்களும் குற்றமாகக் கருதவில்லை.

இஸ்லாமியப் படையும் அதற்கு தளபதிகள் நியமிக்கப்படுவதும்

நபி (ஸல்) மதீனாவிலிருந்து வெளியேற ஆயத்தமானார்கள். அவர்களுடன் 310ற்கும் மேற்பட்டவர்கள் (313 அல்லது 314 அல்லது 317) வீரர்கள் வெளியேறினார்கள். அதாவது 82 அல்லது 83 அல்லது 84 முஹாஜிர்களும், அவ்ஸ் கிளையைச் சேர்ந்த 61 அன்ஸாகளும், கஸ்ரஜ் கிளையைச் சேர்ந்த 170 அன்ஸாகளும் இருந்தனர். மதீனாவிலிருந்து வெளியேறும் போது எவ்வித ஆரவாரமும் இல்லாமல் குறைவான தயாரிப்புடன்தான் முஸ்லிம்கள் சென்றார்கள். முஸ்லிம்களிடம் ஒன்று அல்லது இரண்டு குதிரைகளே இருந்தன. ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களிடம் ஒரு குதிரையும் மிக்தாது இப்னு அஸ்வத் (ரழி) அவர்களிடம் ஒரு குதிரையும் இருந்தது. மேலும், 70 ஒட்டகங்கள் மட்டும் இருந்தன. அதில் ஓர் ஒட்டகத்திற்கு இருவர் அல்லது மூவராக மாறிமாறி பயணம் செய்தனர். நபி (ஸல்) மற்றும் அலீ, மர்ஸத் இப்னு அபூ மர்ஸத் கனவி (ரழி) ஆகிய மூவரும் ஒரே ஒட்டகத்தில் மாறிமாறி பயணம் செய்தனர்.

இம்முறை மதீனாவிற்கும் அங்கு தொழுகை நடத்துவதற்கும் பிரதிநிதியாக அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்களை நபி (ஸல்) நியமித்தார்கள். நபி (ஸல்) மதீனாவிலிருந்து வெளியேறி ‘ரவ்ஹா’ என்ற இடத்தை அடைந்த போது அபூலுபாபா இப்னு அப்துல் முன்திர் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக நியமித்து மதீனா அனுப்பி வைத்தார்கள்.

இப்போருக்கான பொதுவான தலைமைத்துவத்தின் வெள்ளைக் கொடியை ‘முஸ்அப் இப்னு உமைர் அல்குறைஷி அல்அப்த’ (ரழி) அவர்களிடம் வழங்கினார்கள்.

படையை இரண்டு பிரிவாக ஆக்கினார்கள்.

1) முஹாஜிர்களின் படை: இதற்குரிய கொடியை அலீ இப்னு அபூ தாலிப் (ரழி) அவர்களிடம் கொடுத்தார்கள். இக்கொடிக்கு ‘உகாப்’ என்று சொல்லப்பட்டது.

2) அன்ஸாரிகளின் படை: இதற்குரிய கொடியை ஸஅது இப்னு முஆத் (ரழி) அவர்களிடம் கொடுத்தார்கள். இந்த இரு படைகளின் கொடி கருப்பு நிறமுடையதாக இருந்தது.

படையின் வலப் பக்கப் பிரிவிற்கு ஸுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். இடப் பக்கப் பிரிவிற்கு மிக்தாது இப்னு அம்ர் (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். நாம் முன்பு கூறியது போன்று இவ்விருவர்தான் குதிரை வீரர்களாக இருந்தார்கள். போரின் கடைசி பிரிவிற்கு கைஸ் இப்னு அபூ ஸஃஸஆ (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். மற்றபடி பொது தளபதியாகவும், படையை வழி நடத்துபவராவும் நபி (ஸல்) அவர்களே விளங்கினார்கள்.

இஸ்லாமியப் படை பத்ரை நோக்கி

நபி (ஸல்) அவர்கள் சரியான தயாரிப்பு இல்லாத இப்படையுடன் மதீனாவின் வலப் பக்கத்திலிருந்து வெளியேறி மக்காவை நோக்கிச் செல்லும் பிரதான பாதையில் சென்றார்கள். ‘ரவ்ஹா’ என்ற கிணற்றை அடைந்து, அங்கு தங்கிவிட்டு மக்காவின் பிரதான பாதையை தனது இடப்பக்கத்தில் விட்டுவிட்டு வலப்பக்கமாக ‘நாஸியா’ என்ற இடம் வழியாக வெளியேறி பத்ரை நோக்கி சென்றார்கள். ‘நாஸியா’ என்ற இடத்தின் ஓரமாக பயணித்து அங்குள்ள பள்ளத்தாக்கைக் கடந்தார்கள். அந்தப் பள்ளத்தாக்கிற்கு பெயர் ‘ருஹ்கான்’ எனப்படும். அது நாஸியா மற்றும் ‘ஸஃப்ரா’ என்ற இடத்திற்கு மத்தியிலுள்ள பள்ளத்தாக்காகும்.

பின்பு ஸஃப்ராவின் குறுகலான வழியாகச் சென்று ஸஃப்ராவை அடைந்தார்கள். ஸஃப்ரா என்ற இடத்தில் தங்கி, பஸ்பஸ் இப்னு அம்ர் அல் ஜுஹனி, அதி இப்னு அபூஸக்பா அல் ஜுஹ்னி (ரழி) ஆகிய இருவரையும் பத்ர் பள்ளத்தாக்கிற்கு அனுப்பி குறைஷிகளுடைய வியாபாரக் கூட்டத்தின் செய்தியைத் துப்பறிந்து வருமாறு அனுப்பினார்கள்.

மக்காவில் எச்சரிப்பவர்

வியாபாரக் கூட்டத்திற்குப் பொறுப்பாக இருந்த அபூஸுஃப்யான் மிகுந்த எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருந்தார். மக்காவின் பாதை இப்போது ஆபத்துகள் நிறைந்தது என்பதையும் அறிந்திருந்தார். எனவே, செய்திகளைச் சேகரித்தவராகத் தனக்கு எதிர்வரும் வாகனிகளிடம் நிலைமைகளை விசாரித்துக் கொண்டே பயணித்தார். அப்போது முஹம்மது (ஸல்) தங்களது தோழர்களை அழைத்துக் கொண்டு இந்த வியாபாரக் கூட்டத்தை கைப்பற்ற புறப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி அபூஸுஃப்யானுக்குக் கிடைத்தது. அபூஸுஃப்யான் உடனடியாக ழம்ழம் இப்னு அம்ர் அல்கிஃபா என்பவருக்கு கூலி கொடுத்து, மக்காவிற்குச் சென்று தங்களின் வியாபாரக் கூட்டத்தை காப்பாற்றிக் கொள்ள விரைந்து வருமாறு குறைஷிகளுக்கு அறிவிப்புச் செய்ய அனுப்பி வைத்தார். ழம்ழம் மக்காவிற்கு விரைந்து ‘பத்னுல் வாதி’ என்ற இடத்தில் ஒட்டகத்தின் மீது நின்றவராக கூக்குரலிட்டார். மேலும், ஒட்டகத்தின் மூக்கை அறுத்து அதன் மேலுள்ள கஜாவா பெட்டியையும் மாற்றி அமைத்து தனது சட்டையையும் கிழித்துக் கொண்டார். பின்பு “குறைஷிகளே! வியாபாரக் கூட்டம்! வியாபாரக் கூட்டம்! அபூ ஸுஃப்யானுடன் வந்து கொண்டிருக்கும் செல்வங்களை முஹம்மது தன் தோழர்களுடன் வழிமறிக்கக் கிளம்பிவிட்டார். அது உங்களுக்குக் கிடைக்குமென்று நான் கருதவில்லை. உதவி! உதவி! காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!” என்று உரக்கக் கத்தினார்.

மக்காவாசிகள் போருக்குத் தயார்

இதைக் கேட்ட மக்காவாசிகள் அங்குமிங்கும் ஓடலானார்கள். “என்ன! முஹம்மதும் அவரது தோழர்களும் எங்களது வியாபாரக் கூட்டம், இப்னுல் ஹழ்ரமியின் வியாபாரக் கூட்டத்தைப் போன்று ஆகிவிடுமென்று எண்ணுகிறார்களா? ஒருக்காலும் அவ்வாறு ஆகாது. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் எதிர்பார்க்காதது நடக்கப் போகிறது. அதை அவர் நன்கு அறிந்து கொள்வார்” என்று பேசிக் கொண்டனர். மக்காவில் உள்ள அனைவரும் வெளியேறத் தயாரானார்கள். அப்படி தன்னால் முடியவில்லையானாலும் தனக்குப் பதிலாக மற்றொருவரை அனுப்பி வைத்தார்கள். மக்காவிலுள்ள பிரசித்திபெற்ற பிரமுகர்கள் அனைவரும் இப்போரில் கலந்து கொண்டனர். ஆனால், அதில் கலந்து கொள்ள முடியாத அபூலஹப் மட்டும் தனக்குக் கடன் தரவேண்டிய ஒருவரை தனக்குப் பகரமாக அனுப்பினான். மேலும், குறைஷிகள் தங்களைச் சுற்றியுள்ள அரபியர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தனர். ‘அதீ’ கிளையினரைத் தவிர அனைத்துக் கூட்டத்தினரும் அதில் கலந்து கொண்டனர். ‘அதீ’ கிளையினரிலிருந்து ஒருவர்கூட கலந்து கொள்ளவில்லை.

மக்கா நகர படையின் அளவு

மக்கா படை புறப்படும் போது அதில் 1300 வீரர்கள் இருந்தனர். இவர்களிடம் 100 குதிரைகளும் 600 கவச ஆடைகளும் இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவிற்கு அதிகமான ஒட்டகங்களும் இருந்தன. இந்தப் படையின் பொதுத் தலைவனாக அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம் இருந்தான். இப்படைக்கு செலவு செய்வதற்குரிய பொறுப்பைக் குறைஷிகளின் ஒன்பது முக்கியஸ்தர்கள் ஏற்றுக் கொண்டனர். ஒரு நாள் ஒன்பது ஒட்டகம் மற்றொரு நாள் பத்து ஒட்டகம் என அறுத்து உணவளித்தனர்.

பக்ர் கிளையினரை அஞ்சுதல்

மக்காவின் படை புறப்படுவதற்கு ஒன்றுகூடிய போது பக்ர் கிளையினரைப் பற்றிய நினைவு அவர்களுக்கு வந்தது. குறைஷிகளுக்கும் இவர்களுக்குமிடையில் நீண்ட காலமாகப் பகைமை இருந்தது. இவர்கள் பின்புறமாகத் தங்களை தாக்கிவிட்டால் இரு நெருப்புக்கிடையில் சிக்கிக் கொள்வோமே என்று பயந்து பின்வாங்கினர். ஆனால், அந்நேரத்தில் பக்ர் கிளையினரின் முக்கிய பிரிவான கினானாவின் தலைவர் சுராகா இப்னு மாலிக் இப்னு ஜுஃஷுமின் உருவத்தில் ஷைத்தான் தோற்றமளித்து “கினானா கிளையினர் உங்களுக்குப் பின்புறமாக தாக்குவதிலிருந்து நான் பாதுகாப்பளிக்கிறேன். நீங்கள் துணிந்து செல்லலாம்” என்று கூறினான்.

மக்காவின் படை புறப்படுகிறது

இப்படை தங்களது இல்லங்களிலிருந்து புறப்பட்ட நிலையை அல்லாஹ் இவ்வாறு விவரிக்கின்றான்:

“பெருமைக்காகவும் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து (முஸ்லிம்களை எதிர்க்க ‘பத்ர்’ போருக்குப்) புறப்பட்டனர். மேலும் மக்களை அல்லாஹ்வுடைய பாதையில் செல்வதைத் தடை செய்கின்றனர்...” (அல்குர்ஆன் 8:47)

அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் செய்வதற்காக, தங்களது முழு தயாரிப்புடனும் ஆயுதங்களுடனும் புறப்பட்டனர். மேலும், முஸ்லிம்கள் தங்களது வியாபாரக் கூட்டத்தைத் தாக்குவதற்குத் துணிவு கொண்டதைப் பார்த்து மிகுந்த கோபத்துடனும் வெறியுடனும் புறப்பட்டனர்.

மிக விரைவாக பத்ரை நோக்கி மக்காவின் வடப்புற வழியாக பயணித்தனர். ‘உஸ்வான்’ பள்ளத்தாக்கு, பிறகு குதைத், பிறகு ஜுஹ்பாவை அடைந்தனர். அது சமயம் அபூ ஸுஃப்யானிடமிருந்து புதிய தகவல் ஒன்று வந்தது. அதாவது, “நீங்கள் உங்களது வியாபாரக் கூட்டத்தையும், உங்களது செல்வங்களையும், ஆட்களையும் பாதுகாப்பதற்காகத்தான் மக்காவிலிருந்து புறப்பட்டீர்கள். அல்லாஹ் அவை அனைத்தையும் பாதுகாத்து விட்டான். ஆகவே, நீங்கள் திரும்பி விடுங்கள்” என்று அபூஸுஃப்யான் எழுதியிருந்தார்.

வியாபாரக் கூட்டம் தப்பித்தது

அபூ ஸுஃப்யானின் நிலைமைப் பற்றி சிறிது பார்ப்போம்:

அபூ ஸுஃப்யான் மக்காவை நோக்கிய பிரதான பாதையில் சென்று கொண்டிருந்தாலும் மிகவும் சுதாரிப்புடன் நிலைமைகளை நன்கு அலசி ஆராய்ந்து கொண்டு தன்னுடைய வியாபாரக் கூட்டத்தை வழிநடத்திச் சென்றார். பத்ருக்கு அருகில் மஜ்தீ இப்னு அம்ரை சந்தித்தார். அவரிடம் “மதீனாவின் படைகளை நீங்கள் பார்த்தீர்களா?” என்று விசாரித்தார். அதற்கவர் “நான் இங்கு புதிதாக யாரையும் பார்க்கவில்லை. எனினும், இரு வாகனிகள் இந்த நீர் தடாகத்திற்கு அருகில் தங்களது ஒட்டகங்களைப் படுக்க வைத்தனர். பின்பு, தங்களது தோல் பையில் தண்ணீரை நிரப்பிக் கொண்டனர். சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்” என்று கூறினார்.

இதைக் கேட்டவுடன், அபூ ஸுஃப்யான் அவர்கள் ஒட்டகங்களைப் படுக்க வைத்திருந்த இடத்திற்கு விரைந்தார். அந்த ஒட்டகங்களின் சாணங்களைக் கிளறி அதில் பேரீத்தங்கொட்டைகள் இருப்பதைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது யஸ்ப் (மதீனா) வாசிகளின் ஒட்டக உணவாகும் என்று கூறி தனது வியாபாரக் கூட்டத்திடம் விரைந்து வந்து அதன் பயண திசையை மேற்கே, கடற்கரை பகுதியை நோக்கி மாற்றினார். பத்ர் வழியாக மக்கா நோக்கி செல்லும் பிரதான பாதையை இடது பக்கத்தில் விட்டுவிட்டார். தனது இந்த தந்திரத்தின் மூலம் மதீனாவின் படையிடம் சிக்காமல் தப்பித்துக் கொண்டார். இதற்குப் பின்பே நாம் முன்பு கூறிய கடிதத்தை மக்காவின் படையினருக்கு எழுதியனுப்பினார்.

திரும்பிட நினைத்த மக்கா படையில் பிளவு

அபூஸுஃப்யான் எழுதிய கடிதம் குறைஷிகளுக்கு கிடைத்த போது அவர்கள் அனைவரும் திரும்பிவிடலாம் என்றே எண்ணினர். ஆனால், குறைஷிகளின் அட்டூழியக்காரன் அபூஜஹ்ல் கர்வத்துடன் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் திரும்பமாட்டோம் நாங்கள் பத்ருக்குச் செல்வோம் அங்கு மூன்று நாட்கள் தங்குவோம் ஒட்டகங்களை அறுத்து சமைத்து சாப்பிடுவோம் மது அருந்துவோம் அடிமைப் பெண்கள் இசைப்பாடுவர் எங்களைப் பற்றியும் எங்களது பயணத்தைப் பற்றியும், எங்கள் கூட்டத்தைப் பற்றியும் அரபிகள் கேள்விப்படுவார்கள். அதனால் எங்களை எப்பொழுதும் பயந்தே வாழ்வார்கள்” என்று கூறினான்.

அபூஜஹ்லுக்கு எதிராக அக்னஸ் இப்னு ஷரீக் திரும்பியே ஆக வேண்டுமென்று ஆலோசனைக் கூறினார். ஆனால், அவரது பேச்சைப் பலர் செவிமடுக்கவில்லை. ஆனால், இவருக்கு நண்பர்களாக இருந்த ஜுஹ்ரா கிளையினர் மட்டும் இவரது பேச்சுக்குக் கட்டுப்பட்டனர். இந்தப் போரில் ஜுஹ்ராவினருக்கு அக்னஸ்தான் தலைவராக இருந்தார். எனவே, ஜுஹ்ரா கிளையினரில் எவரும் போரில் கலந்து கொள்ளாமல் அக்னஸுடன் திரும்பி விட்டனர். இவர்கள் ஏறக்குறைய 300 நபர்கள் இருந்தனர். பத்ர் போர் நடந்து முடிந்தபின் குறைஷிகளுக்கு ஏற்பட்ட தோல்வியையும் நஷ்டத்தையும் பார்த்த ஜுஹ்ரா கிளையினர் அக்னஸின் ஆலோசனையை பெரிதும் மெச்சினர். அதற்குப் பின் அக்னஸ் ஜுஹ்ராவனரிடம் மிகுந்த மதிப்பிற்குரியவராகவும் கண்ணியத்திற்குரியவராகவும் என்றென்றும் இருந்தார்.

ஹாஷிம் கிளையினரும் திரும்பிட நாடவே நாங்கள் திரும்பும் வரை நீங்கள் திரும்பக் கூடாதென அபூஜஹ்ல் அவர்களைப் பலவந்தமாக அழைத்துச் சென்றான்.

இவ்வாறு ஜுஹ்ரா கிளையினர் 300 பேர் போரிடாமல் திரும்பிவிடவே, மீதமுள்ள 1000 பேர் கொண்ட படை பத்ரை நோக்கிக் கிளம்பியது. இவர்கள் தொடர்ந்து சென்று பத்ர் பள்ளத்தாக்கில் ‘அல் உத்வதுல் குஸ்வா’ என்ற மேட்டுப் பகுதிக்குப் பின்னால் தங்கினார்கள்.