பக்கம் -42-

முக்கிய ராணுவத் தளத்தை நோக்கி இஸ்லாமியப் படை

இணைவைப்பவர்கள் வருவதற்குள் பத்ர் மைதானத்திற்கருகில் உள்ள நீர்நிலைகளுக்கு நாம் சென்றுவிட வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) தனது படையை அழைத்துக் கொண்டு விரைந்தார்கள். ஏனெனில், அப்போதுதான் அந்த நீர்நிலைகளை எதிரிகள் கைப்பற்ற விடாமல் தடுக்க முடியும். அல்லாஹ்வின் அருளால் இஷா நேரத்தில் பத்ரின் நீர்நிலைகளில் ஒரு நீர்நிலைக்கு அருகில் நபி (ஸல்) வந்திறங்கினார்கள். அப்போது போர் தந்திரங்களை நன்கறிந்த (ராணுவ நிபுணர்) அல் ஹுபாப் இப்னு முன்திர் (ரழி) எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! இந்த இடத்தில் நீங்கள் தங்கியதைப் பற்றி எனக்குக் கூறுங்கள். நாம் இவ்விடத்தை விட்டு முந்தவோ அல்லது பிந்தவோ கூடாது என அல்லாஹ் முடிவு செய்த இடமா இது? அல்லது இது உங்கள் சார்பான யோசனையும், போர் தந்திரமுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) “இல்லை. இது ஒரு யோசனையும் போர் தந்திரமும்தான்” என்றார்கள்.

அதற்கவர் “அல்லாஹ்வின் தூதரே! இது தங்குவதற்குரிய இடமல்ல. நீங்கள் மக்களை அழைத்துக் கொண்டு புறப்படுங்கள். நாம் குறைஷிகளுக்கு மிக அருகில் உள்ள நீர்நிலைக்கு சென்று தங்குவோம். பின்பு மற்ற அனைத்து நீர்நிலைகளையும் நாம் அழித்து விடுவோம். மேலும், ஒரு நீர் தடாகத்தை ஏற்படுத்தி அதை தண்ணீரால் நிரப்பி விடுவோம். நாளை போர் நடக்கும் போது நாம் குடிப்பதற்குத் தண்ணீர் இருக்கும். அவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் இருக்காது” என்றார். நபி (ஸல்) அந்த யோசனையை ஏற்றுக்கொண்டு, “நிச்சயம் நீர் நல்ல யோசனை கூறினீர்” என்றார்கள்.

உடனே நபி (ஸல்) தங்களது படையை அழைத்துக் கொண்டு எதிரிகளுக்கு சமீபமாக உள்ள நீர்நிலைகளுக்கு அருகில் வந்திறங்கினார்கள். அந்நேரம் இரவின் பெரும் பகுதி கழிந்திருந்தது. பின்பு, தங்களுக்குச் சிறிய சிறிய நீர்த் தடாகங்கள் சிலவற்றை அங்குக் கட்டிக் கொண்டு மற்ற அனைத்து கிணறுகளையும் அழித்துவிட்டார்கள்.

படையை வழி நடத்துவதற்கான இடம்

முஸ்லிம்கள் அந்த கிணற்றுக்கருகில் தங்கிய போது, ஸஅது இப்னு முஆது (ரழி) “படையை வழிநடத்துவதற்காக நாங்கள் தங்களுக்கென பாதுகாப்பான ஒரு தனி இருப்பிடத்தை ஏற்படுத்துகிறோம். அப்போதுதான் அங்கிருந்து அவசர நடவடிக்கைகள் எடுக்க முடியும் வெற்றிக்குப் பதிலாக தோல்வி ஏற்பட்டாலும் அதற்குரிய சரியான திட்டத்தை நீங்கள் தீட்ட முடியும்” என்று நபி (ஸல்) அவர்களிடம் ஆலோசனைக் கூறினார்கள்.

இதோ அவரது ஆலோசனை! அவர் கூறக் கேட்போம்:

“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்காக உயரமான ஒரு பரணி வீட்டை கட்டுகிறோம் அதில் நீங்கள் தங்கிக் கொள்ளுங்கள் உங்களுக்குத் தேவையான வாகனங்களையும் அதற்கருகில் ஏற்பாடு செய்கிறோம் பின்பு நாளை எதிரிகளை நாங்கள் சந்திக்கும்போது அல்லாஹ் நம்மை மிகைக்க வைத்தால், நமக்கு வெற்றி அளித்தால், அது நாம் விரும்பியவாறே நடந்ததாக இருக்கட்டும். இல்லை! அதற்கு மாற்றமாக ஏதாவது நடந்தால் நீங்கள் இந்த வாகனத்தில் அமர்ந்து எங்களுக்குப் பின்னுள்ள எங்களது கூட்டத்தனரிடம் சேர்ந்து கொள்ளலாம். அல்லாஹ்வின் தூதரே! இன்னும் பலர் இங்கு வரவில்லை எங்களை விட அவர்கள் உங்களை அதிகம் நேசிக்கக் கூடியவர்கள் நீங்கள் போரைச் சந்திப்பீர்கள் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தால் உங்களை விட்டு ஒருக்காலும் அவர்கள் பின்தங்கியிருக்க மாட்டார்கள். அவர்களிடம் நீங்கள் சென்றால் அவர்கள் மூலம் அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பான். அவர்கள் உங்களிடம் உண்மையுடன் நடந்து, உங்களுக்கு ஆதரவாக போரும் புரிவார்கள்.” இவ்வாறு ஸஅது (ரழி) தங்களின் சிறந்த ஆலோசனையை நபி (ஸல்) அவர்கள் முன் வைத்தார்.

ஸஅது (ரழி) அவர்களின் இந்த யோசனையை நபி (ஸல்) அவர்கள் கேட்டு, அவரைப் புகழ்ந்து அவருக்காக பிரார்த்தனையும் செய்தார்கள். முஸ்லிம்கள் போர் மைதானத்திற்கு வடக்கிழக்கில் இருந்த உயரமான ஒரு திட்டின் மீது பரணி வீட்டை, அதில் இருந்து கொண்டு போர் மைதானத்தைப் பார்க்கும்படியாக அமைத்தார்கள்.

மேலும், நபி (ஸல்) அவர்களை சுற்றி பாதுகாப்பிற்காக ஸஅது இப்னு முஆத் (ரழி) தலைமையில் சில அன்சாரி வாலிபர்களின் குழு ஒன்று தேர்வு செய்யப்பட்டது.

படையை ஒழுங்குபடுத்துதல் - இரவைக் கழித்தல்

பின்பு நபி (ஸல்) தனது படையை ஒழுங்குபடுத்தினார்கள். போர் நடக்கக்கூடிய மைதானத்தில் நடந்து சென்று “இன்ஷா அல்லாஹ்! நாளை இன்னார் கொல்லப்படும் இடம் இது... இன்ஷா அல்லாஹ்! நாளை இன்னார் கொல்லப்படும் இடம் இது... என்று தங்களது விரலால் சுட்டிக் காட்டினார்கள். பின்பு நபி (ஸல்) அங்குள்ள ஒரு மரத்தருகில் தொழுதவர்களாக இரவைக் கழித்தார்கள். முஸ்லிம்களும் மிகுந்த நம்பிக்கையுடனும் மன அமைதியுடனும் காலையில் தங்கள் இறைவனின் நற்செய்திகளைக் கண்கூடாகப் பார்த்துக் கொள்ளலாம் என்ற ஆதரவுடன் இரவைக் கழித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், ஸுனனுத் திர்மிதி)

(நம்பிக்கையாளர்களே! உங்கள் மனம்) சாந்தியடைந்தவர்களாக, சிறியதொரு நித்திரை உங்களைப் சூழ்ந்து கொள்ளும்படி (இறைவன்) செய்ததை நினைத்துப் பாருங்கள்! அன்றி (அதுசமயம்) உங்கள் தேகத்தை நீங்கள் சுத்தப்படுத்திக் கொள்வதற்காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய அசுத்தத்தைப் போக்கி விடுவதற்காகவும், உங்கள் உள்ளங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும் (அவனே) வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்தான். (அல்குர்ஆன் 8:11)

அது ஹிஜ்ரி 2, ரமழான் மாதம் பிறை 17 வெள்ளிக்கிழமை இரவாக இருந்தது. இதே மாதம் பிறை 8 அல்லது 12ல் இந்தப் படை மதீனாவிலிருந்து பத்ரை நோக்கி புறப்பட்டது.

போர்க்களத்தில் மக்கா படையில் பிளவு ஏற்படுதல்

குறைஷிகள் பத்ர் பள்ளத்தாக்கின் மேற்பகுதியில் தங்களது கூடாரங்களை அமைத்து இரவைக் கழித்தனர். காலை விடிந்தவுடன் தங்களது படைகளுடன் பத்ர் பள்ளத்தாக்கருகில் உள்ள மணல் முகட்டுக்கருகில் வந்தனர். அவர்களில் சிலர் நபி (ஸல்) ஏற்படுத்தியிருந்த நீர் தடாகத்தில் நீர் அருந்த வந்தனர். அப்போது நபி (ஸல்) தோழர்களிடம் “அவர்களை விட்டு விடுங்கள்” என்றார்கள். அவர்களில் யாரெல்லாம் நீர் அருந்தினார்களோ அவர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர். ஆனால், ஹக்கீம் இப்னு ஸாமைத் தவிர. இவர் போரில் கொல்லப்பட வில்லை. பிறகு இவர் இஸ்லாமை ஏற்று சிறந்த முஸ்லிமாக விளங்கினார். அவர் சத்தியம் செய்ய அவசியம் ஏற்பட்டால் “பத்ர் போரில் என்னைக் காப்பாற்றியவன் மீது சத்தியமாக!” என்று கூறுவார். அதாவது தன்னுடன் நீர் அருந்திய அனைவரும் கொல்லப்பட்டு விட, தான் மட்டும் அல்லாஹ்வின் அருளால் தப்பித்ததை நினைத்து இவ்வாறு கூறுவார்.

குறைஷிகள் சூழ்நிலைகளைப் பார்த்து சற்று நிம்மதியடைந்த பிறகு உமைர் இப்னு வஹ்பு ஜுமயை முஸ்லிம்களின் பலத்தை அறிந்து வர அனுப்பினர். உமைர் தனது குதிரையில் முஸ்லிம் ராணுவத்தை நோட்டமிட்டு குறைஷிகளிடம் திரும்பி, “அவர்கள் ஏறக்குறைய முன்னூறு நபர்கள் இருக்கலாம் இருப்பினும் எனக்கு அவகாசம் கொடுங்கள் நான் வேறு எங்காவது படை மறைந்திருக்கிறதா அல்லது அவர்களுக்கு உதவிக்காக வேறு படை ஏதும் வருகிறதா எனப் பார்த்து வருகிறேன்” என்றார்.

பத்ர் பள்ளத்தாக்கில் மிக நீண்ட தூரம் வரை நோட்டமிட்டும் எதையும் பார்க்காததால், குறைஷிகளிடம் திரும்பி “நான் எதையும் பார்க்கவில்லை. ஆனால், குறைஷிக் கூட்டமே! மரணங்களைச் சுமந்து வரும் சோதனைகள் என் கண் முன் தெரிகின்றன. மதீனாவின் ஒட்டகங்கள் வெறும் மரணத்தைத்தான் சுமந்து வந்திருக்கின்றன. வந்திருக்கும் கூட்டத்திற்கு வாளைத் தவிர வேறெந்த பாதுகாப்பும் இல்லை. அவர்களில் ஒருவர் கொலை செய்யப்படுவதற்கு முன் உங்களில் ஒருவரைக் கொலை செய்யாமல் அவர் இறக்க மாட்டார். உங்களில் அவ்வளவு பெரிய எண்ணிக்கைகளை அவர்கள் கொன்றால், அதற்குப் பிறகு நீங்கள் வாழ்ந்துதான் என்ன பயனிருக்கிறது? எனவே, நன்கு யோசித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.

போர் செய்தே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் அபூ ஜஹ்லுக்கு எதிராகக் கிளர்ச்சி ஏற்பட்டது. அதுதான் சண்டை செய்யாமல் திரும்ப வேண்டும் என்பது! ஹக்கீம் இப்னுஹிஸாம் இதற்காக மக்களிடையே முயற்சித்தார். அவர் உத்பா இப்னு ரபீஆவை சந்தித்து “உத்பாவே! நீர் குறைஷிகளில் பெரியவரும் தலைவருமாவீர். உங்களின் சொல்லுக்குக் குறைஷியர் கட்டுப்படுவர், காலங்காலமாக உமக்கு நற்புகழை தரும் ஒரு விஷயத்தை நான் சொல்லட்டுமா?” என்றார். அதற்கு உத்பா “நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ஹக்கீமே!” என்றார். ஹக்கீம் “நீர் மக்களை அழைத்துக் கொண்டு திரும்பி விடும். (ஸய்யா நக்லாவில் கொல்லப்பட்ட) உமது நண்பர் அம்ர் இப்னு ஹழ்ரமியின் விஷயத்திற்கு நீர் பொறுப்பெடுத்துக் கொள்!” என்று கூறினார். இதற்கு “நான் அவ்வாறே செய்கிறேன். எனக்கு நீ ஜாமினாக இரு. அம்ர் என்னுடைய நண்பர்தான். எனவே அவருடைய கொலை குற்றப்பரிகாரத்தையும், அவருக்கு ஏற்பட்ட பொருள் சேதத்தையும் நான் கொடுத்து விடுகிறேன்” என்று உத்பா கூறினார்.

பின்பு, “நீர் அபூஜஹ்லிடம் சென்று, இது விஷயமாக பேசி வாரும். ஏனெனில், நிச்சயமாக அவனைத் தவிர வேறெவரும் மக்களுக்கு மத்தியில் பிளவு உண்டாக்க மாட்டார்” என உத்பா ஹக்கீமிடம் கூறினார்.

பின்பு உத்பா மக்களுக்கு மத்தியில் பிரசங்கம் செய்தார். இதோ... அவரது பிரசங்கம்:

“குறைஷிக் கூட்டத்தினரே! நிச்சயமாக நீங்கள் முஹம்மதிடமும் அவரது தோழர்களிடமும் சண்டையிட்டு என்ன செய்யப் போகிறீர்கள்? அதனால் உங்களுக்கு என்ன லாபம்? நீங்கள் அவர்களுக்கு ஏதாவது தீங்கு செய்தால், நாளை உங்களுக்குள் எவ்வளவு பெரிய வெறுப்பு ஏற்படும்? நம்மில் யாரொருவர் அவர்களில் ஒருவரைக் கொலை செய்கிறாரோ அவர் தனது ஒன்றுவிட்ட சகோதரராகவோ, தாய்மாமன்களின் பிள்ளைகளாகவோ, நெருக்கமான உறவினர் களில் ஒருவராகவோ தான் இருப்பார். எனவே, முஹம்மதை மற்ற அரபியர்களுக்கு மத்தியில் விட்டு விட்டு நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள். அவர்கள் முஹம்மதைக் கொலை செய்தால், நீங்கள் நாடியது நடந்து விடும். இல்லை, அதற்கு மாற்றமாக நடந்தால் நீங்கள் விரும்பாதது நடந்ததாக இருக்கட்டும்.”

ஹக்கீம் இப்னுஹிஸாம் அபூஜஹ்லிடம் வந்தார். தன் கவச ஆடையை அவன் சரிசெய்து கொண்டிருந்தான். அவர் “ஓ அபுல்கமே!” உத்பா என்னை உன்னிடம் இன்னன்ன விஷயங்களைக் கூறி அனுப்பினார்” என்றார். அதைக் கேட்ட அபூஜஹ்ல் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! முஹம்மதையும் அவருடைய தோழர்களையும் பார்த்து உத்பா பயந்ததால், நெஞ்சு ‘திக்...திக்’ என்று அடிக்கிறதுபோலும். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் எங்களுக்கும் முஹம்மதுக்கும் மத்தியில் தீர்ப்பளிக்கும் வரை நாங்கள் இவ்விடத்தை விட்டு திரும்ப மாட்டோம். உண்மையில் உத்பா கூறியது அவரது அசல் நோக்கமல்ல. மாறாக, தனது மகன் அபூ ஹுதைஃபாவை முஹம்மதுக்கும் அவரது தோழர்களுக்கும் மத்தியில் பார்த்து விட்டதால் நீங்கள் அவரைக் கொலை செய்து விடுவீர்களோ? என்று பயந்துதான் இவ்விதம் கூறியிருப்பான்” என்றான்.

“பயத்தில் நெஞ்சு திக்திக்கென்று அடிக்கிறது. (அதாவது தொடை நடுங்கி)’ என்ற அபூஜஹ்லின் கூற்று, உத்பாவுக்கு எட்டியபோது “பயத்தால் காற்றை வெளியிடும் அவனுக்கு நெஞ்சு அடிக்கிறதா? இல்லை எனக்கா? என்பதை அதிவிரைவில் அறிந்து கொள்ளத்தான் போகிறான் என்று உத்பா கூறினான்.” உடனே அபூஜஹ்ல் எங்கே இந்த எதிர்ப்பு பெரிதாகிவிடுமோ எனப் பயந்து, அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷின் படையினரால் கொல்லப்பட்ட அம்ர் இப்னு ஹழ்ரமியின் சகோதரர் ஆமீர் இப்னு ஹழ்ரமியை அழைத்து வரச் செய்தான். ஆமீடம் “இதோ உனது நண்பன் உத்பா மக்களை அழைத்துக் கொண்டு திரும்ப விரும்புகிறார். நானோ உனது கண்ணில் பழிவாங்கும் உணர்வைப் பார்க்கிறேன். எனவே, எழுந்து உமது ஒப்பந்தத்தையும், உமது சகோதரனுக்காக பழிவாங்குவதையும் வலியுறுத்து!” என்றான். தன் பின்பக்க ஆடையை ஆமீர் அவிழ்த்துவிட்டு “அம்ருக்கு ஏற்பட்ட கைசேதமே! அம்ருக்கு ஏற்பட்ட கைசேதமே!” என ஆமிர் கூச்சலிட்டான். இவனது கூக்குரலைக் கேட்ட கூட்டத்தினர் ஆவேசம் கொண்டு கொதித்தெழுந்தனர். இதனால் சண்டையிட வேண்டுமென்ற தங்களது தீய எண்ணத்தில் குறைஷிகள் உறுதியாக நின்றனர்.

இவ்வாறு, உத்பா மக்களுக்கு கூறிய நல்ல ஆலோசனையை அபூஜஹ்ல் கெடுத்து விட்டான். ஆம்! அவ்வாறுதான் மடமை ஞானத்தை மிகைத்தது. ஹக்கீமின் இந்த எதிர்ப்பு எவ்வித பலனுமின்றி மறைந்தது.

இரு படைகளும் நேருக்கு நேர்...

குறைஷிகள் மைதானத்திற்கு வந்தனர். குறைஷிப் படையும் இஸ்லாமியப் படையும் ஒன்று மற்றொன்றை நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது, நபி (ஸல்) “அல்லாஹ்வே! இதோ குறைஷிகள் கர்வத்துடனும் மமதையுடனும் உன்னிடம் போர் செய்பவர்களாக உன்னுடைய தூதரைப் பொய்ப்பிப்பவர்களாக வந்திருக்கின்றனர். அல்லாஹ்வே! நீ எனக்கு வாக்களித்த உனது உதவியைத் தருவாயாக! இக்காலைப் பொழுதில் அவர்களை அழிப்பாயாக!” என்று பிரார்த்தனை செய்தார்கள்.

சிவப்பு நிற ஒட்டகையின் மீது உத்பா உலாவிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த நபி (ஸல்) “இந்தக் கூட்டத்திலேயே நலத்தை விரும்பும் ஒருவர் இவராகத்தான் இருக்க முடியும். இவருக்கு இக்கூட்டம் கட்டுப்பட்டால் அவர்கள் சரியான வழியை அடையக்கூடும்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) முஸ்லிம்களின் அணிகளைச் சரிசெய்து கொண்டிருந்த போது ஓர் அற்புதமான நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது நபி (ஸல்) அவர்களின் கையில் ஓர் அம்பு இருந்தது. அதன்மூலம் அணிவகுப்பைச் சரிசெய்து கொண்டிருந்தார்கள். ஸவாது இப்னு கஸிய்யா (ரழி) அணியில் சற்று முன்னால் நிற்கவே நபி (ஸல்) அவரது வயிற்றில் அந்த அம்பால் லேசாக ஒரு குத்து குத்தி “ஸவாதே! சரியாக நிற்பீராக” என்றார்கள். உடனே ஸவாது (ரழி), “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு வலியை உண்டாக்கி விட்டீர்கள். நான் உங்களிடம் பழிவாங்க வேண்டும்” என்றார். நபி (ஸல்) தனது வயிற்றை திறந்து காட்டி “பழி தீர்த்துக் கொள் ஸவாதே!” என்றார்கள். ஸவாது நபி (ஸல்) அவர்களைக் கட்டியணைத்து வயிற்றில் முத்தமிட்டார். நபி (ஸல்), “ஸவாதே! ஏன் இப்படி செய்தீர்” என்று கேட்டதற்கு “அல்லாஹ்வின் தூதரே! இதோ... என்ன நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். இறுதியாக எனது மேனி உங்களுடைய மேனியை தொட்டு விட வேண்டும் என்று பிரியப்பட்டேன்” என்றார் ஸவாது. அவன் நலத்திற்காக நபி (ஸல்) பிரார்தித்தார்கள்.

அணிகளைச் சரிசெய்த பின் தமது படையினருக்குச் சில கட்டளைகளை நபி (ஸல்) பிறப்பித்தார்கள். அதில் கூறியதாவது: “எனது இறுதிக் கட்டளை வரும் வரை நீங்கள் போரைத் தொடங்காதீர்கள் அவர்கள் உங்களை நெருங்கும் போது அவர்களை நோக்கி அம்பெறியுங்கள் அதே சமயம், அம்புகள் (அனைத்தையும் எறிந்து விடாமல்) கொஞ்சம் மீதமாக வைத்துக் கொள்ளுங்கள் அவர்கள் உங்களைச் சூழ்ந்து கொள்ளும் வரை நீங்கள் வாட்களை உருவாதீர்கள்! (ஸுனன் அபூதாவூது)

அதன் பிறகு நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரழி) அவர்களும் பரணி வீட்டிற்கு சென்றார்கள். ஸஅது இப்னு முஆது (ரழி) தனது பாதுகாப்புப் படையுடன் அவ்வீட்டைச் சுற்றிப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.

இனி எதிரிகளைப் பற்றி சிறிது பார்ப்போம்: அபூஜஹ்லும் அன்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தான். “அல்லாஹ்வே! எங்களில் உறவுகளை அதிகம் துண்டிப்பவர் நாங்கள் அறியாததை எங்களுக்கு மார்க்கமாகக் கொண்டு வந்தவர் அவரை இன்று அழித்து விடு! அல்லாஹ்வே! எங்களில் உனக்கு யார் மிகவும் விருப்பமானவராகவும் உனது திருப்திக்கு உரியவராகவும் இருக்கிறாரோ அவருக்கு உதவி செய்!”

இது குறித்தே அல்லாஹ் இந்த வனத்தை இறக்கினான்:

(நிராகரிப்பவர்களே!) நீங்கள் வெற்றியின் மூலம் (முடிவான) தீர்ப்பைத் தேடிக் கொண்டிருந்தீர்கள். நிச்சயமாக அந்த வெற்றி உங்கள் முன் வந்து விட்டது. (எனினும் அது உங்களுக்கல்ல நம்பிக்கையாளர்களுக்கே! அவர்கள்தான் உங்களை வெற்றி கொள்வார்கள். ஆகவே, விஷமம் செய்வதிலிருந்து) இனியேனும் நீங்கள் விலகிக் கொண்டால் அது உங்களுக்கே நன்று. இனியும் நீங்கள் (விஷமம் செய்ய) முன்வரும் பட்சத்தில் நாமும் முன்வருவோம். உங்களுடைய கூட்டம் எவ்வளவு பெரிதாக இருந்தபோதிலும் (அது) உங்களுக்கு எந்த பலனையுமளிக்காது. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன் 8:19)