பக்கம் -66-

நபி (ஸல்) அவர்கள் பெண்களையும் சிறுவர்களையும் மதீனாவிலிருந்த கோட்டையில் பாதுகாப்பாக வைத்து அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். அதன் பிறகு மூவாயிரம் முஸ்லிம்களுடன் எதிரிகளைச் சந்திக்கப் புறப்பட்டார்கள். அங்கு ‘ஸல்உ’ என்ற மலையைத் தங்களது முதுகுப்புறமாகவும், எதிரிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் அகழைத் தடையாகவும் ஆக்கிக் கொண்டார்கள். முஸ்லிம்களுக்கிடையில் அடையாள வார்த்தையாக ‘ஹாமீம், லா யுன்ஸரூன்’ என்ற வசனம் நிர்ணயிக்கப்பட்டது.

எதிரிகள் முஸ்லிம்களைத் தாக்கவும், மதீனாவில் நுழையவும் நாடிய போது அதற்குத் தடையாக அகழ் இருப்பதைப் பார்த்தனர். வேறு வழியின்றி முஸ்லிம்களை முற்றுகையிடுவோம் என்ற முடிவில் அனைவரும் அகழைச் சூழ்ந்து கொண்டனர். இப்படிப்பட்ட ஒரு திட்டத்தை அவர்கள் எதிர்பாராததால் அதற்கான எவ்வித தயாரிப்பும் செய்திருக்கவில்லை. அகழியைப் பார்த்த அவர்கள் “இது மாபெரும் ஒரு சூழ்ச்சி; அரபியரல்லாத ஒருவர்தான் இதைக் கூறியிருக்க வேண்டும்” என்று தங்களுக்குள் புலம்பினார்கள்.

இணைவைப்பவர்கள் மிகக் கோபத்துடன் அகழைச் சுற்றி வந்தார்கள். எங்காவது ஒரு சிறு வழி கிடைத்தால் அதன் மூலம் சென்று விடலாம் என்று முயன்றனர். ஆனால், முஸ்லிம்கள் அகழின் பக்கம் எதிரிகளை நெருங்கவிடாமல் அம்பால் தாக்கினர். அகழை நெருங்குவதோ அல்லது அகழில் இறங்குவதோ அல்லது அகழை மண்ணால் மூடி பாதை அமைப்பதோ எதிரிகளால் முடியாத அளவிற்கு முஸ்லிம்கள் அம்பு மழை பொழிந்தனர்.

குறைஷி குதிரை வீரர்களில் சிலர் முற்றுகையின் முடிவை எதிர்ப்பார்த்து அகழைச் சுற்றி நின்று கொண்டிருப்பதை வெறுத்து அகழியில் குதிப்பதற்குப் புறப்பட்டனர். அம்ர் இப்னு அப்து உத், இக்மா இப்னு அபூஜஹ்ல், ழரார் இப்னு கத்தாப் போன்றோர் அகழின் ஒரு குறுகிய இடத்தைத் தேடி அதில் இறங்கினர். பின்பு அகழிக்கும் ‘ஸல்உ’ மலைக்கும் மத்தியிலுள்ள சதுப்பான இடத்தில் அவர்களது குதிரைகள் சிக்கித் தடுமாறின. இதைப் பார்த்த அலீ இப்னு அபூதாலிப் (ரழி) முஸ்லிம்கள் சிலரை அழைத்துச் சென்று எதிரிகள் திரும்ப ஓட முடியாதவாறு அவர்கள் வந்த வழியை அடைத்து விட்டார்கள். இப்போது எதிரிகளும் முஸ்லிம்களும் நேருக்கு நேர் சந்தித்தனர். அம்ர், “தன்னிடம் நேருக்கு நேர் யார் மோதுவது?” என்று கேட்க, அலீ (ரழி) “நான்” என்றார்கள். அம்ருக்கு முன் நின்ற அலீ (ரழி), அவன் கோபமடையும்படி சில வார்த்தையைக் கூறவே அவன் கொதித்தெழுந்தான். தனது குதிரையின் காலை வெட்டி அதன் முகத்தில் வாளால் அறைந்து விட்டு அலீயை நோக்கி சீறினான். இருவரும் தங்களின் வாளை சுழற்ற சில நொடிகளில் அலீ (ரழி) அவர்களின் வாள் அம்ரின் தலையைச் சீவியது. ஆயிரம் வீரர்களுக்குச் சமமானவன் என்று பெயர் பெற்ற அம்ரை பிண்டமாகப் பார்த்த மற்றவர்கள் பயந்து அகழைத் தாண்டி ஓட்டம் பிடித்தனர். மாபெரும் வீரராக விளங்கிய இக்மா கூட பயத்தால் தனது ஈட்டியையும் போட்டுவிட்டு ஓடினார்.

எதிரிகள் அங்கு முற்றுகையிட்டிருந்த சில நாட்களில் பலமுறை அகழியில் இறங்குவதற்கும், அதன் மீது பாதை அமைப்பதற்கும் மிகத் தீவிரமாக முயன்றனர். ஆனால், முஸ்லிம்களின் அம்பு மழைக்கு எதிராக அவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. இதுபோன்ற தற்காப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால் நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சில நேரத் தொழுகைகள் தவறின.

ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள்: அகழ் போரின் போது நபி (ஸல்) அவர்களை உமர் (ரழி) சந்தித்து குறைஷிகளை ஏசினார். பிறகு “அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையப் போகிறது. ஆனால், இன்னும் நான் அஸ்ர் தொழுகவில்லை” என்றார். அதற்கு நபியவர்கள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நானும் அஸ்ரைத் தொழவில்லை” என்றார்கள். பின்பு நாங்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களுடன் ‘புத்ஹான்’ என்ற இடத்திற்குச் சென்று உழுச் செய்து சூரியன் மறைந்த பின் அஸ்ரை முதலில் தொழுது பிறகு மக்ரிப் தொழுகையைத் தொழுதோம். (ஸஹீஹுல் புகாரி)

தொழுகைகள் தவறியதற்குக் காரணமாயிருந்த இணைவைப்பவர்களுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். இது குறித்து அலீ (ரழி) கூறுகிறார்கள்:

“யா அல்லாஹ்! இவர்களின் இல்லங்களையும், புதைக்குழிகளையும் நெருப்பால் நிரப்புவாயாக! எங்களை சூரியன் மறையும் வரை அஸர் தொழவிடாமல் இவர்கள் தடுத்தனர்” என்று நபி (ஸல்) அவர்கள் வேண்டினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

முஸ்னது அஹ்மது மற்றும் முஸ்னது ஷாபிஈ ஆகிய நூற்களில் ளுஹர், அஸ்ர், மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளைத் தொழவிடாமல் தடுத்தனர் என்றும் வந்துள்ளது. ஸஹீஹுல் புகாரியில் அஸ்ர் தொழுகை மட்டும் என்று கூறப்பட்டுள்ளதை இதற்கு முன்பு பார்த்தோம். இதற்கு விளக்கத்தை இமாம் நவவி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:

“அகழ்ப்போர் பல நாட்களாக நடந்தது. அதில் சில நாட்களில் அஸ்ர் மட்டும் தொழாமல் இருந்திருக்கலாம். சில நாட்களில் மற்றும் பல தொழுகைகளையும் தொழ முடியாமல் ஆகியிருக்கலாம்.” (ஷரஹ் முஸ்லிம்)

இதிலிருந்து நமக்குத் தெரியவருவது என்னவெனில்: எதிரிகள் அகழைக் கடக்க முயற்சி செய்ததும், முஸ்லிம்கள் அதை எதிர்த்ததும் பல நாட்களாக நீடித்தது. ஆனால் இரு படைகளுக்கும் இடையில் அகழ் தடையாக இருந்ததால் நேரடியான சண்டையோ, பலத்த சேதமோ யாருக்கும் ஏற்படவில்லை. இரு தரப்பிலிருந்தும் அம்பெறிந்தே தாக்குதல் நடந்தது.

இவ்வாறு இருதரப்பினரும் அம்பெய்து கொண்டதில் விரல்விட்டு எண்ணும் அளவுக்கு இரு தரப்பிலும் ஒரு சிலர் கொல்லப்பட்டனர். அதாவது, முஸ்லிம்களில் ஆறு பேரும் இணை வைப்பவர்களில் பத்து பேரும் கொல்லப்பட்டனர். இதில் ஒரு சிலர் வாளாலும் கொல்லப்பட்டனர்.

ஸஅது இப்னு முஆத் (ரழி) அவர்களை ஓர் அம்பு தாக்கியதில் அவர்களது குடங்கையிலுள்ள நரம்பு துண்டிக்கப்பட்டது. ஹப்பான் இப்னு அக்கா என்பவன்தான் இந்த அம்பை எறிந்தான். இந்தக் காரியம் ஸஅது (ரழி) அவர்களை அதிகம் வருத்தவே அவர்கள் அல்லாஹ்விடம் “அல்லாஹ்வே! உனது தூதரைப் பொய்யாக்கி, அவர்களை வெளியாக்கிய கூட்டத்தினரைத் தவிர வேறு எவரிடமும் உனக்காக நான் போர் புரிவது எனக்கு விருப்பமாக இல்லை என்பதை நீ நன்கு அறிவாய். அல்லாஹ்வே! எங்களுக்கும் அவர்களுக்குமிடையில் போரை நீ இத்துடன் முடித்துவிட்டாய் என்றே நான் கருதுகிறேன். அல்லாஹ்வே! குறைஷிகளிடம் போர் புரிய வேண்டிய நிலை மீண்டும் ஏற்படும் என்றிருந்தால், உனக்காக நான் அவர்களிடம் போர் புரிவதற்கு என்னை உயிருடன் வாழ வை! நீ போரை முடித்துவிட்டாய் என்றிருப்பின் இக்காயத்திலேயே எனக்கு மரணத்தை ஏற்படுத்தி விடு” என்று வேண்டினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

“பனூ குரைளா யூதர்கள் குறித்து என் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் வரை என் உயிரை கைப்பற்றிவிடாதே” என்றும் வேண்டினார்கள் என ‘தாரீக் இப்னு ஷாமி“ல் கூறப்பட்டிள்ளது.

முஸ்லிம்கள் இப்போரில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டிருந்த சமயத்தில் பொந்துகளிலிருந்த விஷப் பாம்புகள் (யூதர்கள்) தங்களின் விஷத்தைக் கக்குவதற்குத் துடித்தன. நழீர் வமிச யூதர்களின் மிகப் பெரிய விஷமி ஹை இப்னு அக்தப், குரைளா இன யூதர்களின் இல்லங்களுக்குச் சென்றான். முதலில் கஅப் இப்னு அஸதிடம் வந்தான். இவன்தான் குரைளா இன யூதர்களின் தலைவன். ஹை இவனது வீட்டுக் கதவை தட்டினான். ஆனால், கஅப் கதவை பூட்டிக்கொண்டு திறக்க மறுத்துவிட்டான். ஹய் அதிகம் வற்புறுத்தவே கஅப் கதவைத் திறந்தான். அப்போது ஹை, கஅபிடம், “கஅபே! நான் உன்னிடம் உனக்கு நிரந்தரமாக கண்ணியம் தரும் ஒன்றையும், கடல் அலை போன்ற பெரிய படையையும் கொண்டு வந்திருக்கிறேன். அதாவது, குறைஷிகளை அவர்களது தலைவர்கள், தளபதிகளுடன் அழைத்து வந்து ரூமாவில் உள்ள ‘மஜ்மஉல் அஸ்யாலில்’ தங்க வைத்துள்ளேன். அவ்வாறே கத்பான் கிளையினர்களை அவர்களது தலைவர்கள், தளபதிகளுடன் அழைத்து வந்து உஹுதுக்கு அருகில் உள்ள ‘தனப் நக்மா“வில் தங்க வைத்துள்ளேன். இவர்களெல்லாம் முஹம்மதையும் அவரைப் பின்பற்றியவர்களையும் பூண்டோடு அழிக்காத வரை இங்கிருந்து திரும்ப மாட்டோம் என என்னிடம் ஒப்பந்தமும், உடன்படிக்கையும் செய்துள்ளனர்” என்றான்.

இதைக் கேட்ட கஅப்: “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ காலமெல்லாம் இழிவு தரும் செயல்களையே என்னிடம் செய்யச் சொல்கிறாய். அதுமட்டுமல்ல, நீ என்னிடம் கூறிய காரியம் எப்படியெனில் வெறும் இடிஇடித்து, மின்னல் வெட்டி மழை தராத ஒரு மேகத்தைப் போன்றதுதான். ஹய்யே! உனக்கு நாசம் உண்டாகட்டும்! என்னை எனது நிலையில் விட்டுவிடு. நான் முஹம்மதிடம் உண்மை, வாக்கை நிறைவேற்றும் தன்மை இவற்றைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை” என்றான்.

ஆனால் ஹய், கஅபைத் தொடர்ந்து மூளைச் சலவை செய்தான். இறுதியாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஓர் உடன்படிக்கையையும் செய்தான். அதாவது “முஹம்மதை அழிக்காமல் குறைஷிகள் மற்றும் கத்ஃபானியர்கள் தோல்வியுற்று திரும்பிவிட்டாலும் நான் உன்னை விட்டும் பிரிய மாட்டேன். உன்னுடன் உனது கோட்டைக்குள் நானும் இருப்பேன். முஹம்மதாலும் அவருடைய படையாலும் உனக்கு ஏற்படும் கதி எனக்கும் ஏற்படட்டும். நான் உன்னை விட்டு ஒருக்காலும் பிரியமாட்டேன்.” இந்த வாக்குறுதியை ஹை கூறியவுடன் கஅப் முஸ்லிம்களுக்கும் தனக்குமிடையிலுள்ள உடன்படிக்கையை முறித்துக் கொண்டான். அதை அடுத்து முஸ்லிம்களுக்கு எதிராகச் சண்டை செய்வதற்காக அவன் இணைவைப்பவர்களுடன் சேர்ந்து கொண்டான். (இப்னு ஹிஷாம்)

இதைத் தொடர்ந்து, உடனடியாக குரைளா இன யூதர்கள் முஸ்லிம்களுடன் போர் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்:

ஹஸ்ஸான் இப்னு ஸாபிதுக்கு சொந்தமான ‘ஃபாஉ’ என்ற கோட்டையில் நபியவர்களின் மாமியான ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிபும் மற்ற முஸ்லிம் பெண்களும் சிறுவர்களும் பாதுகாக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களுக்குத் துணையாக ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரழி) இருந்தார்.

ஸஃபிய்யா (ரழி) கூறுகிறார்: அப்போது ஒரு யூதன் அக்கோட்டையைச் சுற்றி சுற்றி வந்தான். பனூ குரைளா யூதர்கள் நபியவர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை முறித்துவிட்டு போருக்குத் ஆயத்தமாகி விட்டனர் என்பது எங்களுக்குத் தெரியவந்து, அவர்கள் எங்களைத் தாக்க நாடினால்கூட எங்களைப் பாதுகாப்பதற்கு ஹஸ்ஸானைத் தவிர யாரும் இல்லை. ஏனெனில், நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் தங்களது எதிரிகளுடன் மிகத் தீவிரமாக போரில் ஈடுபட்டிருந்தனர். எங்களைத் தாக்குவதற்கு யாராவது வந்தாலும் அவர்களால் எதிரிகளை விட்டுவிட்டு எங்களைக் காப்பாற்றுவதற்காக மதீனாவிற்குள் வர இயலாது. எனவே, நான் ஹஸ்ஸானிடம் “ஹஸ்ஸானே! இந்த யூதன் கோட்டையைச் சுற்றி வருவதை நீ பார்க்கிறாய். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாம் பாதுகாப்பின்றி இருப்பதை நமக்குப் பின்னால் இருக்கும் மற்ற யூதர்களுக்கு இவன் கூறிவிடுவானோ என நான் அஞ்சுகிறேன். நபியவர்களும் நபித் தோழர்களும் நமது நிலையை அறிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். எனவே, நீ இறங்கி சென்று அவனைக் கொன்றுவா!” எனக் கூறினேன்.

அதற்கு ஹஸ்ஸான் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அது என்னால் முடியாது என்பது உனக்கு நன்றாகவே தெரியும்” எனக் கூறிவிட்டார். உடனே நான் எனது இடுப்புத் துணியை இறுக்கிக் கட்டிக் கொண்டு ஒரு தடியைக் கையில் எடுத்தேன். பின்பு கோட்டையிலிருந்து வெளியேறிச் சென்று அந்த யூதனை நான் வைத்திருந்த கைத்தடியால் அடித்துக் கொன்றேன். பின்பு கோட்டைக்குள் வந்து “ஹஸ்ஸானே! இறங்கிச் சென்று அவனது உடைமைகளை எடுத்து வா! அவன் ஆண் என்பதால்தான் அவனது உடைமைகளை என்னால் எடுக்க முடியவில்லை” என்றேன். அது எனக்குத் தேவையில்லையென ஹஸ்ஸான் கூறிவிட்டார். (இப்னு ஹிஷாம்)