இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
இன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது; அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்ட ஈடும் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது; எந்த சிபாரிசும் அதற்கு பலனளிக்காது; இவர்கள்(எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.
(தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; பாலூட்டும் தாய்மார்களுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்; எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது; (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்; இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது; தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை; ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்; அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்; பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா.
சந்தேகமில்லாத அந்த (இறுதி) நாளில் அவர்களையெல்லாம் நாம் ஒன்று சேர்த்து ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கு உரியதை முழுமையாகக் கொடுக்கப்படும்போது (அவர்களுடைய நிலை) எப்படியிருக்கும்? அவர்கள் (தம் வினைகளுக்குரிய பலன் பெருவதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன் முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்; அல்லாஹ் தன்னைப்பற்றி நினைவு கூறுமாறு உங்களை எச்சரிக்கின்றான்; இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக இருக்கின்றான்.
மேலும், எந்த ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க, அல்லாஹ்வின் அனுமதியின்றி, மரணிப்பதில்லை; எவரேனும் இந்த உலகத்தின் பலனை (மட்டும்) விரும்பினால், நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம்; இன்னும் எவர், மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம்; நன்றியுடையோருக்கு அதி சீக்கிரமாக நற்கூலி கொடுக்கிறோம்.
எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.
அவர்களுக்கு நாம் அதில், “உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;” எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே!.
(நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை; (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது; இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்; இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம்.
“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.
“அல்லாஹ்வை அன்றி மற்றெவரையாவது நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? எல்லாப் பொருள்களுக்கும் அவனே இறைவனாக இருக்கின்றான் - பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே, கேட்டைத் தேடிக்கொள்கிறது; ஓர் ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. பின்னர், நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது; அப்போது நீங்கள் பிணங்கி விவாதம் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்” என்று (நபியே!) நீர் கூறும்.
அவனே, உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான், அவருடன் கூடி (இணைந்து) வாழ்வதற்காக அவருடைய துணைவியை (அவரிலிருந்தே) படைத்தான் - அவன் அவளை நெருங்கிய போது அவள் இலேசான கர்ப்பவதியானாள்; பின்பு அதனைச் சுமந்து நடமாடிக் கொண்டிருந்தாள்; பின்பு அது பளுவாகவே, அவர்களிருவரும் தம்மிருவரின் இறைவனிடம், “(இறைவனே!) எங்களுக்கு நீ நல்ல (சந்ததியைக்) கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் இருவரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.
அங்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்தனுப்பிய செயல்களின் பயன்களைச் சோதித்துப் பார்த்துக் கொள்வர் - பின்பு அவர்கள் தங்கள் உண்மை இறைவனான அல்லாஹ்வின் பக்கம் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள் - அவர்கள் கற்பனை செய்து கொண்ட தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்து விடும்.
(அந்த நாளின்) வேதனையைக் காணும்போது அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்; தன் கைசேதத்தையும், கழிவிரக்கத்தையும் வெளிப்படுத்தும்; ஆனால் (அந்நாளில்) அவையிடையே நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும் - (ஒரு சிறிதும்) அவற்றுக்கு அநியாயம் செய்யப்பட மாட்டாது.
(மிஸ்ரு சென்ற) அவர்கள் தம் தந்தை தங்களுக்குக் கட்டளையிட்ட படி நுழைந்ததனால் யஃகூபுடைய மனதிலிருந்து ஒரு நாட்டத்தை அவர்கள் நிறைவேற்றி வைத்தார்களே தவிர, அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதனையும் அது அவர்களை விட்டும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை; நாம்அவருக்கு அறிவித்துக் கொடுத்தவற்றில் நிச்சயமாக அவர் அறிவு(த் தேர்ச்சி) பெற்றவராக இருக்கின்றார்; எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதை அறியமாட்டார்கள்.
ஒவ்வோர் ஆத்மா சம்பாதிக்கும் ஒவ்வொன்றையும் கண்காணிப்பவன் அவனல்லவா? அப்படியிருந்தும்; அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்துகின்றார்கள். (நபியே!) நீர் கூறும்: “அவர்களின் பெயர்களைக் கூறுங்கள்; அல்லது பூமியிலுள்ள அவன் அறியாதவற்றை நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அல்லது (நீங்கள் கூறுவது) வெறும் வார்த்தைகள் தானா?” என்று. அப்படியல்ல! நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சிகள் அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளன; நேர்வழியிலிருந்து அவர்கள் தடுக்கப்பட்டும் விட்டனர். எவரை அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிட்டானோ, அவரை நேர் வழியில் செலுத்துபவர் எவருமில்லை.
(நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இவ்வாறே பல) சூழ்ச்சிகளைச் செய்துகொண்டிருந்தனர்; எனினும் எல்லா சூழ்ச்சிக(ளின் முடிவுக)ளும் அல்லாஹ்விடமே இருக்கின்றன; ஒவ்வோர் ஆத்மா சம்பாதிப்பதையும் அவன் நன்கறிவான்; மேலும், (மறுமையில்) எவர்களுக்கு நல்ல வீடு உரியது என்பதை காஃபிர்கள் சீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்.
அல்லாஹ் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கான கூலி கொடுப்பதற்காகவே (அவர்களை அல்லாஹ் இவ்வாறு செய்வான்.) நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
பின்னர் (மரக்கலத்திலிருந்து இறங்கி) இருவரும் வழி நடக்கலானார்கள்; (வழியில்) ஒரு பையனை அவ்விருவரும் சந்தித்த போது, அவர் அவனைக் கொன்று விட்டார். (உடனே மூஸா) “கொலைக்குற்றமின்றி, பரிசுத்தமான ஜீவனைக் கொன்றுவிட்டீர்களே? நிச்சயமாக நீங்கள் பெருத்தக் கேடான ஒருகாரியத்தையே செய்து விட்டீர்கள்!” என்று (மூஸா) கூறினார்.
“ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை நிச்சயமாக வரவிருக்கிறது; ஆயினும் அதை மறைத்து வைக்க நாடுகிறேன்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
இன்னும், கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது; மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும்.
அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.
நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.
மேலும் நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம்; ஆனால் “நான் நிச்சயமாக நரகத்தை - ஜின்களையும், (தீய) மனிதர்களையும் - ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்” என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துள்ளது.
அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது.
அன்றியும், அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவுக்கும் ஏதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது; இன்னும், நீங்கள் செய்தவற்றிற்கேயன்றி (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.