பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.
நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.
“நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.
“இதிலிருந்து நீ இறங்கி விடு; நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை; ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு - நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்” என்று அல்லாஹ் கூறினான்.
(அதற்கு இப்லீஸ்) “நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான்.
“பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்” (என்றும் கூறினான்).
அதற்கு இறைவன், “நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு - அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்” என்று கூறினான்.
(அதற்கு இப்லீஸ்,) “என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.
இன்னும், (நினைவு கூர்வீராக!) நாம் மலக்குகளிடம் “ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள்” என்று கூறிய போது, இப்லீஸை தவிர அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவனோ: “களி மண்ணால் நீ படைத்தவருக்கா நான் ஸுஜூது செய்ய வேண்டும்?” என்று கூறினான்.
“எனக்கு மேலாக கண்ணியப் படுத்திய இவரைப் பார்த்தாயா? நீ எனக்கு கியாம நாள்வரை அவகாசம் கொடுத்தால், நாம் இவருடைய சந்ததிகளில் சிலரைத் தவிர (மற்றவர்களை) நிச்சயமாக வழிகெடுத்து விடுவேன்” என்று (இப்லீஸ்) கூறினான்.
“இன்னும் அவர்களிலிருந்து நீ எவரை (வழி சறுகச் செய்ய) சக்தி பெற்றிருக்கிறாயோ அவர்களை உம் கூப்பாட்டைக் கொண்டு வழி சறுகச் செய்; உன்னுடைய குதிரைப் படையையும் காலாட் படையையும் கொண்டு அவர்களுக்கு எதிராக முழக்கமிடச் செய், அவர்களுடைய செல்வங்களிலும், குழந்தைகளிலும் நீ கூட்டாக இருந்து கொள்; அவர்களுக்கு(ப் பொய்யான) வாக்குறுதிகளையும் கொடு!” (என்றும் அல்லாஹ் கூறினான்); ஆகவே, ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் வெறும் ஏமாற்றேயன்றி வேறில்லை.
“நிச்சயமாக (முஃமினான) என்னுடைய அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமுமில்லை” (என்றும் அல்லாஹ் கூறினான்; நபியே! அந்த என் நல்லடியார்களைக்) காத்துக் கொள்ள உம்முடைய இறைவன் போதுமானவன்.
அன்றியும், “ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக; அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறார்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்.
“நீங்கள் ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, இப்லீஸை தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள். அவன் (அவ்வாறு செய்யாது) விலகிக் கொண்டான்.
அப்பொழுது “ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும், உம்முடைய மனைவிக்கும் பகைவனானான்; ஆதலால், உங்களிருவரையும் இச்சுவனபதியிலிருந்து திட்டமாக வெளியேற்ற (இடந்) தரவேண்டாம்; இன்றேல் நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர்.
ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி: “ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா?” என்று கேட்டான்.
அன்றியும் (தன் வழிக்கு வருவார்கள் என்று) அவர்களைப் பற்றி இப்லீஸ் எண்ணிய எண்ணத்தை நிச்சயமாக அவன் உண்மையாக்கினான்; ஆகவே, முஃமின்களிலுள்ள கூட்டத்தார் தவிர, (மற்றையோர்) அவனையே பின் பற்றினார்கள்.
எனினும் அவர்கள் மீது அவனுக்கு யாதோர் அதிகாரமுமில்லை - ஆயினும் மறுமையை நம்புகிறவர்களை அதனைப்பற்றி சந்தேகத்திலிருப்போரை விட்டும் நாம் அறி(வித்திடு)வற்காகவே (இது நடந்தது); மேலும் உம்முடைய இறைவன் அனைத்துப் பொருட்களையும் பாது காப்போனாக இருக்கின்றான்.
“இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத் தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?” என்று (அல்லாஹ்) கேட்டான்.