அரபு நாட்டில் ஆட்சி அதிகாரம்
நபி (ஸல்) அவர்கள் தங்களது ஏகத்துவ அழைப்பைத் தொடங்கிய காலகட்டத்தில் அரபிய தீபகற்பத்தில் ஆட்சி செய்தவர்கள் இரு வகையினராக இருந்தனர்.
1) முடிசூட்டப்பட்டவர்கள்: ஆனால் இவர்களில் பலர் தனித்து இயங்கும் சுதந்திரம் பெறவில்லை. மாறாக, ஒரு பேரரசுக்குக் கீழ் கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருந்தனர்.
2) குடும்பம் மற்றும் கோத்திரங்களின் தலைவர்கள்: முடிசூட்டப்பட்ட அரசர்களுக்குரிய தனித்தன்மையும் உரிமையும் இவர்களுக்கும் இருந்தன. இவர்களில் பெரும்பாலோர் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டனர். மற்றும் சிலர் ஏதாவது ஓர் அரசரின் பிரதிநிதியாக செயல்பட்டனர்.
முடியரசர்களின் விபரம் பின்வருமாறு: யமன் நாட்டு அரசர்கள், ஷாம் நாட்டு அரசர்கள், (இவர்களை கஸ்ஸானின் குடும்பத்தவர்கள் என வரலாற்றில் கூறப்படுகிறது) ஹீரா நாட்டு அரசர்கள். இவர்களைத்தவிர வேறு சில அரசர்களும் இருந்தனர். அவர்களுக்கு முறையாக முடிசூட்டப்படவில்லை. இந்த அரசர்கள் மற்றும் தலைவர்கள் பற்றி சுருக்கமாகக் காண்போம்.
அ) யமன் நாடு (ஏமன்)
‘அல் அரபுல் ஆபா’ எனும் அரபியர்கள் ‘ஸபா கூட்டத்தினர்’ என யமனில் புகழ் பெற்றிருந்த மிகப்பழமையானவர்கள். அவர்கள் கி.மு. 25 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்ததாக ‘அவ்ர்’ எனும் நகரில் நடத்திய அகழ்வாராய்ச்சியில் சான்றுகள் கிடைத்துள்ளன. கி.மு. 11 ஆம் நூற்றாண்டில் அவர்களது ஆட்சியும் ஆதிக்கமும் செழிப்படைய ஆரம்பித்தது.
அவர்களது காலத்தைப் பின்வருமாறு பிரிக்கலாம்:
1) கி.மு. 1300 லிருந்து கி.மு. 620 வரை
இக்காலகட்டத்தில் அவர்களது நாடு ‘மயீனிய்யா’ என அழைக்கப்பட்டது. நஜ்ரானுக்கும் ஹழர மவ்த்துக்குமிடையே உள்ள ‘ஜவ்ஃப்’ எனும் பகுதியில் அவர்களது ஆட்சி தோன்றி வளர்ச்சி பெற்று ஹிஜாஸின் வட பகுதியான ‘மஆன்’ மற்றும் ‘உலா’ வரை பரவியிருந்தது.
மயீனியா அரசாங்கத்தின் ஆதிக்கம் அரபிய நாடுகளின் எல்லைகளுக்கு வெளியேயும் விரிவடைந்திருந்ததாக கூறப்படுகிறது. வணிகமே அவர்களது முக்கிய வாழ்வாதாரமாகத் திகழ்ந்தது. அவர்கள்தான் மஃரப் நகரில் யமனுடைய வரலாற்றில் புகழ்பெற்ற மிகப்பெரும் அணைக்கட்டைக் கட்டினார்கள். அதனால் அவர்களது நிலங்கள் செழிப்படைந்தன. ஆயினும், அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தாமல் பாவங்கள் புரிந்தனர். இதைப்பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
... அவர்கள் (அல்லாஹ்வை) நினைப்பதையே மறந்து (தாங்களாகவே பாவம் செய்து) அழிந்துபோகும் மக்களாகி விட்டார்கள். (அல்குர்ஆன் 25 : 18)
இக்காலக்கட்டத்தில் அவர்களது அரசர்கள் ‘மக்பு ஸபஃ’ எனும் புனைப்பெயரால் அழைக்கப்பட்டனர். அவர்களது தலைநகரம் ஸிர்வாஹ் ஆகும். மஃப் எனும் நகலிருந்து வட மேற்கில் 50 கிலோ மீட்டர் தொலைவிலும் ஸன்ஆவுக்குக் கிழக்கே 142 கிலோ மீட்டர் தொலைவிலும் அந்நகரத்தின் சிதிலங்கள் காணக்கிடைக்கின்றன. அந்நகரம் இன்று ‘குரைபா’ எனும் பெயரில் அறியப்படுகிறது. இவ்வரசர்களின் எண்ணிக்கை 22 லிருந்து 26 வரை இருந்தது.