பக்கம் - 133 -
6) வெற்றியின் நற்செய்திகள்
கொடுமைகளையும் துன்பங்களையும் சந்தித்த அன்றும் அதற்கு முன்பும் இஸ்லாமை ஏற்றுக் கொள்வதென்பது சோதனைகளையும், மரணங்களையும் சந்திப்பது மட்டுமல்ல என்பதை முஸ்லிம்கள் அறிந்து வைத்திருந்தனர். மாறாக, இஸ்லாமிய அழைப்பின் நோக்கம் முற்றிலும் அறியாமையால் நிரம்பிய கொள்கைகளையும் அதன் அநியாயமான சடங்குகளையும் அடியோடு ஒழித்துவிடுவதே ஆகும். இதன்மூலம் பூமி அனைத்திலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி உலகிலுள்ள அனைத்து அரசியல் அமைப்புகளையும் வெற்றிகண்டு முழு மனித சமுதாயத்திற்கும் அல்லாஹ்வின் பொருத்தத்தின்பால் வழிகாட்டுகிறது. மேலும், படைப்பினங்களை மனிதர்கள் வணங்குவதிலிருந்து வெளியேற்றி படைத்த அல்லாஹ்வை வணங்கும் வழிக்கு இஸ்லாம் அழைத்துச் செல்கிறது என்று அவர்கள் அறிந்து வைத்திருந்தனர்.
இதுபோன்ற நற்செய்திகளை சில நேரங்களில் மிகத் தெளிவாகவும் சில நேரங்களில் சூசகமாகவும் முஸ்லிம்களுக்கு குர்ஆன் விளக்கிக் கொண்டே இருந்தது. அக்காலக்கட்டத்தில் முஸ்லிம்கள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி இருந்தார்கள். அவர்களது வாழ்க்கையே முற்றிலும் அழிந்துவிடும்படியான சோதனைகளும் நிகழ்ந்தன. அப்போது முன்சென்ற வசனங்கள் இறங்கின. அந்த வசனங்களின் கருத்துக்கள் முற்றிலும் மக்கா முஸ்லிம்களின் நிலைமைகளுக்கும் நிராகரிப்பவர்களின் நிலைமைகளுக்கும் மிகப் பொருத்தமாக இருந்தன. மேலும், அந்த வசனங்களில், நிராகரிப்பவர்கள் மற்றும் அநியாயக்காரர்களின் முடிவு அழிவுதான் என்றும் நல்லோர்கள்தான் இப்பூமியில் நிலைப்பார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆக, குர்ஆனில் கூறப்பட்ட சரித்திரங்களில் “வெகு விரைவில் மக்காவாசிகள் தோல்வியுறுவார்கள். இஸ்லாமும் முஸ்லிம்களும் வெற்றி பெறுவார்கள்” என்று தெளிவான முன் அறிவிப்புகள் இருந்தன.
இறைநம்பிக்கையாளர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்ற நற்செய்தி கூறும் பல வசனங்களும் இக்கால கட்டத்தில்தான் இறங்கின. அல்லாஹ் கூறுகிறான்:
“நம்முடைய தூதர்களாகிய நம் அடியார்களைப் பற்றி ஏற்கனவே நம்முடைய வாக்கு நிச்சயமாக முந்தி விட்டது. ஆதலால், நிச்சயமாக அவர்கள் உதவி செய்யப்படுவார்கள்.
நிச்சயமாக நம்முடைய படையினர்(களாகிய நம்பிக்கையாளர்கள்)தாம் வெற்றி பெறுவார்கள். ஆதலால், (நபியே!) சிறிது காலம் வரையில் (அல்லாஹ்வை நிராகரிக்கும்) இவர்களிலிருந்து நீங்கள் விலகி இருங்கள். (இவர்கள் எவ்வாறு தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என்பதை அறிய) அவர்களைப் பார்த்துக் கொண்டிருங்கள்.
அதிசீக்கிரத்தில் அவர்களும் அதனைக் கண்டு கொள்வார்கள். (என்னே!) நம்முடைய வேதனைக்காகவா இவர்கள் அவசரப்படுகின்றனர்? (நம்முடைய வேதனை) அவர்கள் மத்தியில் இறங்கும்போது, அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட அவர்களின் விடியற்காலை மகா கெட்டதாகிவிடும்.” (அல்குர்ஆன் 37:171-177)
“வெகு விரைவில் இவர்களுடைய கூட்டம் சிதறடிக்கப்பட்டு, (இவர்கள்) புறங்காட்டிச் செல்வார்கள்.” (அல்குர்ஆன் 54:45)
“இவர்களுடைய கூட்டத்தினர் (எம்மாத்திரம்?) மற்ற கூட்டத்தினர்களைப் போலவே இவர்களும் முறியடிக்கப்படுவார்கள்.” (அல்குர்ஆன் 38:11)
ஹபஷாவிற்குச் சென்று குடியேறிய முஸ்லிம்களைப் பற்றி இந்த வசனம் இறங்கியது:
(நம்பிக்கையாளர்களே! உங்களில்) எவர்கள் (எதிரிகளால்) துன்புறுத்தப்பட்டு பின்னர் அல்லாஹ்வுக்காக(த் தங்கள் ஊரைவிட்டு)ப் புறப்பட்டார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம் இவ்வுலகிலும் நல்ல இருப்பிடத்தையே தருவோம்; மறுமையின் கூலியோ (இதைவிட) மிகப் பெரிது. (இதனை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே? (அல்குர்ஆன் 16:41)