பக்கம் - 149 -
மதீனாவாசிகளுக்கும் யூதர்களுக்கும் சண்டை மூளும்போது “கடைசி காலத்தில் ஒரு நபி வருவார். அவருடன் சேர்ந்து நாங்கள் உங்களைக் கடுமையாகக் கொலை செய்வோம்” என்று அந்த யூதர்கள் மதீனாவாசிகளைப் பார்த்துக் கூறுவார்கள். இவ்வாறு யூதர்கள் கூறுவதை பலமுறை மதீனாவாசிகள் கேட்டிருந்தனர். எனவே, இப்போது நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்தியபோது அவர்களை அறிந்து கொள்வது மதீனாவாசிகளுக்கு மிக எளிதாக இருந்தது. (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)
நபி (ஸல்) அவர்கள் அந்த வாலிபர்களிடம் சென்று “நீங்கள் யார்?” என்று வினவ அவர்கள் “நாங்கள் கஸ்ரஜ் கிளையைச் சேர்ந்தவர்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “யூதர்களின் நண்பர்களா?” என்று கேட்க, அவர்கள் “ஆம்!” என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் “என்னுடன் சற்று அமரமாட்டீர்களா? நான் உங்களிடம் பேச வேண்டும்” என்று கூற அவர்கள் “சரி! பேசலாம்” என்று கூறி, நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்தார்கள். அவர்களுக்கு இஸ்லாமின் உண்மையையும் அதன் அழைப்பையும் விரிவாக எடுத்துக் கூறி, அல்லாஹ்வின் பக்கம் நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவர்களுக்குக் குர்ஆனையும் ஓதிக் காண்பித்தார்கள். அதற்கு அவர்களில் சிலர் சிலரிடம் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த நபியை வைத்தே யூதர்கள் உங்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தனர். எனவே, அவர்களுக்கு முன்னதாக இவன் அழைப்பை ஏற்று நீங்கள் முஸ்லிமாகி விடுங்கள்” என்று கூறினார்கள்.
இஸ்லாமைத் தழுவிய இந்த வாலிபர்கள் மதீனாவின் அறிஞர்களாக விளங்கினர். பொதுவாக மதீனாவில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த உள்நாட்டுப் போர்களால் மதீனாவாசிகள் மிகவும் நலிந்து போயிருந்தனர். நபி (ஸல்) அவர்களின் அழைப்பை ஏற்று மனங்கள் ஒன்றிணைந்தால் ஒருக்கால் இப்போர் முடிவுக்கு வரலாம் என்று அவர்கள் ஆசைப்பட்டனர். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் “எங்களது கூட்டங்களில் இருக்கும் பகைமை மற்றும் தீமையைப் போன்று வேறு எந்தக் கூட்டத்திலும் இருக்காது. அல்லாஹ் உங்கள் மூலமாக அவர்களை ஒன்று சேர்ப்பான். நாங்கள் அவர்களிடம் சென்று உங்கள் மார்க்கத்திற்கு அவர்களை அழைப்போம். நாங்கள் ஏற்றுக் கொண்ட உங்கள் மார்க்கத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவோம். அல்லாஹ் உங்கள் முன்னிலையில் அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து விட்டால் அவர்களிடம் உங்களைவிட கண்ணியத்திற்குரியவர் எவரும் இருக்க முடியாது” என்றனர்.
இவர்கள் மதீனாவுக்கு இஸ்லாமிய அழைப்பை எடுத்துச் சென்றார்கள். அங்கு மதீனாவாசிகள் ஒவ்வொருவரின் வீட்டிலும் நபி (ஸல்) அவர்கள் பற்றியே பேசப்பட்டது. (இப்னு ஹிஷாம்)
(இஸ்லாமை ஏற்றுக் கொண்ட மதீனாவாசிகளை அன்சாரிகள் (உதவியாளர்கள், ஆதரவாளர்கள்) என்று குர்ஆனிலும் நபிமொழியிலும் கூறப்படுகிறது.)
ஆயிஷாவை மணமுடித்தல்
நபித்துவத்தின் பதினோறாவது ஆண்டு ஷவ்வால் மாதம் நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். அப்போது ஆயிஷா (ரழி) அவர்களின் வயது ஆறு. பிறகு மதீனாவிற்குச் சென்ற முதல் ஆண்டு, ஆயிஷா (ரழி) அவர்களின் ஒன்பதாவது வயதில் அவர்களைத் தங்களது இல்லத்திற்கு அழைத்துக் கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)