பக்கம் - 180 -
நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய அல்லாஹ் மாபெரும் அற்புதமாகும் இது. சில எட்டுகளே நபி (ஸல்) அவர்களுக்கும் எதிரிகளுக்கும் இருந்தன. எனினும், தேடி வந்தவர்களால் நபி (ஸல்) அவர்களையும், அவர்களுடைய தோழரையும் பார்க்க முடியாமல் திரும்பி விட்டனர்.
மதீனாவின் வழியினிலே
குறைஷிகளின் வேகம் அடங்கியது அவர்களின் தேடும் வேட்டை தணிந்தது நபி (ஸல்) அவர்களைக் கைது செய்ய வேண்டுமென்ற அவர்களது கோபத் தீ அணைந்தது தொடர்ந்து மூன்று நாட்கள் அலைந்து திரிந்து தேடியும் எவ்விதப் பலனுமில்லாமல் போனது. இதை உணர்ந்த பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தனது தோழருடன் குகையிலிருந்து வெளியேறி மதீனா செல்ல ஆயத்தமானார்கள்.
மதீனா வரை தங்களுக்கு வழிகாட்டியாக அப்துல்லாஹ் இப்னு உரைக்கித் லைஸி என்பவரை நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரழி) அவர்களும் கூலிக்குப் பேசியிருந்தார்கள். இவர் முஸ்லிமாக இல்லாமல் குறைஷிகளின் மதத்தை பின்பற்றியவராக இருந்தும், இவர்மீது நம்பிக்கை கொண்டு தங்களது இரண்டு ஒட்டகங்களையும் அவரிடம் ஒப்படைத்தார்கள். மேலும், மூன்று இரவுகள் கழித்து ‘ஸவ்ர்’ மலையின் குகைக்கு வருமாறு அவரிடம் நேரம் குறித்திருந்தார்கள்.
ஹிஜ் முதல் ஆண்டு செப்டம்பர் 16 கி.பி. 622, ரபீவுல் அவ்வல் முதல் பிறை திங்கள் இரவு அப்துல்லாஹ் இப்னு உரைக்கித் இரண்டு ஒட்டகங்களுடன் அவர்களிடம் வந்து சேர்ந்தார். இதற்கு முன் நபி (ஸல்) அபூபக்ரிடம் அவரது வீட்டில் ஆலோசனை செய்து கொண்டிருந்த போது “அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இதோ எனது இரண்டு ஒட்டகங்களில் சிறந்ததை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று அபூபக்ர் (ரழி) கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) “அதற்குரிய கிரயத்திற்கு பகரமாக நான் அதை வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்கள். அபூபக்ரின் மகளார் அஸ்மா (ரழி) இருவருக்கும் பயண உணவை ஒரு துணியில் மடித்து எடுத்து வந்தார்கள். ஆனால், அதைத் தொங்க விடுவதற்குக் கயிறு எடுத்துவர மறந்து விட்டார்கள்.
அவ்விருவரும் பயணமானபோது உணவு மூட்டையை தொங்கவிட கயிறு இல்லாததால் தங்களது இடுப்பிலுள்ள கயிற்றை அவிழ்த்து அதை இரண்டாகக் கிழித்து ஒன்றின் மூலம் உணவு மூட்டையை வாகனத்தில் கட்டிவிட்டு, மற்றொன்றை தனது இடுப்பில் கட்டிக் கொண்டார்கள். எனவேதான் அஸ்மாவிற்கு “தாத்துன் நித்தாகைன்” -இரட்டைக் கச்சுடையாள்- என்று பெயர் வந்தது. (ஸஹீஹுல் புகாரி)
அல்லாஹ்வின் தூதரும் அபூபக்ரும் அவர்களுடன் ஆமிர் இப்னு புஹைராவும் பயணமானார்கள். வழிகாட்டியான அப்துல்லாஹ் இப்னு உரைக்கித் கடற்கரை வழியாக அவர்களை அழைத்துச் சென்றார். யாரும் நபி (ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து விடக்கூடாது என்பதற்காக முற்றிலும் மாறுபட்ட வழியில் அழைத்துச் சென்றார். முதலில் தெற்கு நோக்கி யமன் நாட்டை நோக்கி செல்லும் பாதையில் சென்று, பின்பு கடற்கரையை நோக்கி மேற்கு வழியாக சென்று, பின்பு அங்கிருந்து செங்கடலின் கரையை நோக்கி வடக்குப் பக்கமாக அழைத்துச் சென்றார்.