பெரிய பத்ர் போர்
மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர்
போருக்குரிய காரணம்
“உஷைரா’ என்ற போரைப் பற்றி நாம் முன்பு குறிப்பிட்டபோது மக்காவிலிருந்து ஷாமிற்கு சென்று கொண்டிருந்த வியாபாரக் கூட்டம் ஒன்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து தப்பித்து விட்டது என்று கூறியிருந்தோம். இந்த வியாபாரக் கூட்டம் ஷாமிலிருந்து மக்காவிற்கு திரும்பும் நாள் நெருங்கிய போது இதன் செய்தியை அறிந்து வருவதற்காக தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், ஸஈது இப்னு ஜைது (ரழி) ஆகிய இருவரை நபி (ஸல்) மதீனாவின் வடக்குத் திசையின் பக்கம் அனுப்பினார்கள். இவ்விருவரும் ‘ஹவ்ரா’ என்ற இடத்தை அடைந்து அங்கு தங்கியிருந்தனர். அபூ ஸுஃப்யான் வியாபாரக் கூட்டத்துடன் அவ்விடத்தை அடைந்த போது அவ்விருவரும் மதீனாவிற்குத் திரும்பி, செய்தியை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.
இந்த வியாபாரக் கூட்டம் மிகப்பெரிய அளவில் குறைஷித் தலைவர்களுக்குரிய செல்வங்களுடன் சென்று கொண்டிருந்தது. இவர்களிடம் 50,000 தங்க நாணயங்களுக்குக் குறையாத அளவு வியாபாரப் பொருட்கள் 1,000 ஒட்டகங்களில் வந்து கொண்டிருந்தன. ஆனால், இவ்வளவு பெரிய வியாபாரக் கூட்டத்தைப் பாதுகாப்பதற்கு 40 வீரர்கள் மட்டுமே இருந்தனர்.
மக்காவாசிகளுக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய சேதத்தை உண்டு பண்ணுவதற்கு இது முஸ்லிம்களுக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாகும். இந்த சேதத்தை ஏற்படுத்திவிட்டால் காலங்காலமாக காஃபிர்களின் உள்ளங்கள் துடிதுடித்துக் கொண்டேயிருக்கும். இப்போது நபி (ஸல்) முஸ்லிம்களுக்கு அறிவிப்புச் செய்தார்கள். “இதோ... குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் அவர்களது பொருட்களுடன் வருகிறது. அக்கூட்டத்தை நோக்கி நீங்கள் புறப்படுங்கள். அல்லாஹ் அந்தப் பொருட்களை உங்களுக்கு அளிக்கக் கூடும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
இப்போரில் கலந்துகொள்ள வேண்டுமென நபி (ஸல்) எவரையும் வலியுறுத்தவில்லை. காரணம் வியாபாரக் கூட்டத்திற்குப் பதிலாக மக்காவின் படையினருடன் பத்ர் மைதானத்தில் பெரிய அளவில் மூர்க்கமான சண்டையும் மோதலும் நிகழுமென்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதாவது, செல்வங்களுக்குப் பதில் சண்டை நிகழுமென்று அப்பொழுது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாததால் இப்பயணத்தில் கலந்து கொள்வது அவரவரின் விருப்பம் என்று நபி (ஸல்) விட்டு விட்டார்கள். இதற்கு முன்பு தாங்கள் கண்ட சிறிய பெரிய ராணுவப் பயணங்களில் நிகழ்ந்ததைப் போன்றுதான் இந்தப் பயணத்திலும் நிகழும் என்றெண்ணி அதிகமான நபித்தோழர்கள் இப்பயணத்தில் கலந்துகொள்ளாமல் மதீனாவிலேயே தங்கிவிட்டனர். அதை நபி (ஸல்) அவர்களும் குற்றமாகக் கருதவில்லை.