பக்கம் - 225 -
ஆலோசனை சபை
திடீரென ஏற்பட்ட அபாயகரமான சூழ்நிலையைக் கருதி நபி (ஸல்) ராணுவத்தின் உயர்மட்ட ஆலோசனை சபையைக் கூட்டினார்கள். அதில், தற்போதுள்ள நிலைமையைச் சுட்டிக்காட்டி தங்களது படையினருடனும் அதன் தளபதிகளுடனும் கருத்துகளைப் பறிமாறிக் கொண்டார்கள். அப்போது சிலருடைய உள்ளங்கள் அச்சத்தால் நடுங்கின. இரத்தம் சிந்தும்படியானப் போரை பயந்தனர். இவர்களைப் பற்றிதான் அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:
(நபியே!) உங்களது இறைவன் உங்கள் இல்லத்திலிருந்து சத்தியத்தைக் கொண்டு உங்களை வெளியேற்றிய சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு கூட்டத்தினர் (உங்களுடன் வர) விரும்பாதவாறே, (போர் செய்வது அவசியம் என) அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்த பின்னரும் இந்த உண்மையான விஷயத்தில் அவர்கள் உங்களுடன் தர்க்கிக்கின்றனர். தங்கள் கண்ணால் காணும் மரணத்தின் பக்கமே அவர்கள் ஓட்டிச் செல்லப்படுகின்றனர் போலும்! (அல்குர்ஆன் 8:5, 6)
ஆனால், படையின் தளபதிகளோ மிகத்துணிவுடன் இருந்தார்கள். அபூபக்ர் (ரழி) எழுந்து பேசினார்கள் அழகாகப் பேசி முடித்தார்கள். பின்பு உமர் (ரழி) எழுந்து அவர்களும் அழகாகப் பேசினார்கள். பின்பு மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) எழுந்து பேசினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் செல்லுங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! சங்கைமிகு குர்ஆனில்,
“மூஸாவே! அவர்கள் அதில் இருக்கும் வரையில் ஒருக்காலும் நாங்கள் அதில் செல்லவே மாட்டோம். நீங்களும், உங்களுடைய இறைவனும் (அங்கு) சென்று (அவர்களுடன்) போர் புரியுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக்) கொண்டிருப்போம்.” (அல்குர்ஆன் 5:24)
என்று இஸ்ரவேலர் நபி மூஸா (அலை) அவர்களிடம் கூறியதைப் போல் நாங்கள் உங்களிடம் கூறமாட்டோம். மாறாக, நீங்களும் உங்களது இறைவனும் போர் புரியுங்கள். நாங்களும் உங்கள் இருவருடன் சேர்ந்து போர் புரிவோம். சத்தியத்தைக் கொண்டு உங்களை அனுப்பியவன் மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு ‘பர்குல் ஃகிமாது“” என்ற இடம் வரை சென்றாலும் நாங்களும் உங்களுடன் மிகத்துணிவுடன் வருவோம்.” இவ்வாறு மிக்தாத் (ரழி) கூறிமுடித்தார்.
அவன் வீர உரையைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் அவரைப் பாராட்டி புகழ்ந்து அவருக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள்.