பக்கம் - 249 -
வாழ்த்த வந்தவர்கள்
இரண்டு தூதர்களின் மூலமாக வெற்றியின் நற்செய்தியை அறிந்தவுடன் முஸ்லிம்களும் அவர்களது தலைவர்களும் நபி (ஸல்) அவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டனர். இவர்களின் சந்திப்பு ‘ரவ்ஹா’ என்ற இடத்தில் நபி (ஸல்) அவர்களுடன் நிகழ்ந்தது. அப்போது அவர்களிடம் மதீனாவைச் சேர்ந்த ஸலமா இப்னு ஸலாமா (ரழி) “நீங்கள் எங்களுக்கு எதற்கு வாழ்த்து சொல்கிறீர்கள்.? கட்டப்பட்ட ஒட்டகத்தைப் போன்றிருந்த சொட்டைத் தலை கிழவர்களைத்தான் நாங்கள் போரில் எதிர்கொண்டோம். எனவே, எளிதில் அவர்களது கழுத்துகளை அறுத்தோம்” என்று கூறினார். நபி (ஸல்) புன்முறுவல் பூத்து “எனது சகோதரன் மகனே! நீ யாரை அப்படி கூறுகிறாயோ அவர்கள்தான் (குறைஷிகளின்) தலைவர்கள்” என்றார்கள்.
மதீனாவின் தலைவர்களில் ஒருவரான உஸைத் இப்னு ஹுழைர் (ரழி) வாழ்த்து கூறும்போது: “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு வெற்றியளித்து உங்கள் கண்ணை குளிரச் செய்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்! நீங்கள் எதிரிகளுடன் போர் புரிய நேரிடும் என்று நினைத்து பத்ருக்கு வருவதிலிருந்து நான் பின்வாங்கவில்லை. மாறாக, வியாபாரக் கூட்டத்தைத்தான் நீங்கள் சந்திக்கச் செல்கிறீர்கள் என்று எண்ணினேன். ஆகையால்தான் உங்களுடன் புறப்படவில்லை. நீங்கள் எதிரிகளை சந்திக்க நேரிடும் என்று எனக்குத் தெரிந்திருந்தால் நான் ஒருக்காலும் பின்வாங்கியிருக்க மாட்டேன்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) “நீர் உண்மை கூறுகிறீர்” என்றார்கள்.
இவ்வாறு பல தலைவர்களின் வாழ்த்துகளைக் கேட்டு, பதிலளித்தப் பிறகு நபி (ஸல்) மதீனாவிற்குள் நுழைந்தார்கள். பெரும் வெற்றி பெற்று வரும் அவர்களை மதீனாவிலிருந்த எதிரிகளும், மதீனாவை சுற்றியிருந்த எதிரிகளும் அஞ்சினர். இஸ்லாமின் வெற்றியைக் கண்டு அதை உண்மை மார்க்கம் என அறிந்த பலர் மனமுவந்து இஸ்லாமைத் தழுவினர். மற்றொருபுறம் சில விஷமிகள் வேறு வழியின்றி தாங்களும் இஸ்லாமைத் தழுவுகிறோம் என்றனர். ஆனால் மனதுக்குள் இஸ்லாமையும் முஸ்லிம்களையும் வெறுத்தனர். அத்தகையோர்தான் அப்துல்லாஹ் இப்னு உபையும் அவனது நண்பர்களும் ஆவர். இந்த நயவஞ்சகர்கள் இஸ்லாமிற்குச் செய்த துரோகங்களை இந்நூலில் அவசியமான இடங்களில் நாம் கூறுவோம்.
நபி (ஸல்) மதீனாவிற்கு வந்த ஒரு நாள் கழித்து கைதிகள் மதீனாவிற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களைத் தங்களது தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து, அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென உபதேசித்தார்கள். நபி (ஸல்) அவர்களின் இந்த உபதேசத்தை செயல்படுத்தும் விதமாக, கைதிகளுக்கு ரொட்டிகளை உண்ணக் கொடுத்து, நபித்தோழர்கள் பேரீத்தம் பழங்களைப் புசித்தார்கள்.
கைதிகளின் விவகாரம்
நபி (ஸல்) தங்களது தோழர்களுடன் கைதிகளைப் பற்றி ஆலோசித்தார்கள். அப்போது அபூபக்ர் (ரழி) “அல்லாஹ்வின் தூதரே! இவர்கள் நமது தந்தை வழி உறவினர்கள். நமது சகோதரர்கள் மற்றும் நெருக்கமான குடும்பத்தார்கள். எனவே, (இவர்களை கொலை செய்யாமல்) இவர்களிடம் (ஃபித்யா) ஈட்டுத்தொகை பெற்றுக் கொண்டு இவர்களை விடுதலை செய்வோம். நாம் வாங்கும் ஈட்டுத்தொகை இறைநிராகரிப்பாளர்களை எதிர்ப்பதற்கு நமக்கு உதவியாக இருக்கும். அதிவிரைவில் அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி காட்டக் கூடும். அப்போது இவர்களும் நமக்கு உதவியாளர்களாக மாறுவர்” என்று கூறினார்கள்.