பக்கம் - 25 -
இதன் விளைவாக மக்களிடையே புகழ்பெறும் நோக்கில் செலவிடுதல், விருந்தினரை உபசரித்தல், தர்ம சிந்தனையுடனும் விவேகத்துடனும் நடந்துகொள்ளுதல், எதிரிகளிடம் வீரத்தையும் வலிமையையும் வெளிப்படுத்துதல் போன்றவைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வந்தனர். அவ்வாறே அக்காலத்தில் சமூகங்களின் பிரதிநிதிகளாகத் திகழ்ந்த கவிஞர்களிடம் புகழைப் பெற்று போட்டியாளர்களிடையே தங்களது மதிப்பை உயர்த்திக்கொள்ள பெரிதும் முயன்றனர்.
தலைவர்களுக்கென சில சிறப்பு உரிமைகள் இருந்தன. அவர்கள் மிர்பாஃ, ஸஃபிய், நஷீத்தா, ஃபுழூல் என்ற பெயர்களில் மக்களது செல்வங்களை அனுபவித்து வந்தனர்.
இதுகுறித்து ஒரு கவிஞர் கூறுகிறார்:
“எமது வெற்றிப் பொருளில் கால் பங்கும், நீ விரும்பி எடுத்துக் கொண்டதும், வழியில் கிடைத்த பொருளும், பங்கிட முடியாத மிஞ்சிய பொருளும் உனக்கே சொந்தமானது. எங்களில் உனது அதிகாரமே செல்லுபடியானது.”
மிர்பாஃ: இது போரில் கிடைக்கும் வெற்றிப் பொருளில் நான்கில் ஒரு பகுதி.
ஸஃபிய்: வெற்றிப் பொருளை (கனீமத்) பங்கீடு செய்வதற்கு முன், தலைவர்கள் தங்களுக்கு விருப்பமானதை எடுத்துக் கொள்வது.
நஷீத்தா: இது போருக்குச் செல்லும் வழியில் தலைவருக்குக் கிடைக்கும் பொருள்கள்.
ஃபுழூல்: இது வெற்றிப் பொருளில் பங்கீடு செய்ய இயலாத வகையில் மீதமாகும் பொருள்கள். ஒட்டகைகள், குதிரைகள் போன்று!
அரசியல் பின்னணி
அரபிய அரசர்களைப் பற்றி அலசிய நாம் அவர்களது அரசியல் பின்னணிகளைப் பற்றியும் அலசுவது அவசியம்! அரபிய தீபகற்பத்தில் அந்நிய நாடுகளுடன் ஒட்டியிருந்த மூன்று எல்லை பகுதிகளிலும் அரசியல் நிலைமை மிகவும் தலைகீழாக இருந்தது. அம்மக்களில் சிலர் அடிமைகளாகவும், சிலர் சுதந்திரமானவர்களாகவும் இருந்தார்கள். தலைவர்களாக இருந்த அந்நியர்கள் செல்வங்கள் அனைத்திற்கும் உரிமை கொண்டாடினர். சுமைகள் அனைத்தையும் குடிமக்கள் மீது சுமத்தினர். சுருங்கக் கூறின் குடிமக்கள் தங்களது அரசாங்கத்திற்கு விவசாய நிலங்களைப் போன்றிருந்தனர். அரசாங்கத்திற்கு பணி செய்வதும் பயனளிப்பதுமே அவர்களது கடமையாக இருந்தது. அரசர்கள் தங்களது ஆசாபாசம், பாவம், அநீதம் போன்ற தீய செயல்களுக்கு மக்களைப் பயன்படுத்தினர். குடிமக்களுக்கு நாலாதிசைகளில் இருந்தும் அநீதி இழைக்கப்பட்டது. அவர்கள் தங்களது அறியாமையால் செய்வதறியாது நிலைதடுமாறி நின்றனர். எவரிடமும் முறையிடுவதற்குக் கூட வலிமையற்று தங்கள் மீது இழைக்கப்படும் அநீதங்களை சகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அக்கால அரசாங்கம் ஒரு சர்வாதிகாரமாகவே இருந்தது. மக்களின் உரிமைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன் பாழாக்கப்பட்டன.
இந்தப் பகுதிகளுக்கு அருகில் வாழ்ந்த மக்களும் தடுமாற்றத்தில் இருந்தனர். அவர்கள் சில சமயம் இராக் வாசிகளுடனும், சில சமயம் ஷாம் வாசிகளுடனும் சேர்ந்து கொள்வார்கள்.
அரபிய தீபகற்பத்தின் உட்பகுதியில் வசித்துக் கொண்டிருந்த கோத்திரத்தாரும் ஒற்றுமையின்றி பிரிந்து வாழ்ந்து வந்தனர். அவர்களிடையே சமய மற்றும் இன ரீதியான மோதல்களும், சச்சரவுகளும் மிகைத்திருந்தன. அதைப் பற்றி அவர்களில் ஒரு கவிஞர் கூறுகிறார்:
“நான் கூட கஜிய்யா குலத்தவனே! கஜிய்யா வழிகெட்டால்...
நானும் வழிகெடுவேன். அவர்கள் நேர்வழி நடப்பின் நானும் நேர்வழி நடப்பேன்.”