பக்கம் - 257 -
பின்பு “உமைரே! நீர் எதற்காக இங்கு வந்தீர்” என்று கேட்டார்கள். அதற்கு, “உங்களிடம் இருக்கும் இந்த கைதிக்காக வந்திருக்கிறேன். அவருடன் நல்லமுறையில் நடந்து கொள்ளுங்கள்” என்றார் உமைர்.
அதற்கு நபி (ஸல்) “உமது கழுத்தில் ஏன் வாள் தொங்குகிறது” என்று கேட்டார்கள். அவர் “இந்த வாள் நாசமாகட்டும். இது எங்களுக்கு என்ன பலனை அளித்தது” என்று கூறினார்.
நபி (ஸல்), “என்னிடம் உண்மையை சொல். நீர் வந்ததன் நோக்கம் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கவர் “நான் அந்த நோக்கத்தில்தான் வந்தேன்” என்றார்.
அதற்கு நபி (ஸல்) “இல்லை. நீயும் ஸஃப்வானும் கஅபாவிற்கு அருகில் அமர்ந்து பத்ரில் கொல்லப்பட்ட குறைஷிகளைப் பற்றி பேசினீர்கள். பின்பு நீ “தன் மீது கடனும் தனது குடும்பத்தார்களின் பொறுப்பும் இல்லையெனில், தான் முஹம்மதை கொலை செய்து வருவேன் என்று கூறினீர்! நீ என்னைக் கொல்ல வேண்டுமென்பதற்காக உனது கடன் மற்றும் உனது குடும்ப பொறுப்பை ஸஃப்வான் ஏற்றுக்கொண்டான். ஆனால், இப்போது உனக்கும் உனது அந்த நோக்கத்திற்குமிடையில் அல்லாஹ் தடையாக இருக்கிறான்” என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட உமைர் “நீங்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன். வானத்தின் செய்திகளையும், உங்களுக்கு இறங்கும் இறைஅறிவிப்பையும் நீங்கள் எங்களுக்கு கூறியபோது உங்களை நாங்கள் பொய்யர் என்று கூறினோம். ஆனால் உங்களை கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்த போது என்னையும் ஸஃப்வானையும் தவிர வேறு யாரும் அங்கு இருக்கவில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்தான் இந்த செய்தியை உங்களுக்கு அறிவித்தான் என்று நான் நன்கறிகிறேன். எனக்கு இஸ்லாமின் பக்கம் நேர்வழி காட்டிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்! அவனே இங்கு என்னை அனுப்பினான்” என்று கூறி, இஸ்லாமின் ஏகத்துவத்தை மனமாற மொழிந்தார்கள். அதற்குப் பின், நபி (ஸல்) அவர்கள் “உங்களின் சகோதரருக்கு மார்க்கச் சட்டங்களையும் குர்ஆனையும் கற்றுக் கொடுங்கள். அவரது கைதியை விடுதலைச் செய்யுங்கள்” என்று கூறினார்கள்.
“பத்ரினால் ஏற்பட்ட பாதிப்பை நீங்கள் மறக்கும்படியான ஒரு நற்செய்தி வெகு விரைவில் உங்களுக்குக் கிடைக்கும்” என்று ஸஃப்வான் மக்காவாசிகளிடம் கூறுவான். மேலும் மதீனாவிலிருந்து வரும் வழிப்போக்கர்களிடமும் உமைரைப் பற்றி விசாரிப்பான். இறுதியாக ஒருவர் உமைர் முஸ்லிமாகிவிட்டார் என்ற செய்தியை ஸஃப்வானுக்கு அறிவிக்க, அவன் அதிர்ச்சியால் உறைந்தான். “அவருடன் பேச மாட்டேன், அவருக்கு ஒருபோதும் எந்த உதவியும் செய்ய மாட்டேன்” என்று சத்தியம் செய்தான்.
உமைர் மதீனாவில் இஸ்லாமியக் கல்வியைக் கற்று, மக்கா திரும்பி அங்கு மக்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தார். அவரது கரத்தில் பலர் இஸ்லாமைத் தழுவினர். (இப்னு ஹிஷாம்)
கைனுகா கிளையினருடன் போர்
யூதர்களுடன் நபி (ஸல்) செய்த ஒப்பந்தங்களைப் பற்றி இதற்கு முன் நாம் கூறியிருக்கிறோம். அந்த ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதில் நபி (ஸல்) அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். முஸ்லிம்களில் எவரும் அந்த ஒப்பந்தத்தின் ஒரு எழுத்திற்குக் கூட மாறு செய்யாமல் நடந்தனர். ஆனால் மோசடி, ஒப்பந்தத்தை முறித்தல் மற்றும் துரோகம் செய்தல் ஆகியவற்றுக்கு வரலாற்றில் பெயர்போன யூதர்களோ தங்களின் இயல்புக்குத் தக்கவாறே நடந்தனர். குறுகிய காலத்திலேயே முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்ச்சியை ஆரம்பித்ததுடன் அவர்களுக்குள் பழைய பகைமையையும் சலசலப்பையும் கிளப்பினர். மேலும், முஸ்லிம்களுக்கு மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த முயன்றனர். இதற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்: