பக்கம் - 294 -
நபி (ஸல்) அவர்கள் “உங்களது சகோதரரைக் காப்பாற்றுங்கள்! அவர் தனக்கு சொர்க்கத்தை சொந்தமாக்கிக் கொண்டார்” என்று கூறினார்கள். நபியவர்களின் முகம் தாக்கப்பட்டிருந்ததால் அவர்களது முகக்கவசத்தின் இரண்டு ஆணிகள் கண்ணுக்குக் கீழ் பகுதியில் புகுந்து விட்டன. நான் அதை எடுக்க விரும்பினேன். அப்போது அபூ உபைதா (ரழி) “அபூபக்ரே! அல்லாஹ்வுக்காக கேட்கிறேன். அதை நான்தான் செய்வேன்” என்று கூறினார். பின்பு அபூ உபைதா (ரழி) நபியவர்களுக்கு வலி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தனது வாயால் அதை மிக மென்மையாக எடுக்க முயற்சித்தார். பிறகு, அதை நபியவர்களின் முகத்திலிருந்து பல்லால் கடித்து எடுத்தார். அதனால் அவரது முன் பல் விழுந்து விட்டது. இரண்டாவது ஆணியை அகற்ற நான் விரும்பினேன். அப்போதும் அபூ உபைதா (ரழி) “அல்லாஹ்வுக்காக கேட்கிறேன். நான்தான் அதையும் எடுப்பேன்” என்று கூறி, முன்பு செய்தது போன்றே மிக மெதுவாக எடுத்தபோது அபூ உபைதாவின் இன்னொரு பல்லும் விழுந்துவிட்டது. மீண்டும் நபியவர்கள் “உங்களது சகோதரரைக் காப்பாற்றுங்கள். அவர் தனக்கு சொர்க்கத்தை சொந்தமாக்கிக் கொண்டார்” என்று கூறினார்கள். நாங்கள் தல்ஹா (ரழி) அவர்களைத் தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தோம். அவருக்கு பத்து வாள் வெட்டுகள் விழுந்திருந்தன. சிகிச்சை அளித்த சிறிது நேரத்தில் மீண்டும் தல்ஹா (ரழி) நபியவர்களிடம் வந்துவிட்டார்கள்.” (ஜாதுல் மஆது, இப்னு ப்பான்)
இந்த சிரமமான வினாடிகளில் முஸ்லிம் மாவீரர்களின் ஒரு கூட்டம் நபி (ஸல்) அவர்களைச் சுற்றி குழுமியது. அவர்களில் அபூ துஜானா, முஸ்அப் இப்னு உமைர், அலீ இப்னு அபூதாலிப், ஸஹ்ல் இப்னு ஹுனைஃப், அபூ ஸயீத் குத்யின் தகப்பனாரான மாலிக் இப்னு சினான், உம்மு அமாரா பின்த் கஅப் அல் மாஜினியா என்ற பெண்மணி, கதாதா இப்னு நுஃமான், உமர் இப்னுல் கத்தாப், ஹாத்திப் இப்னு அபூபல்தஆ, அபூ தல்ஹா (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகியோர் அதில் அடங்குவர். (முஸ்னது அபீ யஃலா)
எதிரிகளின் தாக்குதல் வேகமாகுதல்
நபி (ஸல்) அவர்களைத் தாக்க விரைந்த எதிரிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நேரமும் அதிகரித்தவாறே இருந்தது. அவ்வாறே படையின் மற்ற பகுதிகளிலும் முஸ்லிம்கள் மீதும் எதிரிகளின் தாக்குதல் கடுமையானது. ‘அபூ ஆமிர்’ என்ற எதி, போர் மைதானத்தின் பல இடங்களில் தோண்டி வைத்திருந்த பள்ளங்கள் ஒன்றில் நபி (ஸல்) அவர்கள் விழுந்து விட்டார்கள். அதில் அவர்களது மூட்டுக்கால் காயமடைந்தது. பிறகு அலீ (ரழி) அவர்களின் உதவியால் நபியவர்கள் பள்ளத்திலிருந்து மேலே எழுந்தார்கள்.
இப்போரில் கலந்த முஹாஜிர்களில் ஒருவர் போரின் நிலைமை குறித்து விவரிக்கிறார்: “நான் உஹுத் போரில் கலந்து கொண்டேன். நபி (ஸல்) அவர்களை நோக்கி அம்புகள் ஒவ்வொரு திசையிலிருந்தும் எறியப்பட்டன. ஆனால், அவை நபியவர்களைத் தாக்கிவிடாமல் அல்லாஹ் பாதுகாத்தான். எதிரிகளில் ஒருவனான இப்னு ஷிஹாப் ஜுஹ் என்பவன் “எனக்கு முஹம்மதைக் காட்டுங்கள். அவர் உயிருடன் தப்பித்தால் நான் தப்பிக்க முடியாது” என்று கத்திக் கொண்டிருந்தான். அப்போது நபியவர்கள் அவனுக்கு அருகில்தான் இருந்தார்கள். எனினும், அவனால் அவர்களைப் பார்க்க முடியவில்லை. சிறிது நேரத்திற்குப் பின் நபியவர்கள் வேறு பக்கம் சென்றுவிட்ட போது, “உனக்கு அருகில்தானே முஹம்மது இருந்தார். அவரை நீ கொன்று இருக்கலாமே” என்று எதிரிப் படையின் தளபதிகளில் ஒருவரான ஸஃப்வான் இப்னு ஷிஹாப் இடம் கூறினார். அதற்கு “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அவரைப் பார்க்கவில்லையே! அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான் சொல்கிறேன். அவர் நம்மிடமிருந்து காப்பாற்றப்பட்டு விட்டார். நாங்கள் நான்கு நபர்கள் அவரைக் கொல்ல வேண்டும் என்ற உறுதியுடன் அவரைத் தேடி அலைந்தோம். ஆனால், எங்களால் அவரருகில் செல்ல முடியவில்லை” என்று இப்னு ஷிஹாப் கூறினான். (ஜாதுல் மஆது)