பக்கம் - 313 -
(1) இதுபோன்ற கடுஞ்சோதனையின் போது முஸ்லிம்கள் மேற்கொண்டிருக்க வேண்டிய கடமைகள், (2) இச்சமுதாயம் உருவான உயர்ந்த அடிப்படை நோக்கங்கள், (3) மற்ற சமுதாயத்தை விட மிகச் சிறந்த சமுதாயமாக விளங்குபவர்களிடம் இருக்க வேண்டிய சீரிய பண்புகள் ஆகிய இம்மூன்றையும் முன்வைத்து பார்க்கும்போது முஸ்லிம்களிடம் அந்த குறைபாடுகளும் பலவீனங்களும் இருந்திக்கக் கூடாது என்று குர்ஆன் உணர்த்துகிறது.
இவ்வாறே நயவஞ்சகர்களின் நிலைமையைப் பற்றி குர்ஆன் விவரிக்கிறது. அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும், நயவஞ்சகர்கள் உள்ளத்தில் கொண்டிருந்த வஞ்சகத்தை வெளிப்படுத்தி அவர்களை இழிவடையச் செய்தது. யூதர்களும், நயவஞ்சகர்களும் பரப்பி வந்த சந்தேகங்களையும், உறுதி குறைந்த முஸ்லிம்களின் உள்ளத்திலிருந்த சந்தேகங்களையும் குர்ஆன் அகற்றியது. மேலும், இந்த போரினால் ஏற்படவிருக்கும் நல்ல முடிவுகளையும் அதிலுள்ள நுட்பங்களையும் குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது. இப்போரைப் பற்றி அத்தியாயம் ஆல இம்ரானில் அறுபது வசனங்கள் அருளப்பட்டன. அதில் போரின் தொடக்கதிலிருந்து இறுதி வரை நடந்த அனைத்தும் விவரிக்கப்பட்டது. அதன் தொடக்கம் இவ்வாறு ஆரம்பிக்கிறது.
(நபியே!) நினைவு கூர்வீராக:) நீர் விடியற்காலையில் உம் குடும்பத்தாரை விட்டுச் சென்று முஃமின்களைப் போருக்காக (உஹது களத்தில் அவரவர்) இடத்தில் நிறுத்தினீர்; அல்லாஹ் எல்லாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 3:121
அதன் இறுதி இப்போரின் விளைவுகள் பற்றியும் அதன் நுட்பங்கள் பற்றியும் மிகச் சரியான விமர்சனங்களுடன் முடிகிறது.
“குஃப்ரில் அவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக்கவலை கொள்ளச் செய்ய வேண்டாம்; நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்துவிட முடியாது; அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்பாக்கியம் எதுவும் ஆக்காமல் இருக்கவே நாடுகிறான்; அவர்களுக்குப் பெரும் வேதனையும் உண்டு. அல்குர்ஆன் 3:176
இப்போரின் அழகிய முடிவுகளும் நுட்பங்களும்
அறிஞர் இப்னு ஹஜர் (ரஹ்) இது குறித்து பின்வருமாறு கூறுகிறார்: உஹுத் போரிலும் அதில் முஸ்லிம்களுக்கு நிகழ்ந்தவற்றிலும் பல படிப்பினைகளும் இறை நுட்பங்களும் உள்ளன். அவற்றில் சிலவற்றைக் கீழே பார்ப்போம்:
1) பாவத்தினால் உண்டாகும் கெட்ட முடிவுகள் மற்றும் தடுக்கப்பட்டதை செய்வதனால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை, அம்பெறியும் வீரர்கள் அவ்விடத்திலிருந்து விலகக் கூடாது என்று நபி(ஸல்) கூறியதற்கு மாற்றம் செய்ததால் ஏற்பட்ட விளைவுகளைப் பார்த்து விளங்கிக் கொள்ளலாம்.