பக்கம் - 316 -
அபூ ஸலமா படைப் பிரிவு (ஹிஜ்ரி 4, முஹர்ரம்)
உஹுதில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பின் முஸ்லிம்களுக்கு எதிராக கிளம்பிய முதல் கூட்டம் அஸத் இப்னு குஜைமா வமிசமாகும். தல்ஹா இப்னு குவைலித், ஸலமா இப்னு குவைலித் ஆகிய இருவரும் தங்கள் கூட்டத்தினரையும் தங்களுக்குக் கட்டுப்பட்டவர்களையும் அழைத்துக் கொண்டு அஸத் இப்னு குஜைமாவினரிடம் வந்தனர். அவர்களை முஸ்லிம்களின் மீது போர் புரிய தூண்டினர். இந்தச் செய்தி நபி(ஸல்0 அவர்களுக்குக் கிடைத்தவுடன் 150 வீரர்கள் கொண்ட படைப் பிரிவை ஏற்பாடு செய்து அஸது கிளையினரை எதிர்க்க அனுப்பினார்கள். இப்படையில் முஹாஜிர்களும் அன்சாரிகளும் பங்கேற்றனர். அப்படைப் பிரிவிற்கு அபூ ஸலமாவைத் தளபதியாக்கி அவரிடம் கொடியைக் கொடுத்தார்கள். அஸத் கிளையினர் தாக்குதல் நடத்த தயாராகும் முன் அவர்கள் தங்களுடைய வீடுகளில் இருக்கும் போதே அவர்கள் மீது அபூஸலமா (ரழி) தனது படையினரை அழைத்துக் கொண்டு திடீரெனத் தாக்கினார்கள். இதைச் சற்றும் எதிர்பாராத அவர்கள் திக்குமுக்காடி தப்பித்துக் கொள்ள பல பக்கங்களிலும் சிதறி ஓடி ஒளிந்தனர். முஸ்லிம்கள் அஸதினரின் ஒட்டகங்களையும் ஆடுகளையும் பிடித்துக் கொண்டு மதீனா வந்தனர். அஸதினர் எதிர்க்காததால் சண்டை ஏதும் நடைபெறவில்லை.
ஏற்கனவே அபூ ஸலமாவிற்கு உஹுத் போரில் ஏற்பட்ட காயம் பெரிதாகி விடவே போரிலிருந்து மதீனா வந்தடைந்த சில நாட்களிலேயே அவர்கள் உயிர் பிரிந்தது. (ஜாதுல் மஆது)
அப்துல்லாஹ் இப்னு உனைஸை அனுப்புதல்
ஹிஜ்ரி 4, முஹர்ரம் மாதம் பிறை 5ல் காலித் இப்னு சுஃப்யான் என்பவன் முஸ்லிம்களிடம் போர் செய்ய கூட்டம் சேர்ப்பதாக நபியவர்களுக்குச் செய்தி எட்டியது. இதனை அறிந்த நபியவர்கள், அவனைக் கொன்று வர அப்துல்லாஹ் இப்னு உனைஸ் (ரழி) அவர்களை அனுப்பினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு உனைஸ் (ரழி) அவனைக் கொன்றுவர 18 இரவுகள் எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் முஹர்ரம் மாதம் முடிய 7 நாட்கள் இருக்கும் போது சனிக்கிழமை மதீனாவிற்குத் திரும்பினார்கள். அவர்கள் காலித் இப்னு சுஃப்யானைக் கொன்று அவனது தலையைக் கொய்து வந்தார்கள். அத்தலையை நபி(ஸல்) அவர்களுக்க முன் வைக்க, நபியவர்கள் மகிழ்ச்சியடைந்து ஒரு கைத்தடியை அவருக்கு வழங்கி “இது மறுமையில் எனக்கும் உனக்கும் மத்தியிலுள்ள அடையாளம்” என்றார்கள். நபியவர்களின் கைத்தடியைத் தனது வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து வைத்திருந்த அப்துல்லாஹ் (ரழி) அதை தனது கஃபனுடன் (மரணித்தவரை போர்த்தும் உடை) சேர்த்து தனது அடக்கஸ்தலத்தில் வைக்கப்பட வேண்டுமென வஸிய்யா (மரண சாஸனம்) செய்தார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
ரஜீஃ குழு
ஹிஜ்ரி 4, ஸஃபர் மாதம் அழல் மற்றும் காரா வமிசத்தை சேர்ந்த ஒரு கூட்டம் நபி (ஸல்) அவர்களை சந்தித்து தங்களில் பலர் இஸ்லாத்தைத் தழுவ விரும்புகின்றனர். அவர்களுக்கு இஸ்லாமையும் குர்ஆனையும் கற்றுத் தர தங்களுடன் சிலரை அனுப்புமாறு கோரினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று 6 நபர்களை நபியவர்கள் அனுப்பினார்கள். அவர்களுக்கு மர்ஸத் இப்னு அபூமர்ஸத் கனவி (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். இது இப்னு இஸ்ஹாக்கின் கூற்றாகும்.
“அனுப்பப்பட்டவர்கள் 10 நபர்கள்; அவர்களுக்குத் தலைவாரக ஆஸிம் இப்னு ஸாபித் (ரழி) இருந்தார்கள்” என்பது இமாம் புகாரியின் கூற்றாகும்.