பக்கம் - 320 -
அம்ர் இப்னு உமையா (ரழி) மதீனா திரும்பும் வழியில் கனாத் என்ற பள்ளத்தாக்கில் உள்ள கர்கரா என்ற இடத்தில் ஒரு மர நிழலில் தங்கினார். அப்போது கிலாப் கோத்திரத்தை சேர்ந்த இருவரும் அதே இடத்தில் வந்து தங்கினர். அம்ர் அவ்விருவரையும் எதிரிகளைச் சேர்ந்தவர்கள் என்றெண்ணி அவ்விருவரும் நன்கு கண் அயர்ந்துவிட்ட பின் தனது தோழர்களுக்காக பழிவாங்கும் நோக்கத்தில் அவ்விருவரையும் கொன்று விட்டார். ஆனால், கொன்று முடித்தபின் அவ்விருவரிடமும் நபி(ஸல்) அவர்களின் ஒப்பந்தக் கடிதம் இருப்பதை பார்த்தார். அது அவருக்கு முன்னதாக தெரியாது. மதீனா வந்தடைந்ததும் தனது செயலை நபியவர்களிடம் கூறி வருந்தினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “நீ கொலை செய்த இருவருக்காக நான் நிச்சயம் தியத் (கொலைக் குற்றத்திற்குரிய பரிகாரத் தொகை) கொடுக்க வேண்டியது கடமையாகிவிட்டது எனக் கூறி, முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்களின் ஒப்பந்தகாரர்களான யூதர்களிடம் இந்த தியத்தை வசூல் செய்து கொடுத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

சில நாட்களுக்கள் நடந்த ரஜீஃ, பிஃரு மஊன் ஆகிய இவ்விரு நிகழ்ச்சிகள் நபி(ஸல்) அவர்களுக்குப் பெரும் கவலை அளித்தன. நபியர்வகள் மிகுந்த சஞ்சலத்திலும் துக்கத்திலும் ஆழ்ந்தார்கள். தங்களின் தோழர்களுக்கு மோசடி செய்த கூட்டத்தினருக்கு எதிராக நபியவர்கள் பிரார்தித்தார்கள். (இப்னு ஸஆது)

அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: தங்களின் தோழர்களை பிஃரு மஊனா வில் கொன்றவர்களை நபி(ஸல்) அவர்கள் முப்பது நாட்கள் சபித்தார்கள். ஃபஜ்ரு தொழுகையில் ரிஃலு, தக்வான், லஹ்யான், உஸய்யா ஆகிய கோத்திரத்தினருக்கு எதிராக நபியவர்கள் பிரார்த்தனை (குனூத் நாஜிலா) செய்தார்கள். மோசடி செய்த ஒவ்வொரு வகுப்பாரின் பெயரை கூறி வரும்போது “உஸய்யா வமிசத்தினர் அல்லாஹ்வுக்கும் அவது தூதருக்கும் மாறு செய்தனர்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் வசனம் ஒன்றை இறக்கினான். ஆனால், அதை அல்லாஹ் பிற்காலத்தில் குர்ஆனிலிருந்து எடுத்துவிட்டான். “நாங்கள் எங்களது இறைவனை சந்தித்தோம், அவன் எங்களை பொருந்திக் கொண்டான். நாங்களும் அவனை பொருந்திக் கொண்டோம் என்ற செய்தியை எங்களது கூட்டத்தினருக்கு எடுத்து சொல்லிவிடுங்கள்” என்பதே அவ்வசனம். அதற்குப் பின் நபி(ஸல்) அவர்கள் தங்களது இந்த பிரார்த்தனையை நிறுத்திக் கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)


நழீர் இனத்தவருடன் போர் (ஹிஜ்ரி 4 ரபீஉல் அவ்வல், கி.பி. 625 ஆகஸ்டு)

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வளர்ச்சியைப் பார்த்து யூதர்கள் உள்ளுக்குள் எரிந்தனர். முஸ்லிம்களை எதிர்க்க ஆற்றலும் துணிவும் இல்லாததால் சூழ்ச்சி செய்வதிலும், சதித்திட்டம் தீட்டுவதிலும் ஈடுபட்டு வந்தனர். தங்களின் பகைமை மற்றும் குரோதத்தையும் அவ்வப்போது வெளிப்படுத்தினர். போர் புரியாமல் வேறு பலவகை தந்திரங்களைக் கொண்டு முஸ்லிம்களுக்கு தொந்தரவு கொடுத்தனர். தங்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் உடன்படிக்கை மற்றும் ஒப்பந்தங்கள் இருந்தும் அதையெல்லாம் சிறிதும் மதிக்காமல் நடந்தனர். கைனுகா குடும்பத்தைச் சேர்ந்த யூதர்களுக்கு நேர்ந்த கதியையும், கஅபு இப்னு அஷ்ரஃபுக்கு நேர்ந்த கதியையும் பார்த்ததும் இவர்கள் தங்களின் அட்டூழியங்களை அடக்கிக்கொண்டு விஷமத்தனங்களை நிறுத்திக் கொண்டனர்.