பக்கம் - 354 -
குழுக்களையும் படைப்பிரிவுகளையும் தொடர்ந்து அனுப்புதல்
மேற்கூறப்பட்ட நிகழ்ச்சிக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக பல குழுக்களையும் படைப்பிரிவுகளையும் அனுப்பினார்கள். அதன் சுருக்கம் வருமாறு:
1) உக்காஷா இப்னு மிஹ்ஸன் (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் நாற்பது தோழர்களை ‘கம்ர்’ என்ற இடத்துக்கு ஹிஜ்ரி 6, ரபீஉல் அவ்வல் அல்லது ரபீஉல் ஆகில் நபியவர்கள் அனுப்பினார்கள். ‘கம்ர்’ என்பது அஸத் கிளையினருக்கு சொந்தமான கிணற்றுக்குரிய பெயராகும். அங்குதான் அவர்கள் வசித்து வந்தனர். முஸ்லிம்களின் வருகையை அறிந்த அக்கூட்டத்தினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களின் இருநூறு ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு முஸ்லிம்கள் மதீனா திரும்பினர்.
2) முஹம்மதிப்னு மஸ்லமா (ரழி) அவர்களைப் பத்து தோழர்களுடன் ஸஅலபா கிளையினர் வசிக்கும் ‘துல்கஸ்ஸா’ என்ற இடத்திற்கு ஹிஜ்ரி 6, ரபிஉல் அவ்வல் அல்லது ரபிஉல் ஆகில் நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். முஸ்லிம்களின் வருகையை அறிந்த ஸஅலபாவினர் இரகசியமாக மறைந்து கொண்டனர். நபித்தோழர்கள் ஓர் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரெனத் தாக்குதல் நடத்தி முஹம்மதிப்னு மஸ்லமாவைத் தவிர மற்ற அனைவரையும் கொன்று விட்டனர். இவர் மட்டும் காயத்துடன் தப்பித்து மதீனா வந்து சேர்ந்தார்.
3) இந்நிகழ்ச்சிக்குப் பின் அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ் (ரழி) அவர்களை நாற்பது தோழர்களுடன் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 6, ரபிஉல் ஆகில் துல்கஸ்ஸாவிற்கு அனுப்பி வைத்தார்கள். இவர்கள் இரவெல்லாம் நடந்து சென்று காலையில் ஸஅலபாவினர் மீது படையெடுத்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் தப்பித்து மலைகளுக்கு ஓடிவிட்டனர். அவர்களிலிருந்து ஒருவரை மட்டும் முஸ்லிம்களால் பிடிக்க முடிந்தது. பிறகு அவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். முஸ்லிம்கள் எதிரிகளின் கால்நடைகளை ஓட்டிக் கொண்டு மதீனா திரும்பினர்.
4) ஹிஜ்ரி 6, ரபிஉல் ஆகிர் மாதத்தில் ஜைதுப்னு ஹாரிஸா (ரழி) அவர்களை ‘ஜமூம்’ என்ற இடத்திற்கு நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். ஜமூம் என்பது ‘மர்ருல் ளஹ்ரான்’ என்ற இடத்திலுள்ள சுலைம் கிளையினருக்கு சொந்தமான கிணறாகும். ஜைத் அவர்கள் பனூ சுலைம் கிளையினரை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது முஸைனா கிளையைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கைது செய்தார்கள். அவரது பெயர் ஹலீமாவாகும். அப்பெண் சுலைமினருக்கு சொந்தமான இடங்களைக் காண்பித்துக் கொடுத்தார். அங்கு சென்று முஸ்லிம்கள் அதிகமான கால்நடைகளையும், கைதிகளையும் பிடித்து வந்தனர். மதீனா திரும்பியவுடன் விஷயம் அறிந்து நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை உரிமையிட்டு திருமணமும் முடித்து வைத்தார்கள்.
5) ஹிஜ்ரி 6, ஜுமாதா அல்ஊலா மாதத்தில் ‘ஈஸ்’ என்ற இடத்திற்கு ஜைத் அவர்களை 170 வீரர்களுடன் அனுப்பி வைத்தார்கள். அங்கு குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் நபி (ஸல்) அவர்களின் மருமகனார் அபுல் ஆஸின் தலைமையின் கீழ் தங்கியிருந்தது. அங்கு சென்று முஸ்லிம்கள் அனைத்தையும் கைப்பற்றினர். ஆனால், அபுல் ஆஸ் தப்பிச் சென்று மதீனாவில் நபியவர்களின் மகளார் ஜைனபிடம் அடைக்கலம் தேடினார். மேலும், தனது பொருட்களைத் திருப்பித் தருமாறு நபியவர்களிடம் கோரும்படி ஜைனபிடம் கேட்டுக் கொண்டார். அவரும் தனது கணவன் கோரிக்கையை நபியவர்களிடம் சொல்லவே, நபியவர்கள் பொருள்களை திரும்பத் தருமாறு மக்களிடம் கேட்டார்கள். ஆனால், எவரையும் அதற்காக நிர்பந்தப் படுத்தவில்லை.
நபியவர்களின் விருப்பத்திற்கிணங்க சிறிய பெரிய அனைத்து பொருட்களையும் நபித் தோழர்கள் திரும்பக் கொடுத்து விட்டனர். அபுல் ஆஸ் அவற்றை எடுத்துக் கொண்டு மக்கா சென்று உரியவர்களிடம் அப்பொருட்களை ஒப்படைத்துவிட்டு இஸ்லாமை ஏற்று மதீனா திரும்பினார். நபி (ஸல்) அவர்கள் மூன்று வருடம் கழித்துத் திரும்பிய தமது மருமகன் அபுல் ஆஸிற்குத் தனது மகள் ஜைனபை முதல் திருமண ஒப்பந்தத்தைக் கொண்டே சேர்த்து வைத்தார்கள். இவ்வாறுதான் ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளில் வந்துள்ளது. (ஸுனன் அபூதாவூது)