பக்கம் - 357 -
இப்போரைப் பற்றி இவ்வாறுதான் பல வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், அறிஞர் இப்னுல் கய்” (ரஹ்) இதற்கு மாற்றமாகக் கூறுகிறார். அவர் கூறுவதாவது: இப்படையெடுப்பில் சண்டை ஏதும் நடைபெறவில்லை. மாறாக, நபி (ஸல்) அவர்கள் முஸ்தலக் கிளையினர் மீது தாக்குதல் நடத்த வந்தார்கள். முஸ்தலக் கிளையினர் கொள்ளையிடுவதற்காக தங்கள் ஊரை விட்டு வெளியில் சென்றிருந்தனர். நபியவர்கள் அவர்களின் குடும்பங்களையும் பொருட்களையும் கைப்பற்றிக் கொண்டு திரும்பினார்கள். இவ்வாறுதான் ஸஹீஹுல் புகாரியிலும் வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் இக்கூட்டத்தின் தலைவர் ஹாரிஸின் மகள் ஜுவைரியாவும் இருந்தார். இவரை ஸாபித் இப்னு கைஸ் (ரழி) தனது பங்கில் பெற்றார். இவரை உரிமை விடுவதற்காக இவரிடம் ஓர் ஈட்டுத் தொகை பேசி ஸாபித் (ரழி) ஒப்பந்தம் செய்து கொண்டார். நபி (ஸல்) அவர்கள் ஜுவைரியாவின் சார்பாக அத்தொகையைக் கொடுத்து விட்டார்கள். பின்பு ஜுவைரியாவைப் பெண் பேசி திருமணம் செய்து கொண்டார்கள். நபியவர்களின் திருமணத்தின் காரணமாக முஸ்தலக் கிளையைச் சேர்ந்த நூறு குடும்பத்தினரை முஸ்லிம்கள் உரிமையிட்டனர். ஏனெனில், இப்போது இந்த கைதிகளெல்லாம் நபியவர்களின் மாமனார் குடும்பத்தைச் சேர்ந்தவர் களாயிற்றே! அவர்களை எப்படி நாம் அடிமைகளாக வைத்திருப்பது என்று நபித்தோழர்கள் காரணம் கூறினார்கள். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)
இப்போரில் ஏற்பட்ட ஏனைய சம்பவங்களின் தலையாய காரணமாக இருந்தவன் நயவஞ்ச கர்களின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபையும் அவனது கூட்டாளிகளுமே. ஆகவே, இஸ்லாமியச் சமுதாயத்தில் இந்நயவஞ்சகர்களின் செயல்பாடுகள் பற்றி முதலில் சற்று தெரிந்து கொள்வது அவசியமாகும்.
நயவஞ்சகர்களின் நடவடிக்கைகள்
அப்துல்லாஹ் இப்னு உபை இஸ்லாமின் மீதும் முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நபி (ஸல்) அவர்களின் மீதும் எல்லையற்ற எரிச்சல் கொண்டிருந்தான். அதற்குக் காரணம் அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு கிளையினரும் இவனைத் தலைவனாக்கி மணிமகுடம் சூட்டுவதற்குத் தயாராக இருந்த சமயத்தில் நபி (ஸல்) வருகை தர, அவர்கள் அனைவரும் இவனைப் புறக்கணித்து விட்டு நபி (ஸல்) அவர்களின் பக்கம் திரும்பிவிட்டனர். இதனால் நபியவர்கள்தான் தனது ஆட்சியை பறித்துக் கொண்டார்கள் என்று இவன் மனம் புழுங்கிக் கொண்டிருந்தான்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்ததிலிருந்து இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளும் முன்பும், ஏற்றுக் கொண்ட பின்பும் இந்த பகைமையையும் கசப்பையும் வெளிப்படையாகவே காட்டிக் கொண்டிருந்தான். ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் ஸஅது இப்னு உபாதா (ரழி) அவர்களை நலம் விசாரிப்பதற்காக கழுதையின் மீது சென்று கொண்டிருந்தார்கள். அப்போது வழியில் ஒரு சபையில் அப்துல்லாஹ் இப்னு உபை அமர்ந்திருந்தான். அவனைக் கடந்து செல்லும்போது “முஹம்மதே! எங்களின் மீது புழுதியைக் கிளப்பாதீர்” என்று கூறினான். நபி (ஸல்) அவர்கள் அச்சபையில் நின்று குர்ஆன் ஓதிக் காண்பித்தார்கள். அதற்கு அவன் “நீ உனது வீட்டில் உட்கார்ந்து கொள்! எங்களது சபையில் வந்து எங்களைத் தொந்தரவு செய்யாதே” என்று நபி (ஸல்) அவர்களைப் பார்த்து கூறினான். இது அவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சியாகும். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், இப்னு ஹிஷாம்)