பக்கம் - 370 -
மக்கா குறைஷிகளின் நிலையை அறிந்து, தன்னிடம் தெரிவிப்பதற்காக குஜாஆ கிளையைச் சேர்ந்த ஒற்றர் ஒருவரை நபி (ஸல்) நியமித்து, தனக்கு முன் அவரை அனுப்பி வைத்தார்கள். நபி (ஸல்) ‘உஸ்ஃபான்’ என்ற இடத்தில் இருக்கும் போது அங்கு நபியவர்களின் ஒற்றர் வந்து “கஅப் இப்னு லுவை என்பவன் உங்களை எதிர்ப்பதற்காகவும், அல்லாஹ்வின் இல்லத்தை விட்டும் உங்களைத் தடுப்பதற்காகவும் கினானா குடும்பத்தைச் சேர்ந்த வீரர்களை ஒன்று சேர்த்து வைத்திருக்கிறான்” என்ற அதிர்ச்சி தரும் தகவலைக் கூறினார். அதைக் கேட்ட நபியவர்கள் தங்களது தோழர்களிடம் ஆலோசனை செய்தார்கள்.
“ஒன்று, நம்மை எதிர்ப்பதற்கும் தடுப்பதற்கும் குறைஷிகளுக்கு உதவியாக இருக்கும் கினானாவினன் குடும்பத்தார்களை நாம் சிறை பிடிப்போம். அதனால் அவர்கள் போருக்கு வராமல் பின்வாங்கி, குடும்பத்தை இழந்த துக்கத்தில் மூழ்கலாம். அல்லது அவர்கள் தப்பித்து வேறு எங்காவது சென்றாலும் நம்மை எதிர்க்க வந்தவர்களை அல்லாஹ் முறியடித்ததாக ஆகிவிடும். இரண்டாவது, நாம் அல்லாஹ்வின் வீட்டை நோக்கிப் புறப்படுவோம். யார் நம்மை தடுக்க வருகிறார்களோ அவர்களிடத்தில் நாம் சண்டையிடுவோம்.”
“இவ்விரண்டில் உங்களது கருத்து என்ன?” என்று நபி (ஸல்) தங்களது தோழர்களிடம் கேட்டார்கள். அப்போது அபூபக்ர் (ரழி) “அல்லாஹ்வும் அவனது தூதரும் மிக அறிந்தவர்கள். நாம் உம்ரா செய்வதற்காக வந்திருக்கிறோம். எவரிடத்திலும் போர் செய்வதற்காக வரவில்லை. அல்லாஹ்வின் இல்லத்திலிருந்து எவராவது நம்மைத் தடுத்தால் நாம் அவர்களிடத்தில் சண்டையிடுவோம்” என்று கூறினார்கள். அதற்குப் பின் நபி (ஸல்) புறப்படுங்கள் என்று கட்டளையிட, முஸ்லிம்கள் மக்கா நோக்கிப் புறப்பட்டார்கள்.
தடுக்க முயற்சித்தல்
நபி (ஸல்) அவர்களின் வருகையைக் கேள்விப்பட்ட குறைஷிகள் அவசர ஆலோசனை சபையைக் கூட்டி, எப்படியாவது முஸ்லிம்களை கஅபத்துல்லாஹ்விற்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். கினானா கிளையினரை புறக்கணித்து விட்டு நபியவர்கள் மக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த போது, கஅப் கிளையைச் சேர்ந்த ஒருவர் “குறைஷிகள் ‘தூ துவா’ என்ற இடத்தில் வந்து தங்கியிருக்கின்றனர். மேலும், காலித் இப்னு வலீத் 200 குதிரை வீரர்களுடன் ‘குராவு கமீம்’ என்ற இடத்தில் மக்காவை நோக்கி செல்லும் முக்கிய வழியில் போர் புரிவதற்காகத் தயாராக இருக்கிறார்” என்று அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். முஸ்லிம்களைத் தடுக்க வேண்டுமென்று காலித் பெரும் முயற்சி செய்தார். தனது குதிரைப் படையை முஸ்லிம்கள் பார்க்கும் தூரத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். அப்போது முஸ்லிம்கள் லுஹர் தொழுகையைத் தொழுதார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த காலித், “தொழுகையில் ருகூவு ஸுஜூதில் இருக்கும்போது நம்மை இவர்கள் கவனிக்கவில்லை அந்த நேரத்தில் நாம் தாக்கியிருந்தால் இவர்களுக்கு பெரும் சேதத்தை விளைவித்திருக்கலாம். எனவே, இவர்கள் அஸர் தொழும் போது இவர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்றெண்ணி காத்திருந்தார். ஆனால், அஸ்ர் தொழுகைக்கு முன் ‘ஸலாத்துல் கவ்ஃப்’ அச்சமுள்ள நேரத்தில் எவ்வாறு தொழ வேண்டும் என்ற சட்டத்தை அல்லாஹ் இறக்கி விட்டான். முஸ்லிம்கள் அந்த அடிப்படையில் தொழுது கொள்ளவே காலிதின் நோக்கம் நிறைவேறாமல் போனது.