பக்கம் - 407 -
அதற்கவர் ஒரு பாதையைக் குறிப்பிட்டு அதன் பெயர் ‘ஹஜன்’ (சிரமமானது) என்றார். நபியவர்கள் “அது வேண்டாம்” என்று மறுத்து விட்டார்கள். அடுத்த பாதையை சுட்டிக்காட்டி அதன் பெயர் ‘ஷாஸ்’ (பிந்தது) என்றார். அதையும் வேண்டாமென்று மறுத்து விட்டார்கள். மூன்றாவதாக, ஒரு பாதையைக் காண்பித்து, அதன் பெயர் ‘ஹாதிப்’ (விறகு பொறுக்குபவர்) என்றார். அதையும் நபி (ஸல்) புறக்கணித்து விட்டார்கள். நான்காவதாக, “அல்லாஹ்வின் தூதரே! இப்போது நாம் செல்வதற்கு ஒரு வழிதான் மீதம் இருக்கிறது” என்று ஹுஸைல் கூறினார். நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் இருந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த உமர் (ரழி) அவர்கள் “அந்த வழியின் பெயரென்ன” என்று வினவ, அவர் ‘மர்ஹப்’ (சந்தோஷமானது, வரவேற்கத்தக்கது) என்றார். உடனே நபியவர்கள் அப்பாதையில் அழைத்துச் செல்லும்படி கூறினார்கள்.
வழியில் நடந்த சில நிகழ்ச்சிகள்
1) ஸலமா இப்னு அக்வா (ரழி) அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சென்று கொண்டிருந்தோம். ஓர் இரவில் எனது சகோதரர் ஆமிடம் “எங்களுக்கு உமது கவிதைகளை பாடிக் காட்டலாமே” என்று ஒருவர் கேட்டார். ஆமிர் நல்ல திறமையான கவிஞராக இருந்தார். உடனே அவர் தனது வாகனத்திலிருந்து கீழிறங்கி கூட்டத்தினரின் வாகனங்களை,
“அல்லாஹ்வே! நீ இன்றி நாம் நேர்வழி பெறோம்.
தர்மம் செய்திலோம் தொழுதிறோம்.
எங்கள் மீது மன அமைதி இறக்குவாயாக!
எதிர்கொள்ளும் போது பாதங்களை நிலைநிறுத்துவாயாக!
இவர்கள் எமக்கு அநீதமிழைக்கின்றார்கள்.
அவர்கள் குழப்ப நினைத்தால் அதற்கு நாம்
அனுமதியோம் அனுமதியோம்”
நபி (ஸல்) “வாகனங்களை அழைத்துச் செல்லும் இவர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு “ஆமிர் இப்னு அக்வா” என்று மக்கள் கூறினர். “அல்லாஹ் அவருக்குக் கருணை காட்டட்டும்” என்று நபி (ஸல்) கூறினார்கள். ஒருவர் “அல்லாஹ்வின் தூதரே! உங்களின் பிரார்த்தனையால் அவருக்கு வீரமரணம் (ஷஹாதத்) கடமையாகி விட்டதே. அவர் இன்னும் சிறிது காலம் வாழ்ந்தால் எங்களுக்குப் பலனாக இருக்குமே!” என்று கூறினார். அதாவது நபியவர்கள் போரின்போது யாருக்காவது குறிப்பிட்டு பிரார்த்தனை செய்தால் அவர் அப்போல் கொல்லப்படுவார் என்பதை மக்கள் அறிந்திருந்தார்கள். அவ்வாறே கைபர் போரிலும் நடந்தது.
2) கைபருக்கு அருகிலுள்ள ‘ஸஹ்பா’ என்ற இடத்தில் அஸ்ர் தொழுகை நடத்தினார்கள். தொழுத பிறகு, மக்களிடம் அவர்கள் வைத்திருக்கும் உணவுகளைக் கொண்டுவரச் சொன்னார்கள். மக்களிடம் சத்துமாவைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அந்தச் சத்துமாவை விரிப்பில் பரப்பி வைத்து நபியவர்களும் தோழர்களும் சாப்பிட்டனர். பின்பு மஃரிப் தொழுகைக்காக நபி (ஸல்) தயாரானார்கள். புதிதாக ஒழுச் செய்யாமல் வாய் மட்டும் கொப்பளித்து விட்டு நபி (ஸல்) அவர்களும் மக்களும் மஃரிப் தொழுகையில் ஈடுபட்டனர். பின்பு அந்த இடத்திலேயே இஷா தொழுகையையும் நிறைவேற்றினார்கள்.
3) கைபருக்கு அருகில் சென்றவுடன் தங்களது படையை நிறுத்தி நபி (ஸல்) அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்:
“அல்லாஹ்வே! ஏழு வானங்கள் மற்றும் அதற்குக் கீழ் உள்ளவற்றின் இறைவனே! ஏழு பூமிகள் மற்றும் அவற்றுக்கு மேலுள்ளவற்றின் இறைவனே! ஷைத்தான்கள் மற்றும் அவை வழி கெடுத்தவற்றின் இறைவனே! காற்றுகள் மற்றும் அவை வீசி எறிந்தவற்றின் இறைவனே! நிச்சயமாக நாங்கள் இந்த ஊரிலுள்ள நன்மையையும், இந்த ஊரில் வசிப்பவர்களில் உள்ள நன்மையையும், இந்த ஊரில் இருப்பவற்றில் உள்ள நன்மையையும் உன்னிடம் கேட்கிறோம். நிச்சயமாக இந்த ஊரிலுள்ள தீங்கை விட்டும், இந்த ஊரில் வசிப்பவர்களில் உள்ள தீங்கை விட்டும், இந்த ஊரில் இருப்பவற்றில் உள்ள தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறோம். பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால்) இந்த ஊருக்குள் நுழைகிறோம்” என்று கூறினார்கள்.