பக்கம் - 416 -
பிறகு அவர் நபியவர்களை சந்திக்கப் புறப்பட்டபோது நாங்களும் அவருடன் புறப்பட்டோம். நாங்கள் நபியவர்களை சந்திக்க மதீனா வந்தபோது அவர்கள் மதீனாவிலிருந்து கைபருக்கு புறப்பட்டு விட்டார்கள். நாங்களும் கைபர் சென்றோம். கைபர் போரில் கலந்து கொள்ளாத எவருக்கும் கைபரில் கிடைத்த கனீமத்தில் பங்கு கொடுக்கவில்லை. ஆனால், எங்களுக்கும் ஜஅஃபர் மற்றும் அவரது தோழர்களுக்கும் நபி (ஸல்) கைபரின் கனீமத்தில் பங்கு கொடுத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)
ஜஅஃபர் (ரழி) வந்தபோது அவரை வரவேற்று அவரது இரு கண்களுக்கிடையில் நபி (ஸல்) அவர்கள் முத்தமிட்டார்கள். பின்பு “எனது அதிக மகிழ்ச்சிக்கு என்ன காரணம்? கைபரின் வெற்றியா? ஜஅஃபன் வருகையா? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அறியேன்” என்று கூறினார்கள். (முஃஜமுத் தப்ரானி, ஜாதுல் மஆது)
குறிப்பு: நபி (ஸல்) அவர்கள் அம்ர் இப்னு உமைய்யா ழம் (ரழி) அவர்களை நஜ்ஜாஷியிடம் அனுப்பி ஜஅஃபரையும் அவரது தோழர்களையும் அழைத்து வருமாறு கூறினார்கள். நஜ்ஜாஷி அவர்களை நபியவர்களிடம் அனுப்பி வைத்தார். அந்நேரத்தில் அவர்கள் மொத்தம் 16 நபர்கள் இருந்தனர். மற்றவர்களெல்லாம் இதற்கு முன்னதாகவே மதீனா வந்து விட்டனர். இந்த சமயத்தில் தான் அபூ மூஸாவும் ஜஅஃபருடன் வந்தார்.
ஸஃபிய்யாவுடன் திருமணம்
இவன் கணவர் கினானா இப்னு அபூ ஹுகைக் மோசடி செய்த குற்றத்தால் கொல்லப்பட்டார். ஆகவே, இவர் கைதியானார். கைதிகள் ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்பட்டனர். திஹ்யா இப்னு கலீஃபா (ரழி) என்ற தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! கைதிகளில் இருந்து எனக்கு ஒரு பெண்ணைத் தாருங்கள்” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் “உனக்கு விருப்பமான ஒரு பெண்ணை அழைத்துச் செல்!” என்று கூறினார்கள். அவர் கைதிகளிலிருந்த ஸஃபிய்யா பின்த் ஹையை அழைத்துச் சென்றார்.
அதைப் பார்த்த மற்றொரு தோழர் நபியவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! குரைளா, நளீர் ஆகிய இரண்டு கிளையினருக்கும் தலைவியான ஸஃபிய்யாவை நீங்கள் திஹ்யாவிற்கு கொடுத்தீர்களா? அப்பெண் உங்களைத் தவிர வேறு யாருக்கும் தகுதியானவரல்ல” என்று கூறினார். அதற்கு நபியவர்கள் “அவரை ஸஃபிய்யாவுடன் அழைத்து வாருங்கள்” என்றார்கள். திஹ்யா ஸஃபிய்யாவுடன் வரவே நபி (ஸல்) ஸஃபிய்யாவைப் பார்த்தார்கள். பின்பு திஹ்யாவிடம் “கைதிகளில் வேறொரு பெண்ணை நீங்கள் அழைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். அதற்குப் பின் ஸஃபிய்யாவுக்கு இஸ்லாமைப் பற்றி எடுத்துக் கூற, அவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். நபியவர்கள் ஸஃபிய்யா (ரழி) அவர்களை உரிமைவிட்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவரை உரிமைவிட்டதையே அவருக்குரிய மஹராக” ஆக்கினார்கள்.
நபி (ஸல்) மதீனா திரும்பும் வழியில் ‘ஸத்துஸ்ஸஹ்பா’ என்ற இடத்தில் ஸஃபிய்யா (ரழி) துடக்கிலிருந்து தூய்மையடைந்தார்கள். உம்மு ஸுலைம் (ரழி) ஸஃபிய்யாவை அலங்கரித்து இரவில் நபியவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். மறுநாள் பேரீத்தம் பழம், நெய், மற்றும் சத்துமாவினால் செய்யப்பட்ட ஒருவகை பாயாசத்தைக் கொண்டு நபி (ஸல்) வலிமா” விருந்து அளித்தார்கள். மூன்று நாட்கள் ஸஃபிய்யா (ரழி) அவர்களுடன் நபி (ஸல்) தங்கினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஜாதுல் மஆது)