பக்கம் - 419 -
இதையெடுத்து இஸ்லாமை ஏற்க நபி (ஸல்) யூதர்களை அழைத்தார்கள். ஆனால், அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். அவர்களிலிருந்து ஒருவன் வெளியேறி சண்டைக்கு வந்தான். அவனை ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) கொன்றார். பின்பு மற்றொருவன் சண்டையிட வந்தான். அவனையும் ஜுபைர் (ரழி) கொன்றார். பின்பு மற்றொருவன் வந்தான். அவனை அலீ இப்னு அபீதாலிப் (ரழி) கொன்றார். இவ்வாறு அவர்களில் பதினொரு நபர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒவ்வொருவர் கொல்லப்பட்ட பின்பும் நபியவர்கள் மீதமுள்ளவர்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தார்கள்.
இந்நிலையில் தொழுகையுடைய நேரம் வரும்போதெல்லாம் தங்களது தோழர்களுடன் தொழுகையை நிறைவேற்றிவிட்டு, மீண்டும் யூதர்களிடம் வந்து அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்துக் கூறி அல்லாஹ்வின் பக்கம் அழைத்தார்கள். இவ்வாறு மாலை வரை சண்டை தொடர்ந்தது. மறுநாள் காலை நபியவர்கள், அவர்களிடம் சென்ற போது சூரியன் உதயமாகி சற்று நேரத்திற்குள்ளாகவே யூதர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடைந்தார்கள். நபியவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏராளமான பொருட்களை அல்லாஹ் வழங்கினான்.
இங்கு நபி (ஸல்) நான்கு நாட்கள் தங்கியிருந்து கிடைத்த பொருட்களை தோழர்களுக்குப் பங்கு வைத்துக் கொடுத்தார்கள். ஆனால், மற்ற நிலங்களையும் பேரீத்தம் தோட்டங்களையும் யூதர்களிடமே கொடுத்து கைபர் யூதர்களிடம் செய்து கொண்டதைப் போன்று ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். (ஜாதுல் மஆது)
தைமா
கைபர், ஃபதக், வாதில் குரா ஆகிய இடங்களிலிருந்த யூதர்களெல்லாம் பணிந்து விட்டனர் என்ற செய்தி தைமாவிலுள்ள யூதர்களுக்குக் கிடைத்தது. அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக எந்த போர் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. மாறாக, அவர்களே முன் வந்து சமாதானம் செய்து கொள்வதற்கு நபி (ஸல்) அவர்களிடம் தூது அனுப்பினார்கள். நபியவர்களும் அதை ஏற்றுக் கொண்டு அவர்களது சொத்துகளை அவர்களிடமே கொடுத்து விட்டார்கள். (ஜாதுல் மஆது)
நபி (ஸல்) ஓர் உடன்படிக்கை பத்திரத்தையும் அவர்களுக்கு எழுதிக் கொடுத்தார்கள். அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாவது:
“அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, பனூ ஆதியா என்ற யூதர்களுக்கு எழுதிக் கொடுக்கும் ஒப்பந்தம். இவர்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு அளிக்கப்படும். இவர்களுக்கு வரி விதிக்கப்படும். இவர்கள் மீது அநீதி இழைக்கப்பட மாட்டாது. இவர்களை நாடு கடத்தப்பட மாட்டாது. இது நிரந்தரமான ஒப்பந்தமாகும்.”
இதை காலித் இப்னு ஸஈது (ரழி) எழுதினார். (இப்னு ஸஅத்)
மதீனாவிற்குத் திரும்புதல்
இதற்குப் பின் நபியவர்கள் மதீனா திரும்பினார்கள். திரும்பும் வழியில் ஒரு பள்ளத்தாக்கை கடந்து சென்ற போது மக்கள் சப்தமிட்டு “அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாஇலாஹஇல்லல்லாஹ்” என்று கூறினார்கள். அதைக் கேட்ட நபி (ஸல்) “நீங்கள் நிதானத்தைக் கையாளுங்கள். நீங்கள் செவிடனையோ அல்லது மறைவாக இருப்பவனையோ அழைக்க வில்லை. நீங்கள் நன்கு கேட்கும் ஆற்றல் உள்ளவனையும், சமீபத்தில் இருப்பவனையுமே அழைக்கின்றீர்கள்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)