பக்கம் - 425 -
6) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா படைப் பிரிவு
அஸீர் இப்னு ஜாம் அல்லது பஷீர் இப்னு ஜாம் என்பவர் முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்த சில கத்ஃபானியரை ஒன்று சேர்க்கிறார் என்ற தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. இதனால் நபி (ஸல்) ஹிஜ்ரி 7, ஷவ்வால் மாதத்தில் 30 வீரர்களை அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) தலைமையில் கைபரை நோக்கி அனுப்பி வைத்தார்கள். இப்படை அஸீடம் வந்து எங்களுடன் “நீர் உமது தோழர்களுடன் வாரும் நபி (ஸல்) உம்மையே கைபருக்கு ஆளுநராக ஆக்கி விடுவார்கள் என்று ஆசை வார்த்தைக் கூறினர். அவரும் தயாராகவே, அஸீரையும் அவரது 30 தோழர்களையும் அழைத்துக் கொண்டு அப்துல்லாஹ் மதீனா நோக்கிப் புறப்பட்டார். வழியில் ‘கற்கறா நியார்’ என்ற இடத்தில் தங்கியிருந்தபோது இரு கூட்டத்தினருக்குமிடையில் பிரச்சனை வரவே, அஸீரையும் அவரது 30 தோழர்களையும் முஸ்லிம்கள் கொன்று விட்டனர். வரலாற்று ஆசிரியரான வாக்கிதி, “ஹிஜ்ரி 6, ஷவ்வால் மாதம் கைபர் போர் நடப்பதற்கு சில மாதங்கள் முன்னதாக இச்சம்பவம் நடந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
7) பஷீர் இப்னு ஸஅத் படைப் பிரிவு
300 வீரர்களுடன் பஷீர் இப்னு ஸஅதை யமன், ஜபார் என்ற இடங்களுக்கு நபி (ஸல்) அனுப்பினார்கள். இவை கத்ஃபான் கிளையினருக்குச் சொந்தமான இடங்களாகும். சிலர் இந்த இடம் பஜாரா மற்றும் உத்ரா கிளையினருக்குச் சொந்தமான இடம் என்றும் கூறுகின்றனர். பல இடங்களிலிருந்து வந்து ஒன்றுகூடி மதீனாவைத் தாக்க இருந்தவர்களை எதிர்ப்பதற்காக இப்படை புறப்பட்டது. இரவில் பயணித்தும் பகலில் மறைந்திருந்தும் இவர்கள் தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர். பஷீன் வருகையை அறிந்த எதிரிகள், இடங்களைக் காலிசெய்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். பஷீர் (ரழி) அங்கு சென்று எதிரிகளின் ஏராளமான கால்நடைகளை ஓட்டிக் கொண்டு இருவரையும் கைது செய்து மதீனா திரும்பினார். கைதிகள் இருவரும் மதீனா வந்ததும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டனர்.
8) அபூ ஹத்ரத் படைப் பிரிவு
“ஜுஸம் இப்னு முஆவியா கிளையைச் சேர்ந்த ஒருவன் பெரும் கூட்டத்தை அழைத்துக் கொண்டு ‘காபா’ என்ற இடத்திற்கு வந்திருக்கிறான், அங்கிருக்கும் கைஸ் கிளையினருடன் சேர்ந்து முஸ்லிம்களின் மீது போர் தொடுக்க உள்ளான்” என்ற தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அதை விசாரித்து உறுதியான செய்தியை அறிந்து வர, அபூ ஹத்ரதையும் (ரழி) அவருடன் இரண்டு தோழர்களையும் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். அபூ ஹத்ரத் (ரழி) சூரியன் மறையும் நேரத்தில் காபா வந்து சேர்ந்தார். அவர் ஊரின் ஓர் ஓரத்தில் மறைந்து கொண்டு மற்ற இரு தோழர்களை மற்றொரு புறத்தில் மறைந்து கொள்ளும்படிக் கூறினார். அன்று கால்நடைகளை மேய்ப்பதற்காக சென்றிருந்த அக்கூட்டத்தினரின் இடையர் வருவதற்கு தாமதமானது. நன்கு இருட்டிய பின்பு அந்த இடையரைத் தேடி அக்கூட்டத்தின் தலைவர் தனியாகப் புறப்பட்டார். அத்தலைவர் அருகில் வந்த போது அபூ ஹத்ரத் (ரழி) அவரது நெஞ்சை குறிவைத்து அம்பெறிந்தார். அம்பு குறி தவறாது நெஞ்சைத் துளைக்கவே, அவர் எந்தவித சப்தமுமின்றி இறந்து விட்டார்.
அவன் தலையைக் கொய்து, அக்கூட்டத்தினர் தங்கியிருந்த ராணுவ முகாம் அருகே அபூ ஹத்ரத் (ரழி) கட்டித் தொங்க விட்டார். பின்பு பெரும் சப்தத்துடன் தக்பீர் முழங்கினார். அவன் சப்தத்தைக் கேட்ட மற்ற இரு தோழர்களும் உரத்த குரலில் தக்பீர் முழங்கினர். இதனைச் செவிமடுத்து, தொங்கும் தலையையும் பார்த்தவுடன் கூட்டத்தினர் தலை தெறிக்க ஓடினர். இந்த மூன்று முஸ்லிம்கள் அதிகமான ஒட்டகங்களையும் ஆடுகளையும் ஓட்டிக் கொண்டு மதீனா வந்து சேர்ந்தனர். இப்படையெடுப்பு அடுத்துக் கூறப்பட உள்ள “உம்ரத்துல் கழா”வுக்கு முன்பதாக நடந்தது என்று இப்னுல் கைய்” (ரஹ்) குறிப்பிடுகின்றார். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)