பக்கம் - 448 -
இதற்கேற்ப பல கோத்திரத்திலிருந்தும் சில குறைஷி அறிவீனர்கள் இக்மா இப்னு அபூ ஜஹ்ல், ஸஃப்வான் இப்னு உமையா, ஸஹ்ல் இப்னு அம்ர் ஆகியோருடன் ‘கந்தமா’ என்ற இடத்தில் ஒன்று சேர்ந்து கொண்டு முஸ்லிம்களை எதிர்க்க ஆயத்தமானார்கள். அப்படையில் மாஷ் இப்னு கைஸ் என்பவனும் இருந்தான். இதற்கு முன் இவன் தனது வீட்டில் எப்போதும் ஆயுதங்களைத் தயார்படுத்திக் கொண்டே இருந்தான். ஒருநாள் அவனது மனைவி அவனிடம் “எதற்காக நீ இவ்வாறு தயார் செய்கிறாய்” என்று கேட்டாள். அதற்கவன் “முஹம்மது மற்றும் அவரது தோழர்களுடன் நான் சண்டை செய்ய இதைத் தயார் செய்கிறேன்” என்று கூறினான். “முஹம்மது மற்றும் அவரது தோழர்கள் முன் எதுவும் தாக்குப்பிடிக்காது (அவர்களை எவராலும் எதிர்க்க முடியாது). அவர்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது” என்று மனைவி கூறினாள். ஆனால் அவன் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்களின் சிலரைச் சிறைபிடித்து வந்து உனக்கு பணியாளர்களாக நான் அமர்த்துவேன்” என்று கூறிவிட்டு தன்னைப் பற்றி பெருமையாக கவிதை பாடினான்,

அவர்கள் இன்று முன்வந்தால் நான் எங்ஙனம் விலகுவது
என்னிடம் முழு போராயுதமும் சிறு ஈட்டியும்
குத்தி குலை எடுக்கும் இருபுறம் கூரான வாளும் உள்ளன.

இஸ்லாமியப் படை ‘தூதுவா’வை அடைகிறது

நபி (ஸல்) அவர்கள் படைக்குப் பின்னால் சென்று கொண்டிருந்தார்கள். ‘தூதுவா’ என்ற இடம் வந்தவுடன் அல்லாஹ் தனக்களித்த இவ்வெற்றியை எண்ணி அவனுக்குப் பணிந்தவர்களாக தலையைத் தாழ்த்தியும் நுழைந்தார்கள். அவர்களது தாடியின் முடி அவர்கள் அமர்ந்திருந்த கஜவா பெட்டியின் கம்பை தொட்டுக் கொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்கள் இவ்விடத்தை அடைந்தவுடன் தங்களது படையை நிறுத்தி அதைப் பல பிரிவுகளாக அமைத்தார்கள். அதாவது, வலப்பக்கம் உள்ள படைக்கு காலிது இப்னு வலீதை (ரழி) தளபதியாக்கினார்கள். இப்படையில் அஸ்லம், சுலைம், கிஃபார், முஸைனா, ஜுஹைனா மற்றும் பல அரபி கோத்திரங்கள் இருந்தனர். உங்களுடன் குறைஷிகளில் எவராவது போர் புரிய வந்தால் அவரை வெட்டி வீசிவிடுங்கள். மக்காவின் கீழ்ப்புறமாகச் சென்று எனது வருகைக்காக ஸஃபா மலையில் எதிர்பார்த்திருங்கள் என்று நபி (ஸல்) கூறியனுப்பினார்கள்.

இடப்பக்கம் உள்ள படைக்கு ஜுபைர் இப்னு அவ்வாமை (ரழி) தளபதியாக்கி அவருக்கு ஒரு கொடியை வழங்கினார்கள். மக்காவின் மேல்புறமுள்ள ‘கதா’ என்ற இடத்தின் வழியாக மக்காவுக்குள் நுழைந்து ‘ஹுஜ்ன்’ என்ற இடத்தில் கொடியை நாட்டி தங்கள் வருகைக்காக காத்திருக்க வேண்டும் என்று அவருக்கு ஆணையிட்டார்கள்.

கால்நடையாக வந்த வீரர்களுக்கும் ஆயுதமின்றி வந்த வீரர்களுக்கும் அபூ உபைதாவை (ரழி) தளபதியாக்கி ‘பத்னுல் வாதி’ வழியாக மக்காவுக்குள் நுழையுமாறு அவருக்கு ஆணையிட்டார்கள்.