வமிசம், பிறப்பு, வளர்ப்பு
நபியவர்களின் வமிசமும் குடும்பமும்
நபியவர்களின் வமிசம்
நபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர் மூன்று வகையாகப் பிரிகின்றது.
முதலாவது: அனைத்து வரலாற்று ஆசிரியர்களும், வமிச இயல் வல்லுனர்களும் ஒருமித்த கருத்து கொண்டிருப்பது. இது நபி (ஸல்) அவர்களில் தொடங்கி அத்னானில் முடிகிறது.
இரண்டாவது: இதில் மிகுந்த கருத்து முரண்பாடுகள் உள்ளன. அவற்றை ஒன்றிணைப்பது இயலாததாகும். அது அத்னானிலிருந்து நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் வரையிலான வமிசத் தொடராகும். இதில் சிலர் மௌனம் காக்கிறார்கள். சிலர் அத்னானுக்கு மேல் வமிசத் தொடரை கூறக்கூடாது என்கிறார்கள். சிலர் வமிசத் தொடரை அதற்கு மேலும் கூறுவது கூடும் என்கிறார்கள். இவ்வாறு கூறுபவர்கள் வமிசத் தொடர் மற்றும் எண்ணிக்கையில் முரண்படுகிறார்கள். அவர்களது முரண்பாடான கருத்துகள் முப்பதையும் தாண்டியுள்ளது. எனினும் அத்னான், நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் வமிசத்தைச் சேர்ந்தவர் என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர்.
மூன்றாவது: இது நபி இப்றாஹீம் (அலை) அவர்களிலிருந்து ஆதம் (அலை) அவர்கள் வரையிலானது. இதில் வேதக்காரர்களின் கருத்தையே ஏற்க வேண்டி வருகிறது. அதில் பல கருத்துகள் பொய்யானவை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இன்னும் சில கருத்துகள் குறித்து மௌனம் காப்பதே சிறந்ததாகும்.
நபி (ஸல்) அவர்களுடைய தூய வமிச வழியைப் பற்றி மேற்கூறப்பட்ட மூன்று பிரிவுகளையும் வரிசையாகக் காண்போம்.
முதல் பிரிவு: முஹம்மது (ஸல்) இப்னு அப்துல்லாஹ் இப்னு அப்துல் முத்தலிப் (பெயர் ஷைபா) இப்னு ஹாஷிம் (பெயர் அம்ரு) இப்னு அப்து மனாஃப் (பெயர் முகீரா) இப்னு குஸய்ம் (பெயர் ஜைது) இப்னு கிலாப் இப்னு முர்ரா இப்னு கஅப் இப்னு லுவய்ம் இப்னு காலிப் இப்னு ஃபிஹ்ர் (இவரே குறைஷி என அழைக்கப்பட்டவர். இவர் பெயராலேயே அக்கோத்திரம் அழைக்கப்படுகிறது) இப்னு மாலிக் இப்னு நழ்ர் (பெயர் கைஸ்) இப்னு கினானா இப்னு குஜைமா இப்னு முத்கா (பெயர் ஆமிர்) இப்னு இல்யாஸ் இப்னு முழர் இப்னு நிஜார் இப்னு மஅத்து இப்னு அத்னான். (இப்னு ஹிஷாம், தபரி)
இரண்டாவது பிரிவு: இது அத்னானுக்கு மேலே உள்ளவர்கள் பற்றியது. அத்னான் இப்னு உதத் இப்னு ஹமய்ஸா இப்னு ஸலாமான் இப்னு அவ்ஸ் இப்னு பவுஜ் இப்னு கிம்வால் இப்னு உபை இப்னு அவ்வாம் இப்னு நாஷித் இப்னு ஹஜா இப்னு பல்தாஸ் இப்னு யதுலாஃப் இப்னு தாபிக் இப்னு ஜாம் இப்னு நாஷ் இப்னு மாகீ இப்னு ஐழ் இப்னு அப்கர் இப்னு உபைத் இப்னு துஆ இப்னு ஹம்தான் இப்னு ஸன்பர் இப்னு யஸ்பீ இப்னு யஹ்ஜன் இப்னு யல்ஹன் இப்னு அர்அவா இப்னு ஐழ் இப்னு தைஷான் இப்னு ஐஸிர் இப்னு அஃப்னாத் இப்னு ஐஹாம் இப்னு முக்ஸிர் இப்னு நாஸ் இப்னு ஜாஹ் இப்னு ஸமீ இப்னு மஜீ இப்னு அவ்ழா இப்னு அராம் இப்னு கைதார் இப்னு இஸ்மாயீல் இப்னு இப்றாஹீம். (தபகாத் இப்னு ஸஅது)
மூன்றாம் பிரிவு: இது இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு மேல் அவர்களின் தந்தை தாரஹ். அவரது பெயர் ஆஜர் இப்னு நாஹூர் இப்னு ஸாரூஃ இப்னு ராவூ இப்னு ஃபாலக் இப்னு ஆபிர் இப்னு ஷாலக் இப்னு அர்ஃபக்ஷத் இப்னுஹிஸாம் இப்னு நூஹ் (அலை) இப்னு லாமக் இப்னு மதவ்ஷலக் இப்னு அக்நூக். (இவர்கள்தாம் இத்ரீஸ் (அலை) என்றும் சொல்லப்படுகிறது.) இப்னு யர்து இப்னு மஹ்லாயீல் இப்னு கைனான் இப்னு அனூஷ் இப்னு ஷீஸ் இப்னு ஆதம். (இப்னு ஹிஷாம்)