பக்கம் - 457 -
படைப் பிரிவுகளும் குழுக்களும்
1) ‘நக்லா’ என்ற இடத்தில் ‘உஜ்ஜா’ என்ற சிலை இருந்தது. இதுவே குறைஷிகளுடைய சிலைகளில் மகத்துவம் மிக்கதாக இருந்தது. ஷைபான் கிளையினர் அந்தச் சிலையின் பூசாரிகளாக இருந்தனர். மக்காவில் வெற்றிப் பணிகள் முடிந்து முழு அமைதி நிலவிய பின்பு (ஹிஜ்ரி 8) ரமழான் மாதம் முடிய ஐந்து நாட்கள் மீதமிருக்கும், நபி (ஸல்) காலித் இப்னு வலீதை முப்பது வீரர்களுடன் அந்தச் சிலைiயை உடைத்தெறிய அனுப்பினார்கள். அதை உடைத்து வந்த காலிதிடம் “ஏதாவது அங்கு கண்டீர்களா?” என்று நபி (ஸல்) கேட்க, அவர் “நான் எதையும் காணவில்லை” என்றார். “அப்படியானால் நீ அதனைச் சரியாக உடைக்கவில்லை. திரும்பச் சென்று அதனை உடைத்து வா!” என்று அனுப்பி வைத்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் இப்பேச்சைக் கேட்டு வெகுண்டெழுந்த காலித் (ரழி) வாளை உருவியவாறு தனது தோழர்களுடன் உஜ்ஜாவை நோக்கி பறந்தார். அச்சிலையருகே சென்றவுடன் தலைவிரி கோலமாக நிர்வாண நிலையில் கருத்த பெண் உருவம் ஒன்று காலிதை நோக்கி வந்தது. அங்குள்ள பூசாரி உஜ்ஜாவின் பெயரைக் கூறி சப்தமிட்டு அழைத்தான். காலித் (ரழி) தன் முன் தோன்றிய அவ்வுருவத்தை இரண்டாகப் பிளந்தார். பின்பு நபியவர்களிடம் திரும்பி வந்து நடந்த நிகழ்ச்சியை விவரித்தார். “ஆம்! அதுதான் உஜ்ஜா. இனி, உங்கள் ஊர்களில் யாரும் அதனை வணங்குவதிருந்து நிராசையடைந்து விட்டது” என நபி (ஸல்) நவின்றார்கள்.
2) மக்காவின் வட கிழக்கே 150 கி.மீ. தொலைவில் ‘ருஹாத்’ என்னுமிடத்தில் ஹுதைல் கிளையினர் வணங்கும் ‘சுவா’ என்ற சிலை இருந்தது. அதனை உடைக்கும்படி இதே ரமழான் மாதத்தில் அம்ர் இப்னு ஆஸை நபி (ஸல்) அனுப்பினார்கள். அம்ரு சிலையருகே வந்தவுடன் அதன் பூசாரி “நீ எதற்கு வந்துள்ளாய்?” என வினவினான். “இச்சிலையை உடைத்து வர நபி (ஸல்) கட்டளையிட்டுள்ளார்கள்” என அம்ர் பதில் தந்தார். பூசாரி, “உன்னால் அது முடியாது” என்று வீராப்பு பேசினான். அம்ரு (ரழி) “ஏன் முடியாது?” என்றார். “உன்னால் அதனை நெருங்கவே முடியாது” என்றான். “இன்னுமாடா வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கிறாய்? உனக்கென்ன கேடு? அது கேட்குமா? அதனால் பார்க்கத்தான் முடியுமா?” என்று கூறியவாறு சிலையருகே வந்து அதனை அம்ருப்னு ஆஸ் (ரழி) உடைத்துத் தள்ளினார். அந்தக் கோயிலையும் அங்குள்ள உண்டியலையும் உடைத்து பார்க்கும்படி தோழர்களுக்குக் கட்டளையிட்டார். ஆயினும் எதுவுமே கிட்டவில்லை. “இப்பொழுது உன் கருத்து என்ன?” என பூசாரியிடம் அம்ரு (ரழி) வினவ “நான் அல்லாஹ்விடம் சரணடைந்தேன். இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன்” என பூசாரி கூறினார்.
3) ‘குதைத்’ என்ற ஊரருகே ‘முஷல்லல்’ என்ற இடத்தில் ‘மனாத்’ எனும் சிலை இருந்தது. அதனை ‘அவ்ஸ்“, ‘கஸ்ரஜ்“, ‘கஸ்ஸான்’ மற்றும் சில குலத்தவர் வணங்கிக் கொண்டிருந்தனர். அதனை இடித்து வர ஸஅத் இப்னு ஜைத் அஷ்ஹலி (ரழி) என்பவர் தலைமையில் இருபது பேர் கொண்ட படையை இதே மாதத்தில் நபி (ஸல்) அனுப்பினார்கள். ஸஅது (ரழி) அங்கு சென்றபோது அங்குள்ள பூசாரி “நீ எந்த நோக்கத்தில் வந்திருக்கின்றாய்?” என்று வினவ “மனாத்தை உடைக்க வந்துள்ளேன்” என்று பதிலளித்தார். “நீ விரும்பியதைச் செய்து கொள்” என பூசாரி மறுமொழி கூறினார். ஸஅது அச்சிலையருகே வந்தபோது கருநிற பெண்ணொருத்தி தலைவிரி கோலமாக மார்பில் அடித்துக் கொண்டு வெளியேறி வந்தாள். அதைக் கண்ட பூசாரி “மனாத்தே! நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்! இதோ உனது எதிரிகள் உன்னை ஒழித்துக் கட்ட வந்து விட்டனர்” எனக் கூக்குரலிட, ஸஅது (ரழி) அச்சிலையை வெட்டிச் சாய்த்தார். அங்கும் உண்டியல்களில் எதுவும் காணப்படவில்லை.