பக்கம் - 460 -


மக்கா வெற்றி அரபிகள் யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சியாகும். இதனைக் கண்ணுற்ற அக்கம் பக்கத்திலுள்ளோர் திடுக்கிட்டனர். அவர்களால் அதனைத் தடுத்து நிறுத்த முடியாததால் பெரும்பாலான மக்கள் பணிந்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டனர். எனினும், கர்வமும் வம்பும் முரட்டுக் குணமும் கொண்ட சமூகத்தவர்கள் அடிபணிய மறுத்தனர்.

இவர்களில் ஹவாஜின், ஸகீஃப் கோத்திரத்தினர் முன்னிலை வகித்தனர். இவர்களுடன் கைஸ், அய்லான் கோத்திரத்தைச் சார்ந்த நஸ்ர், ஜுஷம், ஸஅது இப்னு பக்ர் ஆகிய குடும்பத்தினரும் ஹிலால் குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் சேர்ந்து கொண்டனர். முஸ்லிம்களின் வெற்றியை ஏற்பது இந்தக் கோஷ்டிகளுக்கு மானப் பிரச்சனையாகவும், கண்ணியக் குறைவாகவும் தென்படவே முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுக்க மாலிக் இப்னு அவ்ஃப் நஸ் என்பவனின் தலைமையில் ஒன்று சேர்ந்தனர்.

அவ்தாஸில் எதிரிகள்

முஸ்லிம்களிடம் சண்டையிடுவதற்குப் படை வீரர்களை மாலிக் இப்னு அவ்ஸ் ஒன்று திரட்டினார். அவன் படை வீரர்கள் அனைவரும் பொருட்கள், செல்வங்கள், மனைவி மக்கள் அனைத்துடனும் போர்க்களத்திற்கு வந்து வீரதீரமாகப் போரிட வேண்டும் என ஆணையிட்டார். அவ்வாறே அனைவரும் அவ்தாஸுக்கு வந்தனர். ‘அவ்தாஸ்’ என்பது ஹுனைன் அருகில் ஹவாஜின் கிளையார் வசிப்பிடத்திற்கு அருகாமையிலுள்ள ஒரு பள்ளத்தாக்காகும். ஹுனைன் என்பது ‘தில் மஜாஸ்’ என்ற ஊரின் அண்மையில் உள்ள பள்ளத்தாக்காகும். இங்கிருந்து அரஃபா வழியாக ஏறக்குறைய பத்து மைல் தொலைவில் தான் மக்கா இருக்கிறது. எனவே, ஹுனைன் வேறு, அவ்தாஸ் வேறு. (ஃபத்ஹுல் பாரி)

போர்த் தளபதியின் முடிவுக்கு போர்க்கள நிபுணர் எதிர்ப்பு

மக்கள் அவ்தாஸை அடைந்தவுடன் தங்கள் தளபதியிடம் ஒன்று கூடினர். அவர்களில் துரைத் என்ற பெயருடைய போரில் நல்ல அனுபவமுள்ள ஒருவன் இருந்தான். அவன் வாலிபத்தில் வலிமை மிக்க போர் வீரனாக விளங்கியவன். தற்போது போர் பற்றிய ஆலோசனை வழங்குவதற்காக படையுடன் வந்திருந்தான். அவனுக்கு கண் பார்வை குன்றியிருந்தது. அவன் மக்களிடம் “தற்போது எந்தப் பள்ளத்தாக்கிற்கு வந்திருக்கிறோம்” என்று வினவினான். “அவ்தாஸ் வந்துள்ளோம்” என மக்கள் கூறினர். “இது குதிரைகள் பறந்து போரிட ஏதுவான இடம் கரடு முரடான உயர்ந்த மலைப் பகுதியுமல்ல மிகவும் மிருதுவான தாழ்ந்த தரைப்பகுதியுமல்ல ஆகவே, இது பொருத்தமான இடமே. ஆயினும், நான் குழந்தைகளின் அழுகுரலையும், ஆடு, மாடு கழுதை போன்றவற்றின் சப்தங்களையும் கேட்கிறேன். அவை இங்கு ஏன் வந்தன?” எனக் கேட்டான். “தளபதி மாலிக் இப்னு அவ்ஃப்தான் போர் வீரர்கள் அனைவரும் தங்களது மனைவி, மக்கள், கால்நடைகள், செல்வங்கள் அனைத்துடன் போர்க்களம் வரும்படி கட்டளையிட்டிருந்தார்” என மக்கள் தெரிவித்தனர்.