பக்கம் - 462 -
மக்காவிலிருந்து ஹுனைனை நோக்கி
ஹிஜ்ரி 8, ஷவ்வால் மாதம், சனிக்கிழமை பிறை 6, நபி (ஸல்) அவர்கள் பன்னிரெண்டாயிரம் வீரர்களுடன் மக்காவிலிருந்து ஹுனைனை நோக்கிப் புறப்பட்டார்கள். இதில் பத்தாயிரம் வீரர்கள் மதீனாவிலிருந்து வந்தவர்கள். மீதம் இரண்டாயிரம் வீரர்கள் மக்காவாசிகள். இவர்களில் பெரும்பாலோர் புதிதாக இஸ்லாமை ஏற்றவர்கள். மேலும், ஸஃப்வான் இப்னு உமய்யாவிடமிருந்து நூறு கவச ஆடைகளை இரவலாக நபி (ஸல்) எடுத்துக் கொண்டார்கள். மக்காவில் அத்தாப் இப்னு உஸைத் (ரழி) என்பவரைத் தனது பிரதிநிதியாக நியமித்தார்கள். மக்காவிற்குள் வந்து சரியாக 19வது நாள் நபி (ஸல்) ஹுனைன் நோக்கிப் புறப்படுகிறார்கள். அன்று மாலை குதிரை வீரர் ஒருவர் வந்து “நான் மலைமீது ஏறிப் பார்த்தேன். அப்போது ஹவாஜின் கிளையினர் தங்களது குடும்பங்கள், செல்வங்களுடன் ஹுனைனில் குழுமி இருக்கின்றார்கள்” என்று கூறினார். இதனைச் செவியேற்ற நபி (ஸல்) அவர்கள் “இன்ஷா அல்லாஹ்! நாளை அவை முஸ்லிம்களின் கனீமா பொருளாகிவிடும்” என புன்னகை ததும்பக் கூறினார்கள். அன்றிரவு படையின் பாதுகாப்புக்கு அனஸ் இப்னு அபூ மர்சத் கனவீ (ரழி) பொறுப்பேற்றார். (ஸுனன் அபூதாவூது)
ஹுனைனை நோக்கிச் செல்லும் வழியில் முஸ்லிம்கள் பசுமையான மிகப்பெரிய இலந்தை மரம் ஒன்றைக் கண்டார்கள். அம்மரத்தை ‘தாத் அன்வாத்’ என்று அரபிகள் அழைத்தனர். அக்காலத்தில் அதில் தங்களது வாட்களை தொங்க விடுவர். அங்கு தங்கி பிராணிகளைப் பலியிடுவர். தங்களின் சிலை வழிபாடுகளுக்கு அதை பாக்கியம் பொருந்திய ஒன்றாகக் கருதி வந்தனர். அம்மரத்தைப் பார்த்தவுடன் படையிலிருந்த சிலர் “அல்லாஹ்வின் தூதரே! முஷ்ரிக்குகளுக்கு ‘தாத் அன்வாத்’ இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஒரு ‘தாத் அன்வாத்’ ஏற்படுத்தித் தாருங்கள்” என்றனர். நபி (ஸல்) “அல்லாஹு அக்பர்! முஹம்மதின் ஆத்மா எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! ‘அவர்களுக்கு கடவுள்கள் இருப்பது போன்று எங்களுக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்தித் தாருங்கள்’ என்று மூஸாவின் கூட்டத்தினர் கேட்டது போலல்லவா கேட்கிறீர்கள்! நிச்சயமாக நீங்கள் அறியாத கூட்டத்தினர். இதுதான் சென்று போனவர்களின் வழிமுறையாகும். உங்களுக்கு முன் சென்றவர்களின் வழிமுறைகளையே நிச்சயமாக நீங்களும் பின்பற்றுவீர்கள்” என்று எச்சரித்தார்கள். (முஸ்னது அஹ்மது, ஜாமிவுத் திர்மிதி)
மற்றும் படையிலுள்ள சிலர் படையின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதைப் பார்த்து “இன்றைய தினம் நம்மை யாராலும் வெல்ல முடியாது” என்று கூறினர். சிலரின் இந்தக் கூற்று நபி (ஸல்) அவர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது.
முஸ்லிம்கள் திடீரெனத் தாக்கப்படுதல்
ஷவ்வால் மாதம், பிறை 10, செவ்வாய் மாலை புதன் இரவு இஸ்லாமியப் படை ஹுனைன் வந்தடைந்தது. முஸ்லிம்களுக்கு முன்னதாகவே மாலிக் இப்னு அவ்ஃப் தனது படையுடன் அங்கு வந்து, ஹுனைன் பள்ளத்தாக்கு முழுவதும் நிறுத்தி வைத்துவிட்டான்.
மேலும், நன்கு அம்பெறிவதில் தேர்ச்சி பெற்ற வீரர்களைப் பதுங்குக் குழிகளிலும், நெருக்கமான வளைவுகளிலும், முக்கிய நுழைவிடங்களிலும், பாதைகளின் ஓரங்களிலும் தங்க வைத்து விட்டான். முஸ்லிம்கள் தங்களுக்கு எதில் வந்தவுடன் முதலில் அம்புகளால் அவர்களைத் தாக்க வேண்டும் பின்பு அவர்கள் மீது பாய்ந்து நேருக்கு நேராகத் தாக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.