பக்கம் - 464 -
பின்பு அன்சாரிகளை ‘ஏ... அன்சாரிகளே! ஏ... அன்சாரிகளே!’ என்று கூவி அழைக்கப்பட்டது. குறிப்பாக, ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் கிளையினரைக் கூவி அழைக்கப்பட்டது. இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக முஸ்லிம்களை அழைக்க, எல்லோரும் மைதானத்தில் ஒன்று சேர்ந்து விட்டனர். இரு தரப்பினருக்குமிடையில் கடுமையான சண்டை நிகழ்ந்தது. நபி (ஸல்) ‘இப்போதுதான் போர் சூடுபிடித்திருக்கிறது’ என்று கூறி, பூமியிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து ‘முகங்களெல்லாம் நாசமாகட்டும்’ என்று கூறி எதிரிகளை நோக்கி வீசி எறிந்தார்கள். அங்கிருந்த எதிரிகள் அனைவரின் கண்களிலும் அல்லாஹ் இந்த மண்ணைப் பரப்பி விட்டான். எதிரிகளின் வேகம் தணிந்து போரில் பின்வாங்க ஆரம்பித்தனர்.
எதிரிகள் தோல்வி அடைகின்றனர்
நபி (ஸல்) கைப்பிடி மண்ணை வீசிய சில நிமிடங்களிலேயே எதிரிகள் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தனர். முஸ்லிம்களின் எதிர் தாக்குதலால் ஸகீஃப் கிளையினரில் மட்டும் எழுபது நபர்கள் கொல்லப்பட்டனர். எதிரிகள் தாங்கள் கொண்டு வந்த உடமைகளையெல்லாம் விட்டுவிட்டு போர் மைதானத்திலிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்கள் கொண்டு வந்திருந்த ஆயுதங்கள், பொருட்கள் அனைத்தையும் முஸ்லிம்கள் ஒன்று சேர்த்தனர். முஸ்லிம்களுக்குக் கிடைத்த இந்த வெற்றியைப் பற்றித்தான் அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகின்றான்:
பல (போர்க்) களங்களில் (உங்கள் தொகைக் குறைவாயிருந்தும்) நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கின்றான். எனினும், ஹுனைன் போர் அன்று உங்களைப் பெருமையில் ஆழ்த்திக் கொண்டிருந்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு எந்தப் பலனும் அளிக்கவில்லை. பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அதுசமயம் அது) உங்களுக்கு மிக நெருக்கமாகி விட்டது. அன்றி, நீங்கள் புறங்காட்டி ஓடவும் தலைப்பட்டீர்கள். (இதன்) பின்னர், அல்லாஹ் தன்னுடைய தூதர் மீதும், நம்பிக்கையாளர்கள் மீதும் தன்னுடைய அமைதியை அளித்து அருள்புரிந்தான். உங்கள் கண்ணுக்குத் தெரியாத ஒரு படையையும் (உங்களுக்கு உதவியாக) இறக்கி வைத்து நிராகரிப்பவர்களை வேதனை செய்தான். இதுதான் நிராகரிப்பவர்களுக்குரிய கூலியாகும். (அல்குர்ஆன் 9:25, 26)
எதிரிகளை விரட்டுதல்
போல் தோல்வி கண்ட எதிரிகள் பல பக்கங்களிலும் சிதறி ஓடினர். ஒரு பிரிவினர் ‘தாயிஃபை’ நோக்கி ஓடினர். வேறொரு பிரிவினர் ‘நக்லா’ என்ற ஊரை நோக்கி ஓடினர். மற்றும் ஒரு பிரிவினர் ‘அவ்தாஸை’ நோக்கி ஓடினர். இதைத் தொடர்ந்து நபி (ஸல்) எதிரிகளை விரட்டிப் பிடிப்பதற்கு முதலில் ‘அவ்தாஸை’ நோக்கி ஒரு படையை அனுப்பினார்கள். அதற்கு அபூ ஆமிர் அஷ்அ (ரழி) தலைமை ஏற்றார். அங்கு இரு தரப்பினருக்குமிடையில் சிறு மோதல் ஏற்பட்டது. அதிலும் எதிரிகள் தோல்வியடைந்து ஓடிவிட்டனர். இந்த மோதலில் தலைவராயிருந்த அபூ ஆமிர் அஷ்அ (ரழி) கொல்லப்பட்டார்.
முஸ்லிம்களின் குதிரை வீரர்களில் ஒரு பிரிவினர் நக்லாவை நோக்கி ஓடிய முஷ்ரிக்குகளை விரட்டிச் சென்றனர். அவர்களுக்கிடையிலும் சிறு மோதல் ஏற்பட்டது. இச்சண்டையில் துரைத் இப்னு ஸிம்மாவை ரபிஆ இப்னு ருஃபை (ரழி) கொன்றார்.
இப்போரில் தோற்ற பெரும்பாலான முஷ்ரிக்குகள் தாயிஃபை நோக்கித்தான் ஓடினர். எனவே, கனீமத்துப் பொருட்களை ஒழுங்குபடுத்தி ஒன்று சேர்த்து வைத்துவிட்டு தாயிஃபை நோக்கி நபி (ஸல்) படையுடன் பயணமானார்கள்.