பக்கம் - 483 -
இப்னு உமர் (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) ஹிஜ்ர் பகுதிக்கு வந்த போது “தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்தவர்களின் இடங்களை நீங்கள் கடந்துச் செல்லும் போது அழுதவர்களாக செல்லுங்கள். அவர்களுக்கு ஏற்பட்ட வேதனை உங்களுக்கும் ஏற்படலாம் என பயந்து கொள்ளுங்கள்” என்று கூறி தங்களது தலையை மறைத்துக் கொண்டு அந்தப் பள்ளத்தாக்கை விரைவாகக் கடந்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)
வழியில் படைக்குத் தண்ணீன் தேவை அதிகமாகவே, நபியவர்களிடம் வந்து முறையிட்டார்கள். நபி (ஸல்) அல்லாஹ்விடம் தண்ணீர் புகட்டக் கோரி இறைஞ்சினார்கள். அல்லாஹ் தாகத்தைப் போக்க மேகத்தை அனுப்பி மழை பொழியச் செய்தான். மக்கள் தாகம் தணிந்து பாத்திரங்களிலும் மழை நீரைச் சேமித்துக் கொண்டார்கள்.
“தபூக்கிற்கு மிக நெருக்கமாக வந்தவுடன் நாளை நீங்கள் தபூக் நகரின் ஊற்றை சென்றடைவீர்கள். முற்பகல் வருவதற்குள் அங்கு செல்ல வேண்டாம். அங்கு சென்றவுடன் நான் வரும் வரை அந்த ஊற்றை யாரும் நெருங்கவும் வேண்டாம்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
“நாங்கள் தபூக் வந்தபோது எங்களில் இருவர் முந்திக் கொண்டு அந்த ஊற்றுக்குச் சென்று விட்டனர். அந்த ஊற்றிலிருந்து தண்ணீர் சிறுகச் சிறுக வெளியேறிக் கொண்டிருந்தது. நபி (ஸல்) அவ்விருவரிடம் “நீங்கள் அந்தத் தண்ணீரைத் தொட்டீர்களா?” என்று கேட்க அவர்கள் “ஆம்!” என்றனர். அவ்விருவருக்கும் அல்லாஹ் நாடியவாறு சிலவற்றைக் கூறிய நபி (ஸல்) அவ்வூற்றுக் கண்ணிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் அள்ளி ஒரு பாத்திரத்தில் நிரப்பி, பின்பு அதில் தங்களது முகத்தையும் கைகளையும் கழுவிவிட்டு அந்தத் தண்ணீரை மீண்டும் அந்த ஊற்றில் கொட்டினார்கள். அங்கிருந்து தண்ணீர் பீறிட்டு வழிந்தோடியது. மக்களெல்லாம் நீர் பருகிக் கொண்டார்கள். பின்பு “முஆதே உனது வாழ்க்கை நீண்டதாக இருந்தால் வெகு விரைவில் இந்த இடங்கள் தோட்டங்களாக மாறுவதைப் பார்ப்பாய்” என்றார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
தபூக் செல்லும் வழியில் அல்லது சென்றடைந்த பிறகு (இரு விதமாகவும் சொல்லப்படுகின்றது) “இன்றிரவு உங்கள் மீது கடுமையான காற்று வீசும். யாரும் எழுந்திருக்க வேண்டாம். ஒட்டகம் உள்ளவர்கள் அதைக் கட்டி வைக்கவும்” என நபி (ஸல்) கூறினார்கள். அவ்வாறே அன்றிரவு கடுமையான காற்று வீசியது. படையில் ஒருவர் எழுந்து நின்றுவிட்டார். அவர் காற்றில் தூக்கிச் செல்லப்பட்டு ‘தை’ மலையில் வீசப்பட்டார். (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) பயணத்தில் ளுஹ்ரை அஸருடன் அல்லது அஸ்ரை ளுஹ்ருடன், மஃரிபை இஷாவுடன் அல்லது இஷாவை மஃரிபுடன் சேர்த்து தொழுது வந்தார்கள்.
தபூக்கில் இஸ்லாமியப் படை
இஸ்லாமியப் படை தபூக் வந்தடைந்து தனது ராணுவ முகாம்களை அமைத்துக் கொண்டு எதிரிகளைச் சந்திப்பதற்கு எந்நேரமும் ஆயத்தமாக இருந்தது. நபி (ஸல்) எழுந்து நின்று வீரத்திற்கு உரமூட்டும் பேருரை நிகழ்த்தினார்கள். ஈருலக நன்மையை அடைந்து கொள்வதற்கு ஆர்வப்படுத்தியதுடன், அச்சமூட்டி எச்சரிக்கையும் செய்தார்கள். ஆன்மாக்களுக்கு வலிமை ஊட்டினார்கள். பொருளாதாரத்தாலும் தயாரிப்புகளாலும் பின்தங்கியுள்ளோம் என எண்ணியிருந்த முஸ்லிம்களிடமிருந்து தாழ்வு மனப்பான்மையையும் சோர்வையும் இந்தப் பிரச்சாரத்தின் மூலமாக அகற்றினார்கள்.