பக்கம் - 499 -
அவர்களுக்கு வயதில் குறைந்த உஸ்மான் இப்னு அபுல் ஆஸையே தலைவராக நியமித்தார்கள். ஏனெனில், அவர் மார்க்கத்தை அறிவதிலும் குர்ஆனை ஓதுவதிலும் மிக்க ஆர்வத்துடன் விளங்கினார். அந்தக் குழுவினர் காலையில் நபி (ஸல்) அவர்களிடம் வரும்போது தங்களது பொருட்களை பாதுகாப்பதற்கு உஸ்மானை கூடாரத்தில் விட்டுவிட்டு வந்து விடுவார்கள். மதிய நேரத்தில் குழுவினர் ஓய்வெடுக்கக் கூடாரத்திற்கு வந்த பின்பு, இவர் நபியவர்களிடம் சென்று குர்ஆனையும் மார்க்கத்தையும் கற்றுக் கொள்வார்.
அந்நேரம் நபி (ஸல்) அவர்களும் உறங்கிக் கொண்டிருந்தால் அபூபக்ரிடம் சென்று கற்பார். (அவர் தமது கூட்டத்தினருக்கு மிகுந்த நன்மைக்குரியவராக விளங்கினார். நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் மக்களில் பலர் இஸ்லாமை விட்டு வெளியேறிய போது ஸகீஃப் வமிசத்தவரும் இஸ்லாமை விட்டு வெளியேறத் துடித்தனர். அப்போது “ஸகீஃப் வமிசத்தாரே! மக்களில் நீங்கள் இறுதியாகவே இஸ்லாமைத் தழுவினீர்கள். அதனை விட்டு முதலாவதாக நீங்கள் விலகி விடாதீர்!” என்று எச்சரித்தார். அவன் இந்த அறிவுரையை ஏற்று இஸ்லாமில் உறுதியாகி விட்டனர்.)
நாம் இப்போது வரலாற்றைப் பார்ப்போம்.
வந்தவர்கள் தாயிஃபுக்குத் திரும்பி தமது சமூகத்தாரைச் சந்தித்தனர். நடந்த நிகழ்வுகளை மறைத்து விட்டு நபி (ஸல்) உங்கள் மீது போர் தொடுக்க முனைகிறார்கள் என எச்சரித்து விட்டு அதற்காக தாங்கள் கவலை, கைசேதத்துடன் இருப்பதாகக் காட்டிக் கொண்டனர். மேலும், இஸ்லாமை ஏற்க வேண்டும் விபச்சாரம், மது, வட்டி மற்றும் அனைத்து தீமையான காரியங்களில் இருந்தும் விலகியிருக்க வேண்டும் அவ்வாறு செய்யாவிடின் போரைத் தவிர வேறு கதி கிடையாது என்று நபி (ஸல்) கூறியதாக அக்குழுவினர் கூறினார்கள். இதனைக் கேட்ட ஸகீஃப் கிளையினருக்கும் சினம் தலைக்கேறியது. நாமும் போருக்குத் தயாராவோம் என்று கூறி இரண்டு மூன்று நாட்களாக போருக்கான ஆயத்தம் செய்தனர்.
இந்நிலையில் அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் பயத்தை ஏற்படுத்தினான். அவர்களோ தூதுக் குழுவினரை அழைத்து “நீங்கள் திரும்பவும் அவரிடம் (நபியிடம்) செல்லுங்கள். அவர் கூறும் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றனர். அக்குழுவினர் அப்போது உண்மை நிலையை விவரித்தனர். அதனைக் கேட்டு ஸகீஃப் கூட்டத்தார் மிக சந்தோஷமாக இஸ்லாமில் இணைந்தனர்.