3) ஜைது அல் ஜம்ஹூர்: இதில் ஹிம்யர் அஸ்ஙர் (சின்ன ஹிம்யர்), ஸபா அஸ்ஙர் (சின்ன ஸபா), ஹழுர், தூ அஸ்பா ஆகிய குடும்பங்கள் உருவாகின.
ரோமர்கள் அக்காலத்தில் மிஸ்ர், ஷாம் ஆகிய இரு நாடுகளையும் கைப்பற்றி கஹ்லான் வமிசத்தினரின் கடல் மற்றும் தரைவழி வியாபாரங்களைத் தடுத்தனர். இதனால் கஹ்லான் வமிசத்தினரின் வணிகங்கள் பெருமளவு நசிந்தன. இதனாலும் அவர்கள் யமனிலிருந்து குடிபெயர்ந்து போயிருக்கலாம். அத்தோடு ஸபா பகுதியில் ‘அல்அரீம்’ என்ற வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனாலும் சில காலத்திற்குப்பிறகு அவர்கள் யமனிலிருந்து குடிபெயர்ந்து போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு கஹ்லான் வமிசத்தினர் யமன் நாட்டை விட்டு வெளியேறியதற்கு சிலர் சில காரணங்களை கூறினாலும், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்பிருந்தே இவர்களின் வணிகங்கள் நசிந்து போயிருந்தன. தொடர்ந்து ஸபா நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாயங்களும், கால்நடைகளும் முழுமையாக அழிந்துவிட்டதால் ஸபா பகுதியில் இவர்களால் வாழ்க்கையைத் தொடர முடியவில்லை. இதனாலும் அவர்கள் அங்கிருந்து வெளியேறி இருக்கலாம் என சிலர் குறிப்பிடுகின்றனர்.
மேன்மைமிகு குர்ஆனில் ‘ஸபா’ எனும் அத்தியாயத்தில் இடம்பெற்றிருக்கும் 15-19 ஆகிய வசனங்கள் இவர்களின் கூற்றை உறுதி செய்கிறது.
மேற்கூறப்பட்ட இரு காரணங்களை தவிர மற்றொரு காரணமும் இருந்ததாக தெரிய வருகிறது. அதாவது கஹ்லான், ஹிம்யர் இரு வமிசத்தினர் இடையில் சண்டை சச்சரவுகள் தோன்றின. இதனால் கஹ்லான் வமிசத்தினர் தங்களது நாட்டைத் துறந்து அமைதியான இடத்தை நோக்கி சென்று விட்டனர். வணிகங்கள் நசிந்து விட்டது மட்டும் காரணமாக இருந்திருந்தால் ஹிம்யர் வமிசத்தினரும் ஸபாவில் இருந்து வெளியேறி இருப்பார்கள். ஆனால், அவர்கள் வெளியேறவில்லை. இதிலிருந்து இவ்விரு வம்சத்தினருக்கும் இடையே இருந்த பகைமையும் ஒரு காரணம் எனத் தெரிய வருகிறது.