பக்கம் - 518 -
இறுதி வாரம்
நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையாகவே “நாளை நான் எங்கிருப்பேன்? நாளை நான் எங்கிருப்பேன்?” என துணைவியரிடம் விசாரிக்கத் தொடங்கினார்கள். நபி (ஸல்) அவர்களின் துணைவியர் நபி (ஸல்) விரும்பிய வீட்டில் தங்குவதற்கு அனுமதித்தனர். ஒருபுறம் ஃபழ்ல் இப்னு அப்பாஸ் (ரழி), மறுபுறம் அலீ இப்னு அபூதாலிப் (ரழி) தாங்கலாக, கால்கள் தரையில் உரசிக் கோடு போட்ட நிலையில் ஆயிஷா (ரழி) வீட்டிற்குச் சென்றார்கள். அவர்களின் தலை துணியால் கட்டப்பட்டிருந்தது. ஆயிஷா (ரழி) வீட்டிலேயே தங்களது வாழ்வின் இறுதி வாரத்தை நபி (ஸல்) கழித்தார்கள். அன்னை ஆயிஷா (ரழி) சூரா ஃபலக், நாஸ் மற்றும் நபி (ஸல்) அவர்களிடம் தான் கற்ற துஆக்களை ஓதி ஊதி வந்தார்கள். பரக்கத்தை நாடி நபி (ஸல்) அவர்களின் கரத்தாலேயே அவர்களைத் தடவி விட்டார்கள்.
மரணத்திற்கு ஐந்து நாட்கள் முன்பு
மரணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு புதன்கிழமை உடல் நெருப்பாய் கொதித்தது. வலியும் அதிகமானது. அவ்வப்போது நபி (ஸல்) அவர்களுக்கு மயக்கமும் ஏற்பட்டது. அப்போது “பல கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து ஏழு துருத்திகள் என் மீது ஊற்றுங்கள். நான் மக்களிடம் சென்று ஒப்பந்தம் வாங்கப் போகிறேன்” என்று கூறினார்கள். தோழர்கள் நபி (ஸல்) அவர்களை ஒரு பெரியபாத்திரத்தில் அமர வைத்து நீர் ஊற்றினார்கள். நபி (ஸல்) “போதும்! போதும்!” என்று கூறினார்கள். அப்போதுதான் நபி (ஸல்) அவர்களின் சூடு தணியக் கண்டார்கள். தலையில் தடிப்பான துணியைக் கட்டிக் கொண்டு போர்வையைப் போர்த்தியவர்களாக மிம்பரில் வந்து அமர்ந்தார்கள். அதுதான் நபி (ஸல்) அவர்களின் கடைசி சபையாகும். அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்துவிட்டு “மக்களே! என்னிடம் வாருங்கள்” என்று கூறியபோது மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி விரைந்து வந்தனர். அப்போது நபி (ஸல்) கூறியவற்றில் இதுவும் ஒன்று. “யூத கிருஸ்தவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்! தங்களின் தூதர்களுடைய அடக்கத் தலங்களை வணக்கத்தலங்களாக மாற்றி விட்டனர்.” மற்றொரு அறிவிப்பில்: “யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் அழிப்பானாக! தங்களது தூதர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களை வணங்கும் இடங்களாக மாற்றி விட்டனர். எனது கப்ரை வணங்கும் இடமாக ஆக்காதீர்கள்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, முவத்தா மாலிக்)
தன்னிடம் பழிதீர்த்துக் கொள்ள மக்களிடம் தன்னை ஒப்படைத்தார்கள். யாரையாவது நான் முதுகில் அடித்திருந்தால் இதோ எனது முதுகை தந்து விட்டேன். பழி தீர்க்கட்டும். யாரையாவது கண்ணியம் குலைய திட்டியிருந்தால் இதோ நான் முன் வந்துள்ளேன். அவர் பழிதீர்த்துக் கொள்ளட்டும். பின்பு மிம்பரிலிருந்து இறங்கி ளுஹ்ரைத் தொழ வைத்தார்கள். மீண்டும் மிம்பரில் ஏறி முன்னர் உரை நிகழ்த்தியவாறே பழி தீர்த்துக் கொள்ள வேண்டுவோர் பழி தீர்க்கக் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து “எனக்கு நீங்கள் மூன்று திர்ஹம் தர வேண்டும்” என்று கூறவே, “ஃபழ்லே! நீங்கள் அதைக் கொடுத்து விடுங்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.