பக்கம் - 55 -
பாசமிகு தாயாரிடம்
இந்நிகழ்ச்சியால் அதிர்ந்துபோன ஹலீமா நபி (ஸல்) அவர்களை அவரது தாயாரிடம் ஒப்படைத்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஆறு வயது வரை தாயாரிடமே வளர்ந்தார்கள்.
ஆமினா, மதீனாவில் மரணமடைந்த தனது அன்புக் கணவன் கப்ரைக் கண்டுவர விரும்பினார். தனது குழந்தை முஹம்மது, ஊழியப் பெண் உம்மு அய்மன் மற்றும் பொறுப்பாளர் அப்துல் முத்தலிப் ஆகியோருடன் மக்காவிலிருந்து 500 கிலோ மீட்டர் தூரம் உள்ள மதீனாவிற்கு பயணம் மேற்கொண்டார். மன அமைதிக்காக ஒரு மாதம் அங்கு தங்கிவிட்டு மக்காவுக்கே மீண்டும் பயணமானார். வழியில் ஆமினா நோய் வாய்ப்பட்டார். பிறகு நோய் அதிகமாகி மக்காவுக்கும் மதீனாவுக்குமிடையே ‘அப்வா’ என்ற இடத்தில் மரணமடைந்தார். (இப்னு ஹிஷாம்)
பரிவுமிக்க பாட்டனாரிடம்
நபி (ஸல்) அவர்களை அப்துல் முத்தலிப் மக்காவுக்கு அழைத்து வந்தார். அவர் அனாதையான தன் பேரர் மீது அன்பையும் பாசத்தையும் ஊட்டி வளர்த்தார். பிறக்கும் முன் தந்தையை இழந்த சோகம் ஒரு புறம் வருத்திக்கொண்டிருக்க, தற்போது தாயையும் இழந்து அந்த சோகம் இரட்டிப்பாகி விட்டது. தனது பிள்ளைகளை விட பேரர் மீது மிகுந்த அன்பு செலுத்தினார். அவரை தனிமையில் விட்டுவிடாமல் எல்லா நிலையிலும் தன்னுடன் வைத்து தனது பிள்ளைகள் அனைவரையும்விட அவருக்கு முன்னுமை அளித்து வந்தார்.
புனித கஅபாவின் நிழலில் அப்துல் முத்தலிபுக்கென ஓர் விரிப்பு விரிக்கப்பட்டிருக்கும். அவர் வரும்வரை அவரது பிள்ளைகள் அந்த விரிப்பைச் சுற்றி அமர்ந்திருப்பர். அவருக்கு மரியாதை செய்யும் விதமாக எவரும் அதில் அமரமாட்டார்கள். சிறுவரான நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்து விரிப்பில் அமர்வார்கள். அவரை அதிலிருந்து அப்துல் முத்தலிபின் பிள்ளைகள் அகற்றிவிட முயல்வார்கள். இதை அப்துல் முத்தலிப் பார்த்துவிட்டால் “எனது அருமைப் பேரரை விட்டுவிடுங்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவருக்கென ஒரு தனித் தன்மை இருக்கிறது” என்று கூறி, தன்னுடன் விரிப்பில் அமர்த்தி அவரது முதுகை தடவிக் கொடுப்பார். அவரது செயல்களையும் அசைவுகளையும் கண்டு களிப்படைவார். (இப்னு ஹிஷாம்)
நபி (ஸல்) அவர்களுக்கு 8 ஆண்டு இரண்டு மாதங்கள் பத்து நாள்கள் ஆனபோது பாட்டனார் அப்துல் முத்தலிப் மக்காவில் மரணமடைந்தார். தனது மரணத்திற்கு முன்பே சிறுவரை அவரது தந்தை அப்துல்லாஹ்வின் உடன்பிறந்த சகோதரர் அபூதாலிப் பராமரிக்க வேண்டுமென விரும்பினார். (இப்னு ஹிஷாம்)
பிரியமான பெரியதந்தையிடம்
சகோதரன் மகனைப் பராமரிக்கும் பொறுப்பை அபூதாலிப் மிகச் சிறப்பான முறையில் நிறைவேற்றினார். தனது பிள்ளைகளில் ஒருவராக அவரை ஆக்கிக் கொண்டார். அவருக்கு மிகுந்த முக்கியத்துவமும் கண்ணியமும் அளித்து வந்தார். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பாதுகாத்து அரவணைத்தார். நபி (ஸல்) அவர்களுக்காகவே பிறரின் நட்பையும் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டார். இதன் விவரங்களை உரிய இடங்களில் காண்போம்.