பக்கம் - 91 -
மீண்டும் குறைஷியர்கள்...
நபி (ஸல்) தங்களது ஏகத்துவ அழைப்பை நிறுத்தாமல் தொடர்வதைக் கண்ட குறைஷியர்கள், அபூதாலிப் முஹம்மதை கைவிட மறுத்து நம்மைப் பிரியவும் விரோதித்துக் கொள்ளவும் துணிந்து விட்டார் என்பதை அறிந்து கொண்டனர். அவர்கள் வலீதின் மகன் அமாராவை அழைத்துக் கொண்டு அபூதாலிபிடம் வந்தனர். “அபூதாலிபே! இவ்வாலிபர் குறைஷியரில் சிறப்பாக வளர்க்கப்பட்ட அழகிய வாலிபர். அவரது சகல உரிமைகளும் உமக்குரியது. இவரை உமது மகனாக வைத்துக் கொண்டு, உமது மார்க்கத்திற்கும் உமது மூதாதையர்களின் மார்க்கத்திற்கும் முரண்பட்டு, உமது கூட்டத்தாரிடையே பிளவை ஏற்படுத்தி, அவர்களின் அறிஞர்களை மூடர்களாக்கிய உமது சகோதரர் மகனை எங்களிடம் ஒப்படைத்துவிடும். ஒருவருக்கு ஒருவர் என சரியாகி விடும். நாங்கள் அவரைக் கொன்று விடுகிறோம்” என்றனர். அவர்களிடம் அபூதாலிப் மிகுந்த கோபத்துடன் “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களது பேரம் மிக மோசமானது. உங்கள் பிள்ளையை என்னிடம் ஒப்படைப்பீர்கள். அதை நான் ஊட்டி வளர்க்க வேண்டும்! எனது மகனை உங்களிடம் நான் ஒப்படைப்பேன். நீங்கள் அவரைக் கொலை செய்வீர்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! இது ஒருபோதும் நடக்காது” என்று கூறினார். அதற்கு முத்இம் இப்னு அதீ (அப்து மனாஃபின் கொள்ளுப்பேரர்) “அபூதாலிபே! உமது கூட்டத்தினர் உமக்கு நீதமான தீர்வைக் கூறி நெருக்கடியிலிருந்து உம்மை விடுவிக்க முயன்றனர். ஆனால் நீர் அதில் எதையும் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லையே!” என்றார். அதற்கு அபூதாலிப் “அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் நீதம் காட்டவில்லை. (முத்இமே) நீ என்னைக் கைவிட்டு விட்டு எனக்கு எதிராக இக்கூட்டத்தினரைத் தூண்டிவிடுகிறாய்; அவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறாய். நீ விரும்பியதைச் செய்துகொள்” என்று கோபமாகக் கூறினார். (இப்னு ஹிஷாம்)
அபூதாலிபின் மூலமாக நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணியை முடக்கிவிட வேண்டுமென்ற தங்களது திட்டத்தில் தோல்வியுற்ற குறைஷியர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூதாலிப் தானாக விலகிக்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கத் திட்டமிட்டனர்.
நபியவர்கள் மீது அத்துமீறல்
நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்டு அழைப்புப் பணியைத் தொடங்கும் வரை குறைஷியர்கள் அவர்களை தங்களில் மதிக்கத்தக்க நபராகவே கருதி வந்தனர். அழைப்புப் பணியைத் தொடங்கியதும் அவர்கள் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு நபி (ஸல்) அவர்கள் மீது அத்துமீறாதிருந்தனர். தற்பெருமையும் ஆணவமும் கொண்டிருந்த அவர்களால் நபி (ஸல்) அவர்களின் செயல்பாடுகளை நீண்ட நாள் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. குறைஷித் தலைவர்களில் ஒருவனான அபூ லஹப் அழைப்புப் பணியின் முதல் நாளிலிருந்தே நபி (ஸல்) அவர்களிடம் கடும் பகைமையைக் காட்டி வந்தான் என்பதை ஹாஷிம் கிளையாரின் சபையிலும் ஸஃபா மலை நிகழ்ச்சியிலும் நாம் அறிந்திருக்கிறோம்.
நபித்துவத்துக்கு முன் நபி (ஸல்) அவர்கள் தங்களின் மகள்கள் ருகையா, உம்மு குல்ஸும் (ரழி) அவர்களை அபூலஹபின் மகன்களான உத்பா, உதைபாவுக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தைத் தொடங்கியதும் அபூ லஹப் தனது மகன்களை நிர்ப்பந்தித்து விவாகரத்துச் செய்ய வைத்துவிட்டான். (இப்னு ஹிஷாம்)