முஹம்மது நபி (ஸல்) வரலாறு - பக்கம் : 319

இவர்கள் அவனுடன் புறப்பட்டு பிஃரு மஊனா என்ற இடத்தை அடைந்தனர். இந்த இடம் ஆமிர் கிளையினருக்குச் சொந்தமான நிலத்திற்கும் ஸுலைம் கிளையினருக்கு சொந்தமான விவசாயக் களத்திற்கம் மத்தியலுள்ள நீர் நிலையாகும். அங்கு அனைவரும் தங்கிக்கொண்டு ஹிராம் இப்னு மில்ஹான் என்ற தோழரை நபி (ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொடுத்து ஆமிர் இப்னு துiஃபல் என்பவனிடம் அனுப்பினர். இந்த அல்லாஹ்வின் எதிரி அக்கடிதத்தை படிக்கவில்லை. அவன் சாடைக்காட்ட, ஒருவன் சிறு ஈட்டியால் ஹிராமைப் பின்புறத்திலிருந்து குத்தினான். தான் குத்தப்பட்டதையும், தனது உடம்பில் இரத்தம் வருவதையும் பார்த்த ஹிராம் “அல்லாஹு அக்பர். அல்லாஹ் மிகப் பெரியவன், கஅபாவின் இறைவின் மீது சத்தியம்! நான் வெற்றி பெற்றுவிட்டேன்” என்று கூறினார்.

அல்லாஹ்வின் எதிரியான அவன் எஞ்சிய மற்ற நபித்தோழர்களைக் கொல்வதற்கு ஆமிர் கிளையினரை அழைத்தான். ஆனால், அபூபரா இவர்களுக்கப் பாதுகாப்பு அளித்திருப்பதால் ஆமிர் கிளையினர் அதற்கு மறுத்து விட்டனர். பின்பு ஸுலைம் கிளையினரை அழைத்தான். ஸுலைமினரில் உஸைய்யா, ரிஃல், தக்வான் என்ற மூன்று வகுப்பினர் அவனது அழைப்பை ஏற்று அவனுடன் கிளம்பினர். இவர்கள் அனைநிகழ்நவரும் நபித்தோழர்களைச் சுற்றி வளைத்து நபித்தோழர்களுடன் சண்டையிட்டனர். இதில் தோழர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஆனால், கஅபு இப்னு ஜைது இப்னு நஜ்ஜார் என்ற தோழர் மட்டும் படுகாயங்களுடன் பூமியில் சாய்ந்தார். இவர் இறந்துவிட்டதாக எதிரிகள் எண்ணினர். எதிரிகள் சென்ற பிறகு அவ்விடத்தில் இருந்து தப்பித்து மதீனா வந்தார். இவர் பின்னால் நடந்த அகழ் போரிலும் கலந்தார். அதில் எதிரிகளால் கொல்லப்பட்டார்.

தோழர்களில் அம்ர் இப்னு உமைய்யா ளம்ரி, முன்திர் இப்னு உக்பா இப்னு ஆமிர் ஆகிய இருவரும் முஸ்லிம்களின் வாகனங்களை மேய்த்து வருவதற்க்காகச் சென்றிருந்தனர். அங்கிருந்து முஸ்லிம்கள் தங்கியிருந்த இடத்திற்கு மேல் பிணந்தின்னி பறவைகள் வட்டமிடுவதை பார்த்து முஸ்லிம்களுக்கு ஏதோ ஆபத்து நிகழ்ந்து விட்டதை உணர்ந்தனர். உடனே அவ்விருவரும் அங்கு விரைந்தனர். எதிரிகள் தங்கள் தோழர்களை வஞ்சித்ததைப் பார்த்து பொங்கி எழுந்தனர். தாங்கள் இருவர் மட்டுமே இருக்கிறோம் என்பதையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் எதிரிகளை எதிர்த்தனர். நீண்ட நேர சண்டைக்குப் பின் முன்திர் எதிரிகளால் கொல்லப்பட்டார். அம்ர் இப்னு உமையா கைதியாக்கப்பட்டார். அம்ர் முழர் குடும்பத்தைச் சார்ந்தவர் என்று தெரியவந்ததும் அவரின் முன்னந்தலையை சிரைத்துவிட்டு எதிரிகளின் தலைவனான ஆமிர் தனது தாய் செய்திருந்த நேர்ச்சைக்காக அவரை உரிமையிட்டு விட்டான். அம்ர் இப்னு உமைய்யா ழம்ரி (ரழி) முஸ்லிம்களில் மிகச் சிறந்தவர்களான இந்த எழுபது தோழர்கள் கொல்லப்பட்ட, மிகக் கவலையூட்டும் செய்தியை நபி (ஸல்) அவர்களிடம் கூறவதற்காக மதீனா நோக்கி விரைந்தார். இந்நிகழ்ச்சி உஹுத் போரில் ஏற்பட்ட வேதனையை மீண்டும் முஸ்லிம்களுக்கு நினைவூட்டியது. ஆனால் போரில் சண்டையிட்டு இறந்தனர். இவர்கள் வஞ்சகமாகத் தாக்கப்பட்டு மரணமடைந்தனர்.