முஹம்மது ஜான்
ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! நீங்கள் ஒரு குறித்த தவணையின் மீது (உங்களுக்குள்) கடன் கொடுத்துக் கொண்டால் அதை எழுதிக் கொள்ளுங்கள். தவிர, (கடன் கொடுத்தவனோ அல்லது வாங்கியவனோ) உங்களில் (எவர் எழுதியபோதிலும் அதை) எழுதுபவர் நீதமாகவே எழுதவும். (அவ்விருவரும் எழுத முடியாமல், எழுத்தாளரிடம் கோரினால்,) எழுத்தாளர் (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவருக்கு அறிவித்திருக்கிறபடி, எழுதிக் கொடுக்க மறுக்கவேண்டாம்; அவர் எழுதிக் கொடுக்கவும். தவிர, கடன் வாங்கியவரோ (கடன் பத்திரத்தின்) வாசகத்தைக் கூறவும். (வாசகம் கூறுவதிலும் அதை எழுதுவதிலும்) தன் இறைவனாகிய அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளவும். ஆகவே, அதில் எதையும் குறைத்துவிட வேண்டாம். (வாசகம் கூறவேண்டிய) கடன் வாங்கியவர், அறிவற்றவராக அல்லது (வாசகம் கூற) இயலாத (வயோதிகராக அல்லது சிறு)வராக அல்லது தானே வாசகம் சொல்ல சக்தியற்ற (ஊமை போன்ற)வராகவோ இருந்தால், அவருடைய பொறுப்பாளர் நீதமாக வாசகம் கூறவும். மேலும், நீங்கள் சாட்சியாக (அங்கீகரிக்க)க்கூடிய உங்கள் ஆண்களில் (நேர்மையான) இருவரை (அக்கடனுக்குச்) சாட்சியாக்குங்கள். அவ்வாறு (சாட்சியாக்க வேண்டிய) இருவர் ஆண்களாக இல்லையெனில், ஓர் ஆணுடன் நீங்கள் சாட்சியாக அங்கீகரிக்கக்கூடிய இரு பெண்களை சாட்சியாக்க வேண்டும். ஏனென்றால், (பெண்கள் பெரும்பாலும் கொடுக்கல் வாங்கலை அறியாதவராக இருப்பதனால்) அவ்விரு பெண்களில் ஒருத்தி மறந்து விட்டாலும் மற்ற பெண் அவளுக்கு (அதை) ஞாபகமூட்டுவதற்காக (இவ்வாறு செய்யவும்). சாட்சிகள் (அவர்களுக்குத் தெரிந்தவற்றைக் கூற) அழைக்கப்படும் போது (சாட்சி கூற) மறுக்க வேண்டாம். மேலும், (கடன்) சிறிதாயினும் பெரிதாயினும் (உடனுக்குடன் எழுதிக் கொள்ளவும். அதன்) தவணை (வரும்)வரை அதை எழு(தாமல்) சோம்பல்பட்டு இருந்துவிடாதீர்கள். கடனை ஒழுங்காக எழுதிக் கொள்ளவும். இது அல்லாஹ்விடத்தில் வெகு நீதியானதாகவும், சாட்சியத்திற்கு வெகு உறுதியானதாகவும் (கடனின் தொகையையோ அல்லது தவணையையோ பற்றி) நீங்கள் சந்தேகப்படாமல் இருக்க மிக்க பக்க(பல)மாகவும் இருக்கும். ஆனால், நீங்கள் உங்களுக்கிடையில் ரொக்கமாக நடத்திக் கொள்ளும் வர்த்தகமாயிருந்தால் அதை நீங்கள் எழுதிக் கொள்ளாவிட்டாலும் அதனால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும், (ரொக்கமாக) நீங்கள் வர்த்தகம் செய்து கொண்ட போதிலும் அதற்கும் சாட்சி ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! மேலும், (தவறாக எழுதுமாறு) எழுத்தாளரையோ (பொய் கூறும்படி) சாட்சியையோ துன்புறுத்தக் கூடாது. (அவ்வாறு) நீங்கள் துன்புறுத்தினால் நிச்சயமாக அது உங்களுக்குப் பெரும் பாவமாகும். ஆதலால், அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ் (கொடுக்கல் வாங்கலைப் பற்றிய தன் சட்டங்களை) உங்களுக்கு (இப்படியெல்லாம்) கற்றுக் கொடுக்கிறான். மேலும், அல்லாஹ் அனைத்தையும் மிக அறிந்தவன் ஆவான்.
IFT
இறைநம்பிக்கையாளர்களே! ஒரு குறிப்பிட்ட தவணையை நிர்ணயித்து நீங்கள் உங்களுக்குள் கடன் கொடுக்கல், வாங்கல் மேற்கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். (அதாவது) உங்களுக்கிடையில் ஓர் எழுத்தர் நீதியோடு எழுத வேண்டும்; எழுதவும், படிக்கவும் உள்ள ஆற்றலை அல்லாஹ் யாருக்கு வழங்கியுள்ளானோ அவர் அதனை எழுத மறுக்கக் கூடாது. அவர் எழுத வேண்டும்; எவர் மீது கடனைச் செலுத்தும் பொறுப்பு இருக்கிறதோ அவர், (எழுதுவதற்கு) வாசகம் சொல்லிக் கொடுக்க வேண்டும். (அப்போது) அவருடைய அதிபதியாகிய அல்லாஹ்வுக்கு அவர் அஞ்சிக் கொள்ள வேண்டும். மேலும் கடன் சம்பந்தமாக தீர்மானிக்கப்பட்டதிலிருந்து எதையும் அவர் கூட்டவோ குறைக்கவோ வேண்டாம். ஆனால் எவர் மீது (கடனைச் செலுத்தும்) பொறுப்பு இருக்கிறதோ அவர் (போதிய) அறிவு இல்லாதவராகவோ, இயலாதவராகவோ, தானே வாசகம் சொல்ல ஆற்றல் இல்லாதவராகவோ இருந்தால் அப்போது அவரின் பொறுப்பாளர் நீதியான முறையில் வாசகம் சொல்ல வேண்டும். மற்றும் உங்களில் இரு ஆண்களை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். இரு ஆண்கள் இல்லையென்றால், ஓர் ஆணையும் இரு பெண்களையும் சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். (ஏனெனில்) அவ்விருவரில் ஒருத்தி மறந்துவிட்டால், மற்றொருத்தி அவளுக்கு அதை நினைவூட்டுவாள் என்பதற்காக! இந்த சாட்சிகள் உங்களால் ஏற்றுக்கொள்ளத்தக்கவர்களாய் இருக்க வேண்டும். சாட்சி சொல்ல வேண்டியவர்கள் (சாட்சியத்துக்காக) அழைக்கப்படும்போது மறுக்கக் கூடாது. (தவிர கடன் ஒப்பந்தம்) சிறிதாயினும் சரி, பெரிதாயினும் சரி தவணை குறிப்பிட்டு அதை எழுதி வைப்பதில் அலட்சியமாய் இருந்து விடாதீர்கள்! இதுவே அல்லாஹ்விடத்தில் உங்களுக்கு மிக நீதியான முறையாகும்; மேலும் சாட்சியத்தை மிக (இலகுவாக) உறுதிப்படுத்தக் கூடியதும் உங்கள் சந்தேகங்களைக் குறைக்கக்கூடியதுமாகும். ஆனால், அந்த ஒப்பந்தம் உங்களுக்கிடையே நீங்கள் நிறைவேற்றிக் கொள்கின்ற உடனடி ரொக்கக் கொள்முதலாக இருந்தால், அதை நீங்கள் எழுதி வைக்காமலிருப்பதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. ஆயினும் வியாபார ஒப்பந்தங்களைத் தீர்மானித்து விட்டீர்களாயின் அவற்றிற்குச் சாட்சியம் வைத்துக் கொள்ளுங்கள். எழுத்தரும், சாட்சிகளும் துன்புறுத்தப் படக் கூடாது. அவ்வாறு நீங்கள் துன்புறுத்தினால், அது நிச்சயமாக உங்களுக்குப் பெரும் பாவமாகும். அல்லாஹ்வின் சினத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்; மேலும் அவன் உங்களுக்கு (நேரான வழிமுறையைக்) கற்றுக் கொடுக்கின்றான்; மேலும் அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் நன்கறிபவனாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் ஒரு குறிப்பிடப்பட்ட தவணை வரை நீங்கள் ஒருவருக்கொருவர் கடன் கொடுக்கல் வாங்கல் செய்துகொண்டால் அதை எழுதிக் கொள்ளுங்கள். மேலும், உங்களிடையே (அதை) எழுதுபவர் நீதத்தைக் கொண்டு எழுதவும். (அவ்விருவரும் எழுத முடியாமல், எழுத்தாளரிடம் எழுதக் கோரினால்) எழுத்தாளர் அல்லாஹ் அவருக்குக் கற்றுக்கொடுத்தது போன்று (நீதமாக) அவர் எழுதுவதற்கு மறுக்கவேண்டாம். ஆகவே, அவர் எழுதிக் கொடுக்கவும் இன்னும், எவர்மீது ‘கடன்’ இருக்கிறதோ அவரே வாசகத்தைக் கூறவும் (வாசகம் கூறுவதிலும் அதை எழுதுவதிலும்) தன் இரட்சகனாகிய அவ்லாஹ்வுக்கு அவர் பயந்து கொள்ளவும். மேலும், அதில் யாதொன்றையும் அவர் குறைத்து விட வேண்டாம். எனவே, எவர்மீது (கடன்) இருக்கின்றதோ அவர் அறிவற்றவராகவோ, அல்லது (நோய், முதுமை, சிறு பிராயம் போன்றதால்) பலவீனமானவராகவோ அல்லது தானே வாசகஞ் சொல்லச் சக்தியற்றவராகவோ இருந்தால், அவருடைய பாதுகாவலன் நீதமாக வாசகங்கூறவும். மேலும், நீங்கள் உங்களுடைய ஆண்களிலிருந்து (நீதிவான்களான) இரு சாட்சிகளை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். அவ்வாறு இருவரும் ஆண்களாகயில்லாதிருந்தால், சாட்சியாளர்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களில் ஒரு ஆணும், இரு பெண்களும் சாட்சியாக்கப் படவேண்டும். இருபெண்கள் ஏனெனில், அவ்விருவரில் ஒருவர் மறந்து விடலாம், அப்போது அவ்விருவரில் ஒருத்தி மற்றொருத்திக்கு நினைவுபடுத்துவாள். மேலும், சாட்சிகள் (தாம் அறிந்ததைப் பற்றிக் கூற அழைக்கப்படும்போது) அறிந்ததைக் கூற மறுக்க வேண்டாம். இன்னும் (கடன்) சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அதன் தவணைவரையில் அதனை எழுதிக்கொள்வதில் சடைந்து விடாதீர்கள். இது அல்லாஹ்வினிடத்தில் மிக்க நீதியானதும் சாட்சியத்தை மிக்க உறுதிப்படுத்தக்கூடியதும் நீங்கள் சந்தேகிக்காமலிருப்பதற்கு மிக்க நெருக்கமானதுமாகும். நீங்கள் உங்களுக்கிடையில் உடனுக்குடன் செய்யும் ரொக்கமான வியாபாரமாக இருந்தாலே தவிர, அப்போது அதனை நீங்கள் எழுதிக்கொள்ளாமலிருப்பது உங்கள் மீது குற்றமல்ல. மேலும், ஒருவருக்கொருவர் (ரொக்கமாக) நீங்கள் வர்த்தகம் செய்துகொண்டால் சாட்சி வைத்துக் கொள்ளுங்கள். மேலும், எழுதுகிறவனோ, சாட்சியோ (தமக்கு சாதகமாக நடந்து கொள்ள வேண்டுமென) துன்புறுத்தப்படக்கூடாது. இன்னும், நீங்கள் அவ்வாறு செய்தால், நிச்சயமாக அது உங்களுக்குப் பாவமாகும். இன்னும், அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். மேலும், அல்லாஹ் (இதுபற்றியவற்றை) உங்களுக்கு கற்றுக் கொடுக்கின்றான். இன்னும் அல்லாஹ்வோ ஒவ்வொரு பொருளைப்பற்றியும் நன்கறிகிறவன்.
Saheeh International
O you who have believed, when you contract a debt for a specified term, write it down. And let a scribe write [it] between you in justice. Let no scribe refuse to write as Allah has taught him. So let him write and let the one who has the obligation [i.e., the debtor] dictate. And let him fear Allah, his Lord, and not leave anything out of it. But if the one who has the obligation is of limited understanding or weak or unable to dictate himself, then let his guardian dictate in justice. And bring to witness two witnesses from among your men. And if there are not two men [available], then a man and two women from those whom you accept as witnesses - so that if one of them [i.e., the women] errs, then the other can remind her. And let not the witnesses refuse when they are called upon. And do not be [too] weary to write it, whether it is small or large, for its [specified] term. That is more just in the sight of Allah and stronger as evidence and more likely to prevent doubt between you, except when it is an immediate transaction which you conduct among yourselves. For [then] there is no blame upon you if you do not write it. And take witnesses when you conclude a contract. Let no scribe be harmed or any witness. For if you do so, indeed, it is [grave] disobedience in you. And fear Allah. And Allah teaches you. And Allah is Knowing of all things.