அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை; காஃபிர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம் - வேதம் கொடுக்கப்பட்டவர்கள் - உறுதிகொள்வதற்கும், ஈமான் கொண்டவர்கள், ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும், முஃமின்களும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கும் (நாம் இவ்வாறு ஆக்கினோம்); எனினும் எவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களும் காஃபிர்களும்: “அல்லாஹ் (பத்தொன்பது எனும் இந்த எண்ணிக்கையின்) உதாரணத்தைக் கொண்டு எ(ன்ன கருத்)தை நாடினான்?” என கேட்பதற்காகவுமே (இவ்வாறு ஆக்கினோம்). இவ்வாறே அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டிலும் விடுகிறான்; இன்னும் தான் நாடியவர்களை நேர்வழியிலும் செலுத்துகிறான்; அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள்; (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.
அப்துல் ஹமீது பாகவி
நரகத்தின் காவலாளிகளாக வானவர்களையே தவிர (மற்றெவரையும்) நாம் ஏற்படுத்தவில்லை. நிராகரிப்பவர்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு)இவர்களுடைய தொகையை(ப் பத்தொன்பதாக) நாம் ஏற்படுத்தினோம். வேதத்தையுடையவர்கள் இதை உறுதியாக நம்பவும். நம்பிக்கை கொண்டவர்களின் நம்பிக்கையை இது அதிகப்படுத்தும். வேதத்தை உடையவர்களும், நம்பிக்கையாளர்களும் (இதைப் பற்றிச்) சந்தேகிக்கவே வேண்டாம். எனினும், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களும், நிராகரிப்பவர்களும் இந்த உதாரணத்தைக் கொண்டு, அல்லாஹ் என்ன அறிவிக்க நாடினான்? என்று கூறுவார்கள். (நபியே!) இவ்வாறே, அல்லாஹ், தான் நாடியவர்களைத் தவறான வழியில் விட்டு விடுகிறான். தான் நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். (நபியே!) உமது இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறியமாட்டார்கள். இவை மனிதர்களுக்கு நல்லுபதேசங்களே தவிர வேறில்லை.
IFT
நாம் வானவர்களையே இந்த நரகத்தின் காவலர்களாய் ஆக்கியுள்ளோம். அவர்களின் இந்த எண்ணிக்கையை நிராகரிப்பாளர்களுக்கு சோதனையாக ஆக்கியுள்ளோம். எதற்காகவெனில், வேதம் வழங்கப்பட்ட மக்களுக்கு உறுதி ஏற்படுவதற்காகவும் இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகமாவதற்காகவும், மேலும், வேதம் வழங்கப்பட்டவர்களும் நம்பிக்கையாளர்களும் எவ்வித ஐயத்திற்கும் ஆளாகக்கூடாது என்பதற்காகவும், மேலும், நெஞ்சில் நோய் உள்ளவர்களும், நிராகரிப்பாளர்களும் “அல்லாஹ் இந்த விநோதமான சொல்லால் என்ன நாடுகின்றான்?” என்று கேட்பதற்காகவும்தான்! இவ்வாறு அல்லாஹ் தான் நாடுபவர்களை வழிகேட்டில் தள்ளிவிடுகின்றான். மேலும், தான் நாடுபவர்களுக்கு நேர்வழியை அளிக்கின்றான். மேலும், உம் இறைவனின் படைகளை அவனைத் தவிர வேறெவரும் அறிந்திட மாட்டார் நரகத்தைப் பற்றிய இந்த விவரம் எடுத்துரைக்கப்பட்டதன் நோக்கம், மக்களுக்கு இதன் மூலம் ஓர் அறிவுரை கிடைக்கட்டும் என்பதே அன்றி வேறில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நரகத்தின் காவலர்களை மலக்குகளாகவே தவிர நாம் ஆக்கவில்லை; இன்னும், அவர்களுடைய எண்ணிக்கையை நிராகரிப்போருக்குச் சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை; வேதம் கொடுக்கப்பட்டோர் (இதனை) உறுதி கொள்வதற்காகவும், விசுவாசங்கொண்டோர் (தம்) விசுவாசத்தை அதிகமாக்கிக் கொள்வதற்காகவும், இன்னும், வேதம் கொடுக்கப்பட்டோரும், விசுவாசிகளும் (இதைப் பற்றிச்) சந்தேகிக்காமலிருப்பதற்காகவும், (நாம் அவ்வாறு ஆக்கினோம்). இன்னும், எவர்களுடைய இதயங்களில் நோய் இருக்கின்றனதோ அவர்களும், நிராகரித்துக் கொண்டிருப்போரும் “இதனைக் கொண்டு, உதாரணமாக அல்லாஹ் எதை (அறிவிக்க) நாடினான்?” என்று கூறுவதற்காகவும் (இவ்வாறு ஆக்கினோம் நபியே!) இவ்வாறே அல்லாஹ், தான் நாடியவர்களை வழிகெடச் செய்கிறான்; தான் நாடியவர்களை நேர் வழியிலும் செலுத்துகின்றான்; இன்னும், உமதிரட்சகனின் படைகளை அவனைத் தவிர (மற்றெவரும்) அறியமாட்டார்; அது மனிதர்களுக்கு உபதேசமேயன்றி வேறில்லை.
Saheeh International
And We have not made the keepers of the Fire except angels. And We have not made their number except as a trial for those who disbelieve - that those who were given the Scripture will be convinced and those who have believed will increase in faith and those who were given the Scripture and the believers will not doubt and that those in whose hearts is disease [i.e., hypocrisy] and the disbelievers will say, "What does Allah intend by this as an example?" Thus does Allah send astray whom He wills and guide whom He wills. And none knows the soldiers of your Lord except Him. And it [i.e., mention of the Fire] is not but a reminder to humanity.
இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. அவனே (நம்) பயபக்திக்குரியவன்; அவனே (நம்மை) மன்னிப்பதற்கும் உரிமையுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் நாடினால் தவிர, அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது.(படைப்பினங்கள்) அஞ்சுவதற்கு அவனே தகுதியானவன், (படைப்பினங்களை) மன்னிப்பதற்கும் அவனே தகுதியானவன்.
IFT
இவர்கள் எந்தப் படிப்பினையும் பெறமாட்டார்கள்; அல்லாஹ் அதை நாடினாலே தவிர! அஞ்சப்படுவதற்குத் தகுதியுடையவன் அவன் ஒருவனே! தனக்கு அஞ்சுபவர்களை மன்னிப்பதற்கு அவனே தகுதியுடையவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற மாட்டார்கள், அவனே, பயப்படுவதற்குரியவனும் (விசுவாசிகளை) மன்னிப்பதற்குரியவனும் ஆவான்.
Saheeh International
And they will not remember except that Allah wills. He is worthy of fear and adequate for [granting] forgiveness.