فَتَبَسَّمَ ضَاحِكًا مِّن قَوْلِهَا وَقَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ
அதன் சொல்லைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார்; சிரித்தார். மேலும், "என் இறைவா! நீ என்மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உனது அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக்கொள்ளும் நற்கருமங்களை நான் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! மேலும், உனது நல்லடியார்களில் என்னையும் உனது அருளினால் சேர்த்தருள்வாயாக!" என்று கூறினார்.
(فَتَبَسَّمَ ضَاحِكًا مِّن قَوْلِهَا) அதன் சொல்லைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார்; சிரித்தார்.
அதாவது, அந்த எறும்பின் பேச்சைக் கேட்டு, சுலைமான் (அலை) அவர்கள் ஆச்சரியப்பட்டுச் சிரித்தார்கள்.
(وَقَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ) "என் இறைவா! நீ என்மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உனது அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்த எனக்கு அருள் பாலிப்பாயாக!"
அதாவது, பறவைகள், மிருகங்கள் ஆகியவற்றின் மொழியைப் புரிந்துகொள்ளும் ஆற்றலை எனக்களித்தாயே! அதற்காகவும், இஸ்லாத்தையும் ஈமானையும் எனக்கும் என் பெற்றோருக்கும் வழங்கினாயே! அதற்காகவும் உனக்கு நன்றி செலுத்த எனக்கு அருள் புரிவாயாக!
(وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ) "நீ பொருந்திக்கொள்ளும் நற்கருமங்களை நான் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக!"
அதாவது, உனது நேசத்தையும் திருப்பொருத்தத்தையும் பெற்றுத் தரும் நற்செயல்களைச் செய்ய எனக்கு வாய்ப்பளிப்பாயாக!
(وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ) "மேலும், உனது நல்லடியார்களில் என்னையும் உனது அருளினால் சேர்த்தருள்வாயாக!"
அதாவது, மறுமையில் உயர்ந்த கூட்டத்தினரான உனது நல்லடியார்களுடன் என்னையும் சேர்த்தருள்வாயாக! என்று சுலைமான் (அலை) பிரார்த்தித்தார்.