பக்கம் - 37 -
‘துப்பான் அஸ்அத் அபூ கரப்’ என்பவனால் யூதமதம் யமன் நாட்டிலும் நுழைந்தது. இவன் மதீனாவின் மீது போர் தொடுத்தான். பிறகு அங்கே, யூதர்கள் மூலம் யூத மதத்தைத் தழுவினான். குரைளா குடும்பத்தைச் சார்ந்த இரு யூத அறிஞர்களை அவன் தன்னுடன் யமன் நாட்டுக்கு அழைத்துச் சென்றான். அதிலிருந்து யமனில் யூதமதம் பரவியது. அபூ கரபுக்குப் பிறகு அவனது மகன் யூஸுப் தூ நுவாஸ் யமனின் அரசனானான். அவன் நஜ்ரான் பகுதியிலிருந்த கிறிஸ்துவர்கள் மீது படையெடுத்து அவர்களை யூத மதத்திற்கு மாறும்படி நிர்ப்பந்தித்தான். அவர்கள் மறுத்துவிடவே பெரும் அகழிகளைத் தோண்டி அதை நெருப்புக் குண்டமாக ஆக்கி அதில் ஆண், பெண், குழந்தைகள் என்ற எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைவரையும் தூ நவாஸ் வீசி எறிந்தான். அதில் ஏறத்தாழ இருபதாயிரத்திலிருந்து நாற்பதாயிரம் கிறிஸ்துவர்கள் வரை கொல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சி கி.பி. 523ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. (இப்னு ஹிஷாம்)

இதைப் பற்றி அல்லாஹ் தனது அருள்மறையில் இவ்வாறு குறிப்பிடுகிறான்:

அகழுடையவர்கள் அழிக்கப்பட்டார்கள். (அவ்வாறே இம்மக்காவாசிகளும் அழிக்கப்படுவார்கள்.) அது, விறகுகள் போட்டெரித்த நெருப்பு (அகழ்.) அதன் முன் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த சமயத்தில், நம்பிக்கையாளர்களை (நெருப்புக் கிடங்கில் போட்டு) நோவினை செய்வதை அவர்கள் (வேடிக்கையாகப்) பார்த்துக் கொண்டுமிருந்தார்கள். (அல்குர்ஆன் 85 : 4 - 7)

கிறிஸ்துவ மதம்: ஹபஷியர் மற்றும் சில ரோமானிய குழுக்களின் ஆக்கிரமிப்புகளால் அரபிய நாடுகளுக்குள் இம்மதம் புகுந்தது. ஹபஷிகள் யமன் நாட்டை முதன்முறையாக கி.பி. 340 ஆம் ஆண்டில் கைப்பற்றினர். அவர்களது ஆக்கிரமிப்பு நீண்ட காலம் நிலைத் திருக்கவில்லை. கி.பி. 370லிருந்து 378 வரையுள்ள காலத்தில் அவர்கள் யமனிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். எனினும், கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதில் அவர்கள் வெறிகொண்டு அலைந்தனர். ஹபஷியர்களின் ஆக்கிரமிப்பு காலத்தில் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த ‘ஃபீம்யூன்’ எனும் ஓர் இறைநேசர் நஜ்ரான் வந்தடைந்தார். அங்கு வசிப்பவர்களை கிறிஸ்துவத்தைத் தழுவ அழைத்தார். அவன் வாய்மையையும் அவரது நேரிய மார்க்கத்தையும் கண்ட அம்மக்கள் ஆர்வத்துடன் கிறிஸ்துவத்தில் இணைந்தனர். (இப்னு ஹிஷாம்)

நஜ்ரானில் வசித்த கிறிஸ்துவர்களை மன்னன் தூ நுவாஸ் நெருப்பு அகழியில் எரித்துக் கொன்றானல்லவா! அதற்குப் பழிவாங்கும் முகமாக ஹபஷியர்கள் இரண்டாவது முறையாக கி.பி 525ஆம் ஆண்டில் யமனைக் கைப்பற்றினர். அப்போது ‘அப்ரஹா அல் அஷ்ரம்’ என்பவன் யமனை ஆட்சி செய்தான். அவன் கிறிஸ்துவத்தை தீவிரமாக பரப்புவதில் மிகுந்த ஆர்வம் காட்டினான். அவன் யமனில் ஒரு கிறிஸ்துவ கோயிலைக் கட்டினான். கஅபாவை ஹஜ்ஜு செய்யச்செல்லும் அரபியர்கள் ஹஜ்ஜுக்காக கஅபா செல்வதைத் தடுத்து, தான் கட்டிய கோயிலைத் தரிசிக்க வரவேண்டும்; கஅபாவை இடித்துத் தகர்த்திட வேண்டுமென விரும்பினான். ஆனால் கடுந்தண்டனையால் அல்லாஹ் அவனை அழித்துவிட்டான்.

மற்றொரு புறம், ரோம் பகுதிகளை ஒட்டியிருந்த காரணத்தால் கஸ்ஸானிய அரபியர்கள், தங்லிப், தய்ம் வமிசத்தைச் சேர்ந்த அரபியர்களும் கிறிஸ்துவ மதத்தைத் தழுவினர். இதைத்தவிர ஹீராவின் சில அரசர்களும் கிறிஸ்துவத்தைத் தழுவினர்.

மஜூஸிய்யா: (நெருப்பை வணங்கும் மதம்) இது பெரும்பாலும் பாரசீகத்தை ஒட்டியிருந்த அரபியர்களிடம் காணப்பட்டது. இராக், பஹ்ரைன், அல் அஹ்ஸா, ஹஜர் மற்றும் அரபிய வளைகுடா பகுதிகளில் வசித்து வந்த அரபியர்களும் இதைப் பின்பற்றினர். இது மட்டுமின்றி யமன் நாட்டை பாரசீகர்கள் கைப்பற்றியிருந்த காலத்தில் யமனியர் பலர் மஜூஸி மதத்தில் இணைந்தனர்.