பக்கம் - 40 -
நான்காம் வகை: பலர் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வர். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்க மாட்டாள். இப்பெண்கள் விலை மாதர்கள் ஆவர். இவர்கள் தங்களது வீட்டு வாசலில் கொடியை நட்டு வைத்திருப்பார்கள். பலர் அங்கு வந்து போவார்கள். இதில் ஒருத்தி கர்ப்பமாகிக் குழந்தை பெற்றால் மக்கள் ஒன்று கூடி அங்க அடையாளங்களை வைத்து குழந்தையின் தந்தையை கண்டறியும் முகக்குறி நிபுணர்களை அழைத்து வருவார்கள். அந்த நிபுணர்கள் ஆராய்ந்து தந்தையை முடிவு செய்து அம்மனிதனுடன் அந்தக் குழந்தையை இணைத்து விடுவார்கள். அவனிடம் அக்குழந்தை ஒப்படைக்கப்பட்டு அவனுடைய மகன் என்று பெயர் சொல்லி அழைக்கப்படும். அதைத் தன் குழந்தையல்ல என்று அவனும் மறுக்க மாட்டான்.

அல்லாஹ் சத்திய மார்க்கத்துடன் முஹம்மது (ஸல்) அவர்களை அனுப்பியபோது இன்று மக்களின் வழக்கிலுள்ள இஸ்லாமியத் திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத்திருமணங்கள் அனைத்தையும் தகர்த்து விட்டான். (ஸஹீஹுல் புகாரி, ஸுனன் அபூதாவூது)

சிலசமயம் இரு வகுப்பாரிடையே போர் நடைபெறும். அதில், தோல்வி அடைந்தவர்களின் பெண்களை வெற்றிபெற்ற பிரிவினர் சிறைபிடித்து தங்களது அடிமைகளாக்கி அனுபவிப்பார்கள். இதில் பிறக்கும் குழந்தைகளின் பெயர்கள் காலம் முழுவதும் அடிமைகளான அவர்களது தாய்மார்களின் பெயர்களுடன் சேர்த்து அழைக்கப்படும் அவமானம் இருந்து வந்தது.

அறியாமைக் காலத்தில் ஆண்கள் எவ்வித வரம்புமின்றி பல பெண்களை மணந்து கொண்டனர். இஸ்லாம் அதை தடுத்து நான்கு பெண்களுக்கு மேல் மணமுடிக்கக் கூடாது என வரையறுத்தது. மேலும், இரு சகோதரிகளை ஒரே காலத்தில் மணந்து கொண்டனர். தங்களது தந்தை இறந்துவிட்டால் அல்லது விவாகரத்து செய்துவிட்டால் அவன் மனைவியை (மாற்றாந்தாயை) மணந்து கொள்ளும் பழக்கமும் அவர்களிடையே காணப்பட்டது. இவ்விரண்டையும் இஸ்லாம் தடை செய்தது. (பார்க்க அல்குர்ஆன் 4 : 22, 23). அவ்வாறே விவாகரத்து செய்வதில் குறிப்பிட்ட முறை எதுவுமின்றி விரும்பிய நேரத்தில் தலாக் (விவாகரத்து) கூறி விரும்பிய நேரத்தில் மனைவியரை திரும்ப அழைத்துக் கொண்டனர். இதை தடை செய்து மூன்று முறைக்கு மேல் இவ்வாறு செய்யலாகாது என இஸ்லாம் வரையறுத்தது. (ஸுனன் அபூதாவூது)

சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் விபசாரம் பரவியிருந்தது. சிலர் மட்டும் இந்த இழிசெயலை வெறுத்து கௌரவத்துடன் வாழ்ந்தனர். அடிமைப் பெண்களின் நிலைமை சுதந்திர பெண்களின் நிலைமையைவிட மிக மோசமாக இருந்தது. அந்த அறியாமைக்கால மக்களில் பெரும்பாலோர் விபசாரத்தை ஒரு குற்றச் செயலாகவே கருதவில்லை.

இது குறித்து நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் ஒரு மனிதர் எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! இன்னவன் என் மகனாவான். அறியாமைக் காலத்தில் நான் அவனது தாயுடன் விபசாரம் செய்துள்ளேன் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இஸ்லாமிய மார்க்கத்தில் இவ்வாறான உரிமைக் கோரலுக்கு வாய்ப்பில்லை. அறியாமைக் கால செயல்களெல்லாம் முடிந்துபோய் விட்டன. இப்போது குழந்தை அதனுடைய தாயின் கணவனையே சாரும். விபசாரம் புரிந்தவனைக் கல்லால் எறிந்து கொல்லப்படும்” என்று கூறினார்கள். (ஸுனன் அபூதாவூது)