பக்கம் - 43 -
அவர்களிடமிருந்த தர்ம சிந்தனையின் விளைவாக மது அருந்துவதை பெருமைக்குரியதாக கருதினர். அது ஒரு சிறப்பான செயல் என்பதற்காக அதனை அவர்கள் நேசிக்கவில்லை. மாறாக, மது அருந்துவது தர்மம் செய்வதற்கான ஒரு வழியாக இருக்கிறது. செல்வத்தை வாரி இறைப்பதை மனதிற்கு எளிதாக்குகிறது என்பதால் அதை நேசித்தனர். அதனாலேயே திராட்சைக் கொடிக்கு ‘கரம்’ (கொடை) என்றும் அதிலிருந்து பிழியப்பட்ட மதுவுக்கு ‘பின்துல் கரம்’ (கொடையின் புதல்வி) எனவும் பெயரிட்டிருந்தனர். எனவேதான், மது அருந்துவதை பெருமைப்படுத்தியும் புகழ்ந்தும் பல அரபுக்கவிதைகள் அறியாமைக் காலத்தில் இயற்றப்பட்டதை நாம் பார்க்கிறோம்.

இதுபற்றி அன்தரா இப்னு ஷத்தாத் அல் அபஸீ தனது கவிதைத் தொகுப்பில் கூறுகிறார்:

“மதிய வேளைக்குப் பின் வடிகட்டியுடன் உள்ள
மஞ்சள் நிறக் கண்ணாடி கெண்டியிலிருந்து
அடையாளமிடப்பட்ட தெளிவான கண்ணாடிக் கிண்ணத்தில் ஊற்றி
இடக்கையால் மது அருந்தினேன்.
நான் குடித்தால் என் செல்வங்கள் அனைத்தையும் வாரி இறைப்பேன்.
ஆனால் எனது கண்ணியத்தை கரைபடியாது காப்பேன்.
மது மயக்கம் தெளிந்த பின்னும் வாரி வழங்குவதில் ஒரு குறையும் வைக்கமாட்டேன்.
இத்தகைய என் பண்பாடும் பெருந்தன்மையும் உனக்குத் தெரிந்ததே!”

சூதாடுவதையும் தங்களது கொடைத்தன்மையின் வெளிப்பாடாக அவர்கள் கருதினார்கள். ஏனெனில், சூதாட்டத்தில் வெற்றி பெறுபவர், தான் செலவிட்டதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதத்தை ஏழை, எளியோருக்கு கொடுத்து விடுவார். இதனாலேயே மது அருந்துவதிலும் சூதாடுவதிலும் எப்பலனுமே இல்லை என்று குர்ஆன் மறுக்கவில்லை. மாறாக, அதன் பலனைவிட அதன் தீய விளைவுதான் அதிகம் என்று கூறுகிறது.

(நபியே!) மதுவைப் பற்றியும் சூதாட்டத்தைப் பற்றியும் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: “அவ்விரண்டிலும் பெரும் பாவங்களும் இருக்கின்றன மனிதர்களுக்குச் சில பயன்களும் இருக்கின்றன. ஆனால், அவற்றிலுள்ள பாவம் அவற்றின் பயனை விட மிகப் பெரிது.” (அல்குர்ஆன் 2 : 219)

2) ஒப்பந்தங்களை நிறைவேற்றல்: அவர்கள் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதிலும் வாக்குகளைக் காப்பாற்றுவதிலும் மிக உறுதியாக இருந்தனர். தங்களது பிள்ளைகள் கொலை செய்யப்பட்டாலும் தங்களது வீடுகள் தகர்க்கப்பட்டாலும் அது குறித்து சிறிதும் இலட்சியம் செய்யாமல் தங்களது ஒப்பந்தத்தை நிறைவேற்றினர். இதற்கு ஹானி இப்னு மஸ்வூத் ஷைபானி, ஸமவ்அல் இப்னு ஆதியா போன்றவர்களின் சம்பவங்கள் சான்றாகும். (இதிலுள்ள ஹானியின் சம்பவம் ‘ஹீரா நாட்டில் ஆட்சி’ என்ற தலைப்பில் சென்றுள்ளது.)

அடுத்து ஸமவ்அல் இப்னு ஆதியா பற்றிய சம்பவமாவது: ஸமவ்அலிடம் இம்ரவுல் கைஸ் சில கவச ஆடைகளை அமானிதமாகக் கொடுத்திருந்தார். ‘ஹாஸ்’ என்ற கஸ்ஸானிய மன்னன் அதனை அபகரிக்க நாடினான். ஸமவ்அல் தீமாவிலுள்ள தனது கோட்டையில் தஞ்சம் புகுந்தான். அவருடைய பிள்ளைகளில் ஒருவர் கோட்டைக்கு வெளியில் மாட்டிக்கொண்டார். அவரை மன்னன் ஹாஸ் பணயமாகப் பிடித்துக்கொண்டு கவச ஆடைகளை கொடுக்காவிட்டால் பிள்ளையைக் கொன்று விடுவேன் என மிரட்டினான். ஸமவ்அல் கொடுக்க மறுத்து தன் கண்ணெதிரே தன் பிள்ளை கொல்லப்படுவதையும் சகித்துக்கொண்டார்.